புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
யாழ்.தேவியில்

யாழ்.தேவியில்

ஓர் இனிய பயணம்

சீது 1902 ஆம் ஆண்டாகும். அவ்வருடமானது யாழ்ப்பாண மக்களின் முகத்தில் புன்சிரிப்பு தோன்றிய ஆண்டாகும். யாழ்ப்பாணத்துக்கென்று ஒரு புகையிரதம் போக்குவரத்தில் ஈடுபட்டமையே இதற்குக் காரணமாகும். அன்றிலிருந்து நாள்தோறும் யாழ்ப்பாணத்துக்கு புகையிரதச் சேவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியர் காலத்தில் பொருட்களை கொண்டு செல்வதற்கு முதலிடம் கொடுத்து புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் சுதந்திரம் கிடைத்ததும் மக்கள் போக்குவரத்திலும் புகையிரதம் பெரும் துணையாயிருந்தது. யாழப்பாணத்துக்கான புகையிரத சேவை ஆரம்பித்து சரியாக 54 வருடங்களுக்குப் பின் அதாவது 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மற்றொரு மணமகள் வடக்கிற்கு உறவினர்களைப் பார்க்க வந்தது. அது தான் யாழ் தேவியாகும். யாழ்தேவி இச்சேவையை தனியாக ஆரம்பிக்கவில்லை. ஒரு யாழ் தேவி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் போக மற்றொன்று யாழ்ப்பா ணத்திலிருந்து கொழும்புக்கு வந்தது. அது அப்பாயணத்தை தொடர்ந்து 27 வருடங்கள் கொண்டு நடத்தியது.

அதிலிருந்து வடக்கே புலிகளால் யாழ். தேவி பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முறை புலிகளால் ஓமந்தையில் இலக்கு வைத்த குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. மற்றுமொரு தாக்குதல் வியாங்கொடையில் இடம்பெற்றது. ஆனாலும் அத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் யாழ்தேவி தனது சேவையை ஆற்றுவதில் வெற்றி கண்டது.

ஆனால் 1983ஆம் ஆண்டு அதன் பயணம் வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 6 வருடங்கள் அதன் பயணம் வவுனியா வரை மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. 1989 ஆம் ஆண்டு மீண்டும் தனது சேவையை ஆரம்பித்தது. என்றாலும் அது மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்தது.

1989 ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ் தேவி கடைசியாக யாழ்ப்பாணத்துக்குச் சென்றது. அதுவே அதன் கடைசி பயணமாகும். இதுவரை வடக்கு - தெற்கை இணைத்து வைத்த யாழ்தேவி மீண்டும் பயணம் செய்யவில்லை. யாழ்தேவியின் பயணமானது சுமார் 25 வருடங்களாக வவுனியாவுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. அக்கால கட்டத்துள் யாழ் தேவியானது பனைமரத் தோப்புக்கப்பால் நின்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டதன் பின்பு பின்பு மீண்டும் யாழ்தேவி படிப்படியாக முன்னேறிச் சென்றது. முதலில் தாண்டிக்குளம் வரை பயணம் செய்தது. பின்பு ஓமந்தை வரை பயணித்தது. அதன் பின்பு கிளிநொச்சி வரை சென்றது. இப்போது யாழ்தேவி பளை வரை பயணம் செய்கின்றது. மிக விரைவில் மீண்டும் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு பயணத்தை மேற்கொள்ளும்.

யாழ்தேவியின் இறுதிப் பயணம் பற்றி பரிசீலனை செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகையிரத அதிகாரிகள் புகையிரதம் மூலமாகவே யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். யாழ்தேவி 25 வருடங்களுக்குப் பின்னர் தனது முதற் பயணத்தை ஆரம்பிக்க முன் அது பயணம் செய்யப் போகின்றது என்ற செய்தி வடபகுதி மக்களின் காதுகளில் இனித்தது.

சென்ற ஞாயிற்றுக் கிழமை (21) மதியம் கொழும்பிலிருந்து பயணத்தை மேற்கொண்ட யாழ்.தேவி அன்றைய தினம் அநுராதபுரத்தில் ஓய்வெடுத்து அடுத்த நாட்காலை மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. ஓமந்தை வரை சாதாரண பயணத்தை மேற்கொண்டு அதிலிருந்து அதி வேகமாக தனது பயணத்தை ஆரம்பித்தது. யாழ்தேவி இதற்கு முன் இந்தளவு வேகத்தில் பயணித்ததில்லை. ஒரு மணித்தியாலயத்துக்கு 100 கி.மீ. வேகத்தில் தன்னையறியாமலேயே பயணத்தை மேற்கொண்டது. எவ்வித தளம்பல்களைக் கூட காண முடியாதிருந்தது. பளை வரை நிறுத்தாது பயணம் செய்த யாழ்தேவி அங்கு கொஞ்ச நேரம் தாமதித்தது. அங்கே அப்பயணத்தில் மற்றும் சில உயர் பிரமுகர்கள் ஒன்றிணைய இருந்ததே இதற்குக் காரணமாகும்.

