புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
இந்திய குடியரசு தினம் நாளை; தலைநகர் புதுடில்லி விழாக்கோலம்

டில்லியில் வரலாறு காணாத ஏழு அடுக்கு பாதுகாப்பு

இந்திய குடியரசு தினம் நாளை; தலைநகர் புதுடில்லி விழாக்கோலம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறப்பு விருந்தினர்

இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாளை 26ம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மூன்று நாள் பயணமாக இன்று 25ஆம் திகதி காலை இந்தியா வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகையையொட்டி டில்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலை நகர் டில்லியில் ஏழு அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணி வகுப்பு நடைபெறும் ராஜபாதை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. வான்வழித்தடங்களை கண்காணிக்க சிறப்பு ரேடார் வசதி செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள உயரமான 71 கட்டிடங்களை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று 27ம் திகதி தாஜ்மஹாலைக் காண குடும்பத்தினருடன் ஒபாமா ஆக்ரா செய்வதையொட்டி அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான “தூய்மை இந்தியா” திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பங்கேற்கிறார். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பையும் உணர்ந்துள்ள ஜனாதிபதி ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலை பார்வியிட வரும் அதிபர் ஒபாமாவின் பாதுகாப்புக்காக, 100 அமெரிக்க வீரர்களும், 4,000 இந்திய வீரர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதே வேளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்தியப் பயணத்தின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் மிக மோசமான பின்விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.