புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

தொடங்கும் முன் முடிந்த சிரிய அமைதிப் பேச்சு

தொடங்கும் முன் முடிந்த சிரிய அமைதிப் பேச்சு

நடு ஆற்றில் துடுப்பு முறிந்து விட்டால் முறிந்ததை பார்க்காமல் தொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. உடைந்து விடும்! பின்னர் கரை சேர முடியாமல்போய்விடும். நல்ல உபதேசம் சொல்வதென்றால் முதலில் முறிந்த துடுப்பை சரி செய்துவிட்டு தொடுத்தால் குறைந்தது கரைசேரும் நம்பிக்கையாவது வரும்.

தலைகால் புரியாமல் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தையும் இப்படித்தான் நடு ஆற்றில் துடுப்பு முறிந்த கதையாகிவிட்டது. கரை சேர இருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை நினைத்துத் தான் இப்போது அந்த பேச்சுவார்த்தை இடைறுத்தப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் எப்படி பேச்சுவார்த்தையை தொடங்குவது என்றே தெரியாமல் தான் ஐ.நா. மன்றம் சிரிய அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. அதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2254 தீர்மானம் கடந்த மாதம் கொண்டுவரப்பட்டது. அது வெறுமனே கறுப்புக் பலகையில் வெள்ளை சொக்பீஸால் எழுதப்பட்டது போல் யார் வேண்டுமானாலும் அழிக்க முடியுமான தீர்மானமாகத் தான் இருந்தது. எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை.

எனவே, சிரியாவில் அமைதியொன்றை கொண்டுவருவோம் வாருங்கள், என்று ஐ.நா. சிரிய அரச தரப்பையும் அரச எதிர்ப்பாளர்களையும் அழைத்த போதே, வெறுமனே குருட்டு நம்பிக்கையிலான ஒரு முயற்சி போலத்தான் இருந்தது. ஏனென்றால் சிரிய பிரச்சினை என்பது அப்படி லேசாக தீர்க்க முடியாமான பிரச்சினையாக இன்றைய சூழலில் இல்லை.

அடம்பிடிக்கும் குழந்தையை வெறும் வாய்ப்பேச்சால் சமாளிக்க முடியாது. அதனை கையாளவேண்டிய பாணியே வேறு. சிரியாவும் இப்போது அடம்பிடிக்கும் குழந்தை என்பதை இந்த பேச்சுவார்த்தையின் கட்டமைப்பு புரிந்துகொள்ளவில்லை.

ஆரம்பத்தில் யாரை அழைப்பது என்பதில் இரு தரப்பும் ஒத்துப்போகவில்லை. பின்னர் பேச்சுவார்த்தைக்கு வருவதில் இழுத்தடிப்பு, ஆரம்பிப்பதில் இழுத்தடிப்பு. பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கே ஆயிரெத்தெட்டு நிபந்தனைகள். கடைசியில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததா, இல்லையா என்பது தெரிவதற்குள்ளேயே பேச்சுவார்த்தையை இடை நிறுத்தியதாக கடந்த புதன்கிழமை சிரிய அமைதி முயற்சிக்கு என்றே ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட விசேட தூதுவர் ஸ்டபன் டி மிஸ்ரா குறிப்பிட்டார். அதாவது பேச்சுவார்த்தை தோல்வி அடையவில்லை என்றும் முடிவடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் நாங்கள் ​ெஜனீவாவுக்கு திரும்ப வர மாட்டோம் என்று எதிர்த்தரப்பு உறுதியாகச் சொல்லிவிட்டு வேலையை பார்க்கப் போய்விட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன் அரச படை முற்றுகையை கைவிட்டு பட்டினி இருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதும் வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதும் சிறை இருக்கும் அப்பாவி மக்களை விடுவிக்க வேண்டும் என்பதும் அரச எதிர்ப்பாளர்களின் நிபந்தனை. என்றபோது பேச்சு வார்த்தையில் பங்கேற்க எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் இழுத்தடித்துக் கொண்டு ​ெஜனீவா சென்றனர். பின்னர் கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மத்தியஸ்தர்களையும் சந்தித்து பேசினார்கள். ஐ.நாவும் உடனே அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்தது.

என்றாலும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பித்ததா என்பதை அரச தரப்போ எதிர்த்தரப்போ தப்பியும் ஒப்புக்கொள்ளவில்லை.

என்றாலும் ஜனாதிபதி பஷீர் அல் அஸாத்தின் ஆட்கள் முன் கூட்டியே ​ெஜனீவாவில் ஆஜராகி இருந்தனர். அதாவது நாங்கள் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று பம்மாத்து காட்டவே அரச தரப்பு இந்த வேலையை செய்தது அதன் குறும்புத்தனங்களை பார்த்தால் புரியும். ஏனென்றால் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் சூழல் ஏற்பட்டபோதே அஸாத்தின் படை பேச்சுவார்த்தையை விடவும் யுத்த களத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்தது.

சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் அலப்போ. இங்கு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி மீது ஷியா ஆயுததாரிகளையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாரியதொரு இராணுவ நடவடிக்கை பேச்சுவார்த்தைக்கு இணையாக சம காலத்தில் அரச படை ஆரம்பித்தது. அதில் ரஷ்ய வான் தாக்குதல்கள் தான் தீவிரமாக இருந்தது.

சிரியாவில் எப்போது உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானதோ அப்போதில் இருந்து அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் நகரின் கிழக்குப் பக்கமாக துருக்கி எல்லை இருக்கிறது. எனவே கிளர்ச்சியாளர்களுக்கு நகரை தக்கவைத்துக் கொள்ள துருக்கி விநியோகப் பாதை சாதகமாக இருந்தது.

எனவே இந்த விநியோப் பாதையை துண்டித்து கிளர்ச்சியாளர் பகுதியை முற்றுகையிடும் இலக்கோடுதான் அரச படை அங்கு பாரிய தாக்குதலை ஆரம்பத்திருக்கிறது. கடந்த சில தினங்களில் அரச படை அலப்போவை ஒட்டிய சிறிய நகரங்களிலும் முன்னேற்றம் கண்டது.

மறுபக்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கிளர்ச்சியாளர் முற்றுகையில் இருந்த இரு கிராமங்களையும் அரச படை பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலத்தில் விடுவிக்க முடிந்திருக்கிறது. இப்படி சிரியாவின் அஸாத் படை முன்னேற ரஷ்யா தன் பங்குக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது. ரஷ்ய போர் விமானங்கள் கடந்த ஒரு வாரத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் மீது 300க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தி சிரிய படை முன்னேற உதவி இருக்கிறது. அதேபோல பேச்சுவார்த்தையை குழப்ப பங்காற்றியது.

எனவே இந்த சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்தால் அதனை மீண்டும் ஆரம்பிக்க முடியாமல் முறிந்து விடும் என்ற பயத்திலேயே ஐ.நா. அதனை ஒத்திப் போட்டது.

“பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யுத்த களத்தில் அதற்கு எதிரான விடயங்களே நடக்கின்றன. ஒரு சிறந்த நிலைக்காக தாக்குதல்களை அதிகரிக்கிறார்கள்” டி மிஸ்ரா கவலைப்படுகிறார்.

ஆனால் பேச்சுவார்த்தை தோற்றதற்கு காரணம் அரச எதிர்ப்பாளர்களின் பின்னால் இருக்கும் சவூதி அரேபியா, துருக்கி, கட்டார் நாடுகள் என்று அரச தரப்பு பழியைப் போடுகிறது. இப்போது யுத்த களத்தில் அஸாத் அரசு ரஷ்யாவுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகளுக்கும், ஈரானுக்கும் நன்றி சொல்ல வலுவான நிலையில் இருக்கிறது. உறுதியான கட்டமைப்பு இல்லாமல் சிதறிப்போயிருக்கும் கிளர்ச்சியாளர்கள் பலவீனமான நிலையிலேயே இருக்கிறார்கள். பதிலாக இரண்டும் கெட்ட இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவும், அல் கொய்தாவின் கிளையான அல் நுஸ்ரா முன்னணியுமே பலம்பெற்று இருக்கின்றன.

எனவே, அரச தரப்பை பொறுத்தவரை அமைதிப் பேச்சுவார்த்தையில் மாட்டிக் கொண்டு இருப்பதை இழப்பதை விட தொடர்ந்து சண்டை போட்டு நினைத்ததை சாதிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. பலவீனமான நிலையில் இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தை மேசையில் காட்டி விட்டுக் கொடுப்புகளை செய்ய அரச எதிர்ப்பாளர்கள் தயாரில்லை. எனவே ஒரு சமநிலைப் போக்கு இல்லாத சூழலிலேயே அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்று அதனை சரி செய்ய கிளர்ச்சியாளர்களின் பக்கத்தை பலப்படுத்துவதற்கு அதற்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவும் சவூதி உட்பட நாடுகளும் யுத்த களத்தில் செயற்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பேச்சுவார்த்தைக்கு முன் ரஷ்யாவை கட்டுப்படுத்த ஏதாவது அழுத்த கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே செய்யாமல் அமெரிக்கா மழுப்பலான அறிவிப்புகளை நாள் தோறும் விடுத்து வருகிறது.

அதாவது சண்டை பிடிக்கும் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் சமாதானம் பேசுவது போன்ற சரளமான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையாக நினைத்து சிரிய அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்தால் படு தோல்வி நிச்சயம். சிரிய பிரச்சினைக்குள் பல சர்வதேச பிரச்சினைகள் ஒளிந்திருக்கின்றன. அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஒரு சராசரி பேச்சுவார்த்தை போதாது.

எஸ். பிர்தெளஸ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.