புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

மலையக மக்களின் அவலங்களை வெளியுலகிற்கு எடுத்துரைத்தவர் சி.வி. வேலுப்பிள்ளை

மலையக மக்களின் அவலங்களை வெளியுலகிற்கு எடுத்துரைத்தவர் சி.வி. வேலுப்பிள்ளை

மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் ஞாபகார்த்தமாக நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவில் ‘நிலைமாற்றம் பெற்றுவரும் மலைநாட்டு தமிழர்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருப்பதையொட்டி மகிழ்ச்சியடைவதுடன் இதனை ஒரு கெளரவமா கவும் கருதுகிறேன்.

தீவிர கம்யூனிச கருத்துகளில் ஈடுபாடு கொண் டிருந்த காலகட்டத்தில் பீட்டர் கெனமன், சண்முக தாசன் இருவரும் என்னை ஜனாப் அkஸ¤க்கு அறி முகம் செய்து வைத்தனர். ஒருநாள் ஜனாப் அkஸ் வீட்டில் சி.வி. வேலுப்பிள்ளையை சந்தித்திருக்கி றேன். நான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்தது தற்செயலானதொரு நிகழ்வாகும். நாவலப்பிட்டி நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்த போது என்னை ஒரு முக்கிய நகரப்பிரமுகர் அந்த மகாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது செளமியமூர்த்தி தொண்டமான், இராஜலிங்கம், இராமானுஜம் போன்ற தலைவர்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மகாநாட்டின் தலைவர், உப தலைவர், செயலாளர், போன்றோர் தெரிவுசெய்யப்பட்டபோது, முற்றிலும் எதிர்பாராத வகையில் என்னை உப செயலாளராக செளமியமூர்த்தி தொண்டான் பிரேரித்தார். நான் சுதாரித்துக் கொள்ளுமுன்னரே தேர்தல் முடிந்து அறிவித்தலும் முடிந்துவிட்டது. சற்று சங்கடத்துடன் நான் கீழே இறங்கி வந்தேன் அப்பொழுது நான் சந்தித்தவர்களில் சி.வியும் இருந்தார். என் முகத்தில் ஓடிக்கொண்டிருந்த உணர்வுகளைப் பார்த்துவிட்டு உங்களைப்போல ஒருவர் காங்கிரஸ் முக்கியஸ்தர் குழுவில் இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது என்றார். இந்த வார்த்தைகள் எனக்கு இதமாக இருந்தது. சி.வி என்னுடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

அதற்குபின்னர் சி.வியுடன் நெருங்கிப் பழகவும் பல தோட்டங்களுக்குச் செல்லவும் பேச்சுவார்த்தை களிலே இணைந்து கலந்துகொள்ளவும் பல வாய்ப்புகள் கிடைத்தன. அவருடைய இலக்கிய ஈடுபாடு கவித்துவ உணர்வுகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவருடைய கவிதைகளை எனக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் காட்டி பெருமையுடன் சொல்லியிருக்கிறேன்.

சி.வி வேலுப்பிள்ளை கவிதைகள், நாவல், கட்டுரைகள், உரைநடைச் சித்திரங்கள் என்று பல படைப்புகளைத் தந்திருக்கிறார். அவருடைய படைப்புகள் அனைத்திலும் கவித்துவம் இழை யோடுகிறது. அவர் அடிப்படையில் ஒரு கவிஞர். அவருடைய கவிதைகளை வழிப்போக்கன் என்ற புனை பெயரிலும் மற்றும் இலங்கை தேயிலை தோட்டத்திலே என்ற நூலை அவருடைய சொந்தப் பெயரிலும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘இலங்கைத் தேயிலை தோட்டத்திலே’ நூல் அவருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது.

நிலை மாற்றம் கண்டு மலைநாட்டு தமிழர்

பெருந்தோட்ட அமைப்பு

16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்திற்குப் பின்னர்தான் பெருந்தோட்ட விவசாய முறை என்பது அறிமுகமா கியது. சொந்த உபயோகத்திற்கு அல்லாமல் ஏற்று மதி செய்வதில்தான் பெருந்தோட்ட விவசாய முறையின் அடிப்படை தங்கியிருந்தது.

ஆரம்பகாலத்தில் அமெரிக்காவில் புகையிலை, பஞ்சு, அரிசி போன்றன பயிரிடப்பட்டன. பின்னர் கரும்பு, கோப்பி, கொக்கோ, மிளகு, தேயிலை, இரப்பர் போன்ற பயிர்களும் விஸ்தரிக்கப்பட்டன. பிரேஸில். கொலம்பியா, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் கரும்பு, கோப்பி என்பன அதிகளவில் பயிரிடப்பட்டன.