25 வருடங்களுக்குப் பின் பயணம் செய்யும் யாழ்தேவியின் இப்பயணத்துக்கு வாழ்த்து கூறி அதனோடு ஒன்றிணைய வந்திருந்த விசேட பிரமுகர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும், வடக்கே புகையிரத புனருத்தாபனத்துக்குப் பொறுப்பாக இருக்கும் இந்திய இர்கொன் கூட்டுத்தாபனத்தின் செயற்றிட்ட பணிப்பாளர் எல்.எஸ்.குப்தா அவர்களும் புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.பீ.ஆரியரத்ன, புகையிரத சேவைகள் அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக போன்ற பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள 36 கி.மீ. தூரம் வரை யாழ்ப்பாணம் உட்பட 4 பிரதான புகையிரத நிலையங்களும், 6 உப புகையிரத நிலையங்களும் அடங்கும். பிரதான புகையிரத நிலையங்களாக கொடிகாமம், சாவகச்சேரி, நாவற்குழி என்பனவும் மிருசுவில், மீசாலை, சங்கத்தானை, தச்சன்தோப்பு, எழுதுமட்டுவாள், புங்கங்குளம் போன்ற உப புகையிரத நிலையங்களும் இதனுள் அடங்குகின்றது.

அதன்படி 25 வருடங்களுக்கு முன் யாழ்தேவி கடந்து சென்ற அனைத்து புகையிரத நிலையங்களும் மீண்டும் அமைக்கப்பட்டன. பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சகல புகையிரத நிலையங்களும் இன்னும் நிர்மாணிக்கப்படும் நிலையில் உள்ளன. ஓரளவு நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அந்த அனைத்து புகையிரத நிலையங்களும் நவீன வசதிகளுடன் காணப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

25 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக வரும் யாழ். தேவியைப் பார்க்க பாதை இரு மருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். புகையிரத என்ஜினுக்குள் ஏறிக்கொண்ட டக்ளஸ் தேவானந்த அமைச்சரும் வட மாகாண ஆளுநரும் இரு மருங்கிலுமிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டே பயணம் செய்தனர். வீடுகளில் வேலை செய்து கொண்டு. சமயலறையில் இருந்த பெண்களும் தமது சிறு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு புகையிரதத்தைப் பார்க்க வந்திருந்தனர். அநேகர் யாழ்தேவியின் இந்த முதற் பயணத்தை கமராக்களில் படம் எடுத்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது. சந்தோஷ மிகுதியால் மக்கள் தமது கைகளை மேலாகவே உயர்த்தி புகையிரதத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். புகையிரதத்தை ஒரு நாளும் காணாத சிறு குழந்தைகள் போலவே இளைஞர்களும் தமது வேலைத் தளங்களிலிருந்து வெளியே வந்து இந்தப் புது விருந்தினரை வாழ்த்தினர். தமது சைக்கிள்களை நிறுத்தி வைத்துக் கொண்டு இன்னும் சில நாட்களில் நாள்தோறும் காணப்போகும் புது விருந்தினரை மிகச் சந்தோஷத்துடன் கண்டுகழித்தனர். சிரித்துக் கொண்டே வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சில இடங்களில் வாழ்த்துக்களைக் கொண்ட பதாதைகளும் காணக்கிடைத்தன.

காலை 10.36 மணியளவில் பளை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடையும் போது காலை 11.34 மணியிருக்கும். இது 25 வருடங்களுக்குப் பின்பு யாழ்ப்பாணத்துக்கு ஒரு புகையிரதம் வந்த முதற் தடவையாகும். இவ்வாறு 1 மணித்தியாலத்துக்குள் இரு மருங்கிலுமிருந்த மக்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் யாழ்தேவி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஒரு நாளும் புகையிரதத்தைக் கண்டிராத பெருந்திரளானோர் புகையிரதத்தைப் பார்க்க வந்திருந்தனர். அக்குழுவில் 30 - 35 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளும் இருந்தனர். ஒரு தாயும் மகனும் புகையிரதத்தை தமது வாழ்க்கையில் அன்று தான் கண்டிருந்தனர் அவர்கள் புகையிரதத்தில் ஏறி அதன் சுகந்தத்தை அனுபவித்தார்கள்.

பெரும்பாலானோர் புகையிரதத்தின் சகல பாகங்களையும் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்ததைக் கண்டு கொள்ள முடிந்தது.

- சாரதி நித்திரை கொண்டால் என்ன நடக்கும்?

- அதிக பயணிகள் ஏறினால் புகையிரதம் தடம் புரளுமா?

