புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
பெரும்பான்மையினத்தவர்களுக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் முஸ்லிம்களுக்கும்

பெரும்பான்மையினத்தவர்களுக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் முஸ்லிம்களுக்கும்

அவ்வாறு அமைந்தால் புதிய அரசியலமைப்பிற்கு எமது சமூகம் பூரண ஆதரவை வழங்கும்

நல்லாட்சியில் முஸ்லிம் சமய கலாசாரத்துறை அமைச்சின் முன்னெடுப்பு பற்றிக் கூறுவீர்களா?

இந்த முஸ்லிம் சமயம் கலாசாரத் துறை அமைச்சு ஆரம்பிக்கப்பட்ட சூழல் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமானது. கடந்த கால ஆட்சிக் காலம் புனித மார்க்க விடயமான ஹஜ் விவகாரம் கூட நீதி மன்றம் சென்றதால் அதன் வழக்குகள் இன்னும் முடிந்த பாடு இல்லை, பள்ளிவாசல்களைப் பதிவு செய்ய முடியாத நிலை, சில தீய சக்திகளின் கெடுபிடிகள் போன்றவற்றால் அல்லலுற்றுக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தை மிக இலகுவில் நாங்கள் மறந்து விடமுடியாது. கடந்த 20 வருடங்களாக இவ்வாறான அமைச்சு ஒன்று இருக்க வில்லை. அப்பொழுது இருந்ததை இல்லாமற் செய்திருந்தார்கள். இந்தப் புதிய நல்லாட்சியில்தான் முஸ்லிம்களுடைய தேவைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குப் புதிய முஸ்லிம் சமயம் கலாசார அமைச்சு உருவாக்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த பெரும் கௌரவமாகும்.

இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன் எமது சமூகத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் பல வேலைத் திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம்.

அவ்வாறாயின் நீங்கள் கடந்த ஒரு வருடத்தில் எவ்வகையான வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளீர்கள்?

"இஸ்லாமியர்களின் முன்னுரிமை சமய நிகழ்வொன்றான ஹஜ் யாத்திரையை நாங்கள் முதன் முதலில் கவனத்தில் எடுத்தோம். அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணிப்புச் செய்தல், ஹஜ் முகவர்களாகவுள்ள 143 நிறுவனங்களிலிருந்து நேர்முகப் பரீட்சை ஒன்றை நடத்தி தகுதிவாய்ந்த முகவர்கள் 93ஐத் தெரிவு செய்து ஹஜ் யாத்திரிகர்கள் 2240 பேர் செல்வதற்கு வினைத்திறன் சேவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலதிகமாக ஹஜ் யாத்திரிகர்கள் செல்வதற்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை நீதி அமைச்சுக்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்த காதி நீதிமன்றங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் இந்த அமைச்சின் கீழ் பொறுப்பளிக்கப்பட்டிருப்பதுடன் இது வரை காலமும் காணப்பட்ட 13 நீதிமன்றக் கட்டடங்களுக்கு மேலதிகமாக புதிதாக அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிய நீதிமன்றக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிர்மாணிப்புக் கருத்திட்டத்திற்கென மதீப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை 4,865,600.00 ஆகும். 2015 ஜுலை மாதம் 31 ஆம் திகதி அளவில் ரூபா 1,092,338.58 ஆன தொகை இதற்கென செலவிடப்பட்டிருப்பதுடன் அன்றைய தினம் வரை கட்டடத்தை நிர்மாணிக்கும் பணி சம்பந்தமான பௌதிக முன்னேற்றம் சுமார் 60 விகிதமாகும்.

காதி முறையீட்டு சபை அங்கத்தவர்கள் மற்றும் காதி நீதவான்களின் கொடுப்பனவுகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை முறைப்படுத்தல். மேன்முறையீட்டு சபை அங்கத்தவர்கள் 5 பேருக்கும் நீதிபதிகள் 65 பேருக்கும் இந்தக் கொடுப்பனவைச் செலுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 9,744000 ஆன தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன் கொடுப்பனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக, 2015 ஆம் ஆண்டு அமைச்சரவையில் அமைச்சரவை விஞ்ஞாபனம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்த அரபுக் கல்லூரிகளைக் கூட்டிணைப்பது பற்றி தனியார் உறுப்பினர்களின் சட்ட மூலங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல், முஸ்லிம்களின் நோன்பு காலப் பகுதியில் அவர்களுக்கு பேரீத்தம் பழங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஒருங்கிணைப்புச் செய்து பின்னாய்வு செய்வதன் மூலம் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளைத் திருப்திகரமாகச் செய்ய முடிந்தமை, பள்ளிவாசல்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள், அஹதிய்யா அறநெறிப்பாடசாலைகள் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் விநியோகிக்கும் நடவடிக்கைள் சம்பந்தமாகத் திணைக்களத்துடன் இணைந்து அவற்றை ஒருங்கிணைப்புச் செய்தல், கண்காணிப்புச் செய்தல், மேற்படி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள தேவையான ஆறிவுரைகளை வழங்குதல் மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல். மீலாதுன் நபி நிதியத்துக்கு 14.00 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிவாசல்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மீலாத் தின நிகழ்வுளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக திட்டமிட்டு செயற்படுத்தப்படுவதில்லை. அது இம்முறைதான் ஒழுங்கான முறையில் சகல நிதிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று என்னால் கூற முடியும்.