ஆரம்பத்தில் ஒப்பந்தங்களின் மூலம் ஐரோப்பிய தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய் வதற்குச் சேர்க்கப்பட்டாலும் அது சாத்தியப்படாமல் போகவே ஆபிரிக்க நாடுகளில் இருந்து அடிமை களை கைப்பற்றி பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டனர். அடிமைகள் எஜமான்களுடைய சாதாரண உடைமைகளைப் போல விற்கவும் வாங்கவும் முடிந்தது. வங்கியில் இருந்து கடன் பெறுவதற்குக் கூட அடிமைகள் பிணையாக வைக்கப்பட்டனர். ஏனென்றால் சிறை வாசம் இம் என்றால் வனவாசம் என்பதுபோலச் சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளாகிய அடிமைகளின் அவலநிலை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பாவிலும் இது பரவியது அடிமை நிலைக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது. படிப்படியாக இது அடிமை முறை ஒழிப்புச் சட்டங்களுக்கு வழி வகுத்தது.

அடிமை முறைக்கு எதிரான சட்டம்

1833ம் ஆண்டு அடிமை முறைக்கு எதிராக சட்டம் இயற்றி பிரித்தானியா இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து இதர ஐரோப்பிய நாடு களும் அடிமை முறையை தடை செய்தன. இதற்குப் பிறகுதான் சீனாவிலிருந்து ஒரு சிறு தொகையினரும் பெருமளவு இந்தியாவிலிருந்தும் ஒப்பந்த மூலம் தொழிலாளர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், ஒல்லாந்து ஆகிய காலனித்துவ நாடுக ளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் தொடர்ச் சியாக மொரிசியஸ், தென்னாபிரிக்கா, ரியூனியன், பீஜி தீவுகள் மற்றும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் பெருந்தோட்ட முறை விஸ்தரிக் கப்பட்டது.

ஒப்பந்த கூலிமுறை நவீன அடிமைத்தனமா?

ஹியூடிங்கர் என்ற பிரபல சமூகவியல் விஞ்ஞானி இந்த ஒப்பந்த முறைபற்றி இது ஒரு நவீன அடிமைத்துவம், அதாவது இது 20ம் நூற்றாண் டின் அடிமைத்துவம் என்று எழுதியுள்ளார். அதாவது ஆபிரிக்க அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட்டார்களோ அதே முறையில்தான் ஒப் பந்த தொழிலாளர்களும் நடத்தப்படுகிறார்கள் என்ற கருத்தை முன்வைத்து அவர் இந்த நூலை எழுதியுள்ளார்.

ஒப்பந்தம் இந்திய அரச நிறுவனத்திற்கும் காலனித்துவ நாடுகளின் ஒப்பந்த மூலம் தொழிலா ளர்களைத் திரட்டுபவர்களுக்கும் இடையே செய்து கொண்ட உடன்பாடாகும். இதில் பல அம்சங்கள் இருந்தன. இதில் ஒரு அம்சம் குறிப்பிட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழிலாளர்களுக்கு கப்பல் கட்டணம் செலுத்தி திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதாகும். சிலர் தாங்களாகவே மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பின் அவர்களுக்கு கப்பல் கட்டணம் செலுத்து வதற்குப் பதிலாக நிலம் கொடுக்கப்பட்டு அந்த நாடு களிலேயே தங்கிவிட்டனர்.

கங்காணி முறை ஆட்சேர்ப்பு

பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒப்பந்த முறை கூட கடைப்பிடிக்கப்படவில்லை. கங்காணி முறையே கையாளப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரையில் கங்காணிமார் தங்கள் உறவி னர்கள், கிராமத்தை சார்ந்த அல்லது அந்த பிரதேசத்தைச் சார்ந்தவர்களை தொழிலாளர்களாக அணிதிரட்டி இலங்கைக்குக் கொண்டு வந்தனர். பெரிய கங்காணிமாரும் குறைவான தொழிலாளர் களை கொண்டுவந்த சிறிய கங்காணிமாரும் இதில் இருந்தனர். இது தவிர கங்காணி இல்லாமல் தாங்களாகவே இலங்¨க்கு வந்த பலர் வர்த்தகம் செய்ய வந்தனர்.