- பஸ்ஸில் போன்று புகையிரதத்தினுள்ளே டிக்கட் கொடுக்க யாருமில்லையா?

- தமக்கு இறங்க வேண்டிய இடத்தைப் பற்றி சாரதிக்கு எவ்வாறு கூறுவது?

- எல்லோரும் புகையிரதத்தினுள் எறிய பின்பு சாரதி எவ்வாறு அதைத் தெரிந்து கொள்வார்?

- பஸ்ஸைப் போல பயணிகள் நிரம்பும் வரை நிறுத்திக் கொண்டு வைத்திருப்பார்களா?

இவை அங்கு வந்திருந்த சில வாலிபப் பிள்ளைகளுக்கு எழுந்த கேள்விகளாகும். இக்கேள்விகள் நாள்தோறும் புகையிரதத்தில் பயணம் செய்யுமொருவருக்கு நகைப்பாக இருக்கும். ஆனால் இவை உண்மையிலேயே முதற் தடவையாக வடக்கிற்கு யாழ்தேவி வந்திருந்த போது வாலிபப் பிள்ளைகளுக்குள் உருவெடுத்த கேள்விகளாகும்.

அதேபோல் வயது 8 - 10 க்கு இடையிலான ஒரு சிறு பிள்ளை பாடசாலை முடிந்து யாழ்தேவி புகையிரதத்தைப் பார்க்க வந்திருந்தது. அப்பிள்ளை புகையிரதத்தில் ஏறிச் செல்ல வேண்டுமென்று அழுது புலம்பியது. அக்குழந்தையின் தந்தை பிள்ளையை தேற்ற வாங்கிக் கொடுத்த ஐஸ்கிaமைக் கூட அப்பறமாக வீசி விட்டது.

யாழ்தேவியின் இந்த பயணத்தின் நோக்கம் என்னவெனில் நிகழ்காலத்தில் புகையிரதச் சேவையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் போலவே அபிவிருத்தி தொடர்பாகவும் பரீட்சித்துப் பார்ப்பதாகும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே புகையிரதச் சேவையானது மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்றலுடன் ஆரம்பிக்க இருக்கின்றது.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி அக்டோபர் 13ஆம் திகதி இப்புகையிரதச் சேவை ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறெனினும் புகையிரதச் சேவை ஆரம்பமாக முதல் செய்து முடிக்க வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தேடிப் பார்த்து அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்குமாறு புகையிரதச் சேவை பொது முகாமையாளர் விசேட ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தார்.

யாழ்ப்பாண புகையிரத நிலையமானது 3 பிரதான மேடைகளுட்பட 7 புகையிரதப் பாதைகளையும் கொண்டுள்ளது.

அதேபோல் இந்நாட்டின் பொதுமக்களுக்கான முதல் நிலக்கீழ் சுரங்க பாதையும் மீண்டும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் அனைத்து மேடைகளிலும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகளும் டிஜிடெல் நேர அட்டவணைகளும், பெயர்ப்பலகைகளும், டிஜிடெல் கடிகாரங்களும், நவீன வசதிகளுடன் கூடிய உணவகங்களும், ஓய்வறைகள், குளிரூட்டப்பட்ட விசேட ஓய்வறைகளும், பயணிகளுக்கு தங்கும் வசதிகளைக் கொண்ட சுமார் 15 அறைகளும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் எதிர்காலத்தில் விசேட செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்படும்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் கூறுகையில் 25 வருடங்களுக்குப் பின் யாழ்தேவி புகையிரதம் வடக்கே பயணம் செய்தது வடக்குக்கு மட்டுமன்றி முழு இலங்கை மக்களினதும் மனதில் ஆனந்தக் கழிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். விசேடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு செயற்றிட்டத்தின் படி இந்திய அரசின் உதவி, ஒத்துழைப்போடு வடக்கு புகையிரத பாதையை வேகமாக அமைத்து முடித்தமை தொடர்பாகத் தான் பெருமைப்படுவதாகவும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலிருந்து கூறினார்.

31 வருட காலமாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி என்.தவானந்தன் அவர்கள் கூறுகையில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் யாழ்தேவியின் வருகையை யாழ்ப்பாண மக்கள் கெளரவத்தோடும் பெருமையோடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

25 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண புகையிரத நிலையம் இருந்ததை விட முழுமையாகவே நவீன மயமாக்கப்பட்டு நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

புகையிரத நிலையத்தில் சதோச விற்பனை நிலையமொன்றை அமைக்கும் ஒரு திட்டமும் இருப்பதாகக் கூறினார். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் யாழ்தேவி அதன் இறந்த காலத்தை முழுமையாகவே மறந்து புதியதோரு பயணத்தில் ஈடுபடப் போகின்றது. இதுவே அனைவரினதும் எதிர்பார்ப்புமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.