இவை தவிர முஸ்லிம் மக்களுடைய ஒற்றுமை, அவர்களது பிரச்சினை பற்றி விளக்கம், அவர்களது பாதுகாப்பு அவர்களது வாழ்விடங்களில் அவர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள், அவர்களை மார்க்க விடயங்களை பின்பற்றவும் அவர்களுடைய பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்குதல் போன்றவற்றை செயற்படுத்துவதோடு மட்டுமல்ல முஸ்லிம் தனித்துவமாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்கின்ற எண்ணப்பாங்குடன் நான் செயலாற்றி வருகின்றேன். ஒரு வருட குறுகிய காலத்திற்குள் பல எண்ணற்ற சேவைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளோம் என்று என்னால் கூறலாம்"

"இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் சகலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற நிலையில் முஸ்லிம் மக்களும் எவ்வாறான முன்மொழிவுகள் அரசியமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?"

"புதிய அரசியமைப்பின் யாப்புத் திருத்தம் என்பது நல்லாட்சி எடுத்துள்ள துணிச்சலான விடயமாகும். ஜனநாயகப் பாதைக்கு மீண்டும் திரும்பிச் செல்லல் போன்ற அம்சங்களைக் கொண்டன. இது பொருளாதார சுபீட்சம் தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் 2015 புதிய ஒழுங்கு முறை மேலெழுந்து வருகின்றது. காலாகாலமாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் வரலாற்றை சில தீய சக்திகள் திரிவுபடுத்தி எழுதிக் கூறிவருகின்றனர். முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் நீண்டதொரு வரலாறு உண்டு என்பதை நீருபிப்பதற்கும் சாதாகமான நிலை தோன்றியுள்ளது. இந்த நாட்டின் சனத்தொகையின் விகிதாசார முறைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், மாகாண. சுபை உள்ளூராட்சி மன்றம் ஆகிய அனைத்து மட்டத்திலும் உறுதிப்படுத்தப்படும் தேர்தல் முறைமை அவசியமாக இருத்தல் வேண்டும். அதேவேளை எல்லை நிர்ணயம் உறுதியாக இருக்க வேண்டும். மொத்தத்தில் முஸ்லிம் மக்களையும் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கக் கூடிய அரசிலமைப்பொன்று அவசியமாகும். குறிப்பாக பெரும்பான்மை இன சமூகத்திற்கு உள்ள உரிமைகளும் சலுகைகளும் எமது முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அது அமைய வேண்டும்.

கடந்த காலத்தில் யாப்புத் திருத்தங்கள் நடபெற்ற போதிலும் கூட பொது மக்களுக்கு அது தொடர்பான தெளிவுகளோ அல்லது விளக்கங்களோ வழங்கப்பட வில்லை. ஆனால் இம்முறை எல்லா மக்களுடைய அபிப்பிராயங்களையும் உள்வாங்கிக் கொண்டு மேற்கொள்ளப்படும் யாப்புத் திருத்த முறை எல்லோராலும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. ஆனாலும் இது தொடர்பாக முஸ்லிம்கள் எந்தளவு கரிசனையுடன் கவனத்தில் கொண்டு இருக்கின்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே நான் பார்க்கின்றேன்.

"நீங்கள் அஞ்சல் துறை அமைச்சராகவும் இருகின்றீர்கள். இதன் முன்னெடுப்புக்கள் தொடர்பாக கூறுவீர்களா?"

"வினைத்திறன் மற்றும் விளைதிறன் மேம்பாட்டடை முக்கியமாகக் ெகாண்டு சகல சேவை களையும் மேற்கொண்டு வருகின்றோம். விரிவான முறையில் மக்களை அறிவூட்டுவது மற்றும் அவர்களது நாளாந்தம் மாற்றமடைகின்ற தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ற சேவைகைள அஞ்சல் ஊடாக நிறைவேற்றுதல், ஊக்குவித்தல் மற்றும் அதன் மூலம் அஞ்சல் வருமானத்தை அதிகரித்தல் போன்ற நோக்கில் 2015 ஆம் ஆண்டில் திணைக்களத்தில் செயல் ரீதியிலான நிகழ்ச்சித் திட்டங்ககளை அமுல்படுத்தி வந்துள்ளோம். தொலைத் தொடர்பு சந்தையில் உருவாகியுள்ள போட்டித் தன்மைக்கு முகம்கொடுத்தல், செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளல் மற்றும் பொது மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய மட்டத்தில் பேணிவருவதற்காக அதற்கு ஏற்றவாறு கட்டணங்களைத் திருத்தியமைக்கவும், பேணிவருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசாங்கத்திற்கு சுமையாக அமையாதவாறு நிறுவனத்தைப் பேணிவருவதை நோக்காகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான புதிய சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளோம்.

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவுவதற்காக உங்களுடைய அமைச்சினால் ஒரு நாள் சம்பளத்தை ஜனாதிபதியிடம் கையளித்தமை தொடர்பாக ஊடகங்கள் வியந்து பாராட்டின. இந்த முயற்சி பற்றி கூறமுடியுமா?

"இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்தவகையில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு மற்றும் அதன் உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் தேசிய சிறுநீரக நோயாளிகளுக்கு உதவி அளிக்கும் வகையில் சகல ஊழியர்களும் ஒருநாள் சம்பளத்தை வழங்கி மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு சூழலுக்கியைவான பசுமைப் புரட்சிக்கு உதவியை நாங்களும் செய்துள்ளோம். எங்கள் அமைச்சின் கீழ் உள்ள தபால் மற்றும் முஸ்லிம் சமயம் கலாசாரம் அலுவல்கள் திணைக்களத்தின் சுமார் 20000 ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்கி வைத்தனர். ரூபா 9,609885.53 காசோலையை ஜனாதிபதி செலயகத்தில் வைத்து 11-12-2015 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தோம்.

நேர்காணல்: இக்பால் அலி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.