புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
பாமரனின் பகிரங்க பக்கம்

பாமரனின் பகிரங்க பக்கம்

“யாரைத் தான் நம்புவதோ...?

அவர் முக்கியமான ஒரு பிரமுகர். பலருக்கும் அறிமுகமான ஒரு முக்கிய புள்ளி

பேசிப் பேசியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்

எனது நண்பர் ஒருவரின் நூல் வெளியீட்டு விழாவில் இவர் தான் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டார்.

அருமையாகப் பேசினார்.

ஆதாரங்களை அள்ளி வைத்துப் பேசினார்.

இதனால் சபையோரின் கைத்தட்டலையும் அள்ளிக் கொண்டார்.

ஆனாலும்,

அப்படிப் பேசியதற்காக நண்பரிடமிருந்து இவர் பணம் எதையும் வாங்கவில்லையாம்.

நூலை அச்சிட்டு வெளியிட்ட அச்சக உரிமையாளர்தான் அவரை ஏற்பாடு செய்து கொடுத்தாராம்.

அந்த அச்சக உரிமையாளருக்கும் நான் குறிப்பிட்ட பிரமுகருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.

அண்டலைன் பண்ணிக் கொள்ளுங்கள் நெருங்கிய நட்பு இருந்தது.

அப்படியானால் இப்போது இல்லையா?

“இருந்தது” என்று சொன்னால்,

இப்போது “இல்லை” என்றுதானே பொருள்.

காரணம்,

அது தானே இந்த வார “டொபிக்”

மேலே குறிப்பிட்ட அந்த அச்சக உரிமையாளரின் அச்சகத்தில் தான் பிரமுகர் தனது அச்சுவேலைகளை எல்லாம் செய்வார்.

இதனால், அந்த அச்சகம் பிரமுகரின் வீடுபோலவே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் போவார் வருவார்

கொம்ப்யூட்டர் உள்ள பகுதிக்கு வெளியார் எவருக்கும் போக அனுமதி இல்லை

ஆனாலும், பிரமுகர் மட்டும் தாராளமாக போய் வந்தார்.

அந்த அனுமதியை அச்சக உரிமையாளர் வழங்கி இருந்ததினால், பிரமுகரும் உள்ளே சென்று, அங்கே கடமையில் இருந்த பெண் பிள்ளைகளுடன் தமாஷ் விட்டபடியே தனது வேலைகளைச் செய்து வந்தார்.

அந்தப் பகுதிக்கு பொறுப்பாக ஒரு பெண்மணி இருந்தார். பிரமுகருடைய வேலைகள் எல்லாவற்றையும் அவர் தான் முன்னின்று திறமையாக செய்து கொடுப்பார்.

உண்மையிலேயே அந்த பெண்மணி மிகவும் திறமைசாலி. அங்கிருந்தவர்களிலேயே அந்தப் பெண்மணி தான் அதி திறமைசாலி என்று சொல்லும் அளவுக்கு அந்தத் துறையில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிரமுகரும் இதைச் சொல்லி அடிக்கடி அந்தப் பெண்மணியை புகழ்ந்து வந்தார்.

இந்த பிரமுகருக்கு மனதிற்குள் ஓர் ஆசை வந்திருக்கிறது.

அது என்ன ஆசை தெரியுமா?

தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் தானும் ஓர் அச்சகத்தை நிறுவி. அதில் தன்னுடைய வேலைகளைச் செய்தால் என்ன என்ற ஆசை தான் அது.

இந்த ஆசை வந்ததும் மெல்ல மெல்ல அதற்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டார்.

அச்சத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கியாகி விட்டது.

இனி அங்கே வேலை செய்வதற்கு திறமையான ஒருவர் தேவை.

இதற்கு அந்த பெண்மணியை மனதில் வைத்துக் கொண்டுதான் இவர் எல்லாம் செய்திருக்கிறார் என்பது பிறகுதான் அந்த அச்சக உரிமையாளருக்கே புரிந்திருக்கிறது. (19ம் பக்கம் பார்க்க)

“யாரைத் தான்..... 03ஆம் பக்க தொடர்

பிரமுகர் தினமும் அங்கே வரும் போது அந்தப் பெண்மணியிடம் மெதுவாகக் கதையை விட்டிருக்கிறார்.

எப்படி?

“அச்சகம் ஒன்றை நான் செய்யப் போகிறேன். நீர் வந்தால் பெரிய உதவியாக இருக்கும்” என்று அஸ்திவாரத்தை போட்டிருக்கிறார்

ஆனால், ஆரம்பத்தில் அந்தப் பெண்மணி மசியவில்லை.

“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது பேச்சாளர் பிரமுகருக்குத் தெரியாதா என்ன.

பெண்களை மயங்க வைக்கும் ஆயுதத்தை பாவித்தார் பிரமுகர்

அது என்ன ஆயுதம் தெரியுமா?

“இவங்க தாரதை விட உமக்கு நான் நிறைய சம்பளம் தாறேன்!”

ஆயதம் அருமையாக வேலை செய்தது.

சாயாமல் இருந்த பெண்மணி அவர் பக்கம் சாய்ந்து விட்டார்.

இருப்பதை விட அதிகம் சம்பளம் தருகிறேன் என்று சொன்னால் யார் தான் மயங்கமாட்டார்கள்

பெண்மணியை அந்த அச்சகத்தில் இருந்து பிருமுகர் கழற்றி எடுத்து விட்டார்.

பல வருடங்களாக அந்த அச்சகத்தில் வேலை செய்த பெண்மணி அங்கிருந்து விலகி இப்போது பிரமுகரின் அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

பிரமுகரை நம்பி உள்ளே விட்டதற்கு நல்ல பலன் கிடைத்து விட்டது அச்சக உரிமையாளருக்கு.

தனக்கு நடந்த சம்பவத்தை அச்சகத்திற்கு வரும் முக்கியமானவர்களிடம் பிரமுகரின் “பெருந்தன்மையைச் சொல்லி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அச்சக உரிமையாளர்.

இப்போதெல்லாம் அந்த அச்சகத்தின் பக்கமே போவதில்லையாம் பிரமுகர்.

தேனும் பாலும் போல் இருந்த இருவரும் இப்போது வேப்பங்காயும் பாகற்காயும் போல் இருக்கிறார்களாம்.

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்! என்று பாடத்தான் தோன்றுகிறது.

வஞ்சகம் இல்லாத பேனா அடுத்த வாரமும் சஞ்சாரம் செய்யும்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.