கங்காணிமாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் தோட்டத் துரைமார் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் பெரும் பங்கை கங்காணிகளிடமே ஒப்படைத் திருந்தனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பற்றுச்சீட்டு அடிப்படையில் இந்தியாவில் உள்ள தங்கள் கிராமங்களுக்குச் சென்றுவரும் வழக்கமும் இருந்தது. இந்தியா அண்மையிலுள்ள நாடு என் பதால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பல தொடர்புகள் இருந்தன. வட கிழக்கிலே தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பின்பற்றும் ஒரு மொழியினரும் இங்கு இருந்தனர் என்பதால் ஹியூ டிங்கருடைய நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒப்பந்த அடிப்படையில் சென்ற தொழிலாளர்க ளுக்கும் இலங்கை வந்த தொழிலாளர்களுக்கும் இடையில் இத்தகைய வித்தியாசங்கள் காணப் பட்டன.

தோட்டத்துரைமாரும் அவர்களின் முகவர்களாகச் செயற்பட்ட கங்காணிமார், தோட்டத் தொழிலாளர் களை வெளிநடப்புக்கள் எதனையும் அறிந்துகொள் ளாதவாறு தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந் தனர். இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அறியாமையே தொழிலாளர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத் தப்பட்டது. என் கடன் பணி செய்து கிடப்பதுவே என்பது போல் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பதையே தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்தார்கள் என்று சி.வி குறிப்பிடுகின்றார்.

மாறாத வறுமை

பெக்போர்ட் என்ற மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த பேராசிரியர் பெருந்தோட்ட அமைப்பு பற்றி விரிவான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு விடாப்பிடியான வறுமை என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்த இரண்டு நூல்களிலிருந்தும் பெறப்பட்ட கருத் துக்கள் அறிஞர்கள் சிந்தனையாளர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த இரண்டு நூல்களிலும் இருந்து பெற்ற கருத்துக்களை அடிப்படையாக மட்டும் கொள்ளாமல் இதனை மேலும் ஆராய்ந்து மீள்பரிசீலனை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வித்தியாசமான அனுபவங்கள்

ஒவ்வொரு காலனித்துவ நாட்டுக்கும் சென்ற இந்திய வம்சாவளியினர் அந்தந்த நாடுகளிலேயே வித்தியாசமான இனக் குழுக்களை சந்திக்க வேண்டியிருந்தது. இவை மாறுபட்ட அனுபவங்க ளைக் கொடுத்தன. எனவே ஒரே அளவுகோலை மாத்திரம் வைத்து அனுகாது ஒவ்வொரு நாட்டின் வேறுபட்ட தன்மைகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம். இலங்கை இனங்களுக்கிடையே உள்ள உறவு நிலை அரசியல் சந்தர்ப்பவாதம், அளவு கடந்த பேரினவாதம், கலாசாரம் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துத்தான் பெருந்தோட்டத் தமிழர் தங்கள் மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய முடியும்.

புதிய விடியல்

சி.வி வேலுப்பிள்ளை தன்னுடைய ‘இலங்கைத் தேயிலை தோட்டத்திலே’ நூலின் கடைசி வரியில் புதிய விடியலை காண்பார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட பயணமாக இருந் தாலும் புதிய விடியலை நோக்கிய பயணம் ஆரம்பித்துவிட்டது என்பதில் ஐயமில்லை. பழைய சோகங்களையும் வேதனைகளையும் மாத்திரம் அசைபோட்டுக் கொண்டிருக்காமல் வந்துவிட்ட மாற்றங்களை அடையாளம் கண்டால்தான் மாற்றங் கள் வரும் புதிய யுகம் தோன்றும் என்ற நம் பிக்கை ஏற்பட்டால்தான் விடியலைக்காண முடியும்.

ஹெராக்லிட்டஸ் என்ற கிரேக்க தத்துவஞானி மாற்றங்கள் பற்றி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு மனிதன் ஒரே ஆற்றில் இரண்டு தடவை இறங்குவதில்லை. ஆறும் மாறிவிடுகிறது. மனிதனும் மாறிவிடுகிறான். எது சாஸ்வதமாக இருக்கின்றதோ இல்லையோ மாற்றங்கள் மாத்திரம்தான் சாஸ்வதம் உடையதாய் உள்ளது. இதைத்தான் பல அறிஞர்களும் கூறியுள் ளார்கள். புரட்சி மூலம்தான் சமுதாய மாற்றத்தை ஏற் படுத்த முடியும் என்று கூறிய கார்ல் மார்க்ஸ் மாற்றங் களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

(அடுத்த வாரம் தொடரும்...)

ஹட்டன் தினகரன் நிருபர்

பி. எம். லிங்கம்...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.