புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
சிறுவர் மீதான துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் திடசங்கற்பம் பூண வேண்டும்

சிறுவர் மீதான துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் திடசங்கற்பம் பூண வேண்டும்

இலங்கையில் இன்று சிறுவர்களை காமுகர்களின் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு வலுவான சட்ட திட்டங்கள் இருந்தாலும், நம் நாட்டு சிறுவர் சிறுமியர் தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு, அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து விடும் அளவுக்கு இன்று நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

1991ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சிறுவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தை தயாரித்தது. இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ள இலங்கை அரசாங்கம் 1978ம் ஆண்டின் அரசியல் சாசனத்தின் 157வது பிரிவின் கீழ் இந்த சிறுவர் பாதுகாப்பு சாசனத்தை எங்கள் நாட்டின் சட்டப் புத்தகத்தில் இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த சாசனத்துக்கு அமையவே இலங்கை அரசாங்கம் சகல பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுகளை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தலைமையில் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டம் இருந்தாலும் சுமார் 40 ஆண்டு காலமாக இலங்கையில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தண்டிப்பதற்கான வலுவான சட்டம் ஒன்று 1995ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற துன்புறுத்தலில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான சட்டம் 1939ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்து வருகின்றன போதிலும் 1995ல் இது குற்றவியல் சட்டமாக வலுவூட்டப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் சிறுவர்களைக் கடத்திச் சென்று அவர்களின் செல்வந்தப் பெற்றோரிடம் இருந்து பணயம் பணம் கேட்பது, சிறுவர்களை கடத்திச் சென்று வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தல், பார்ப்பதற்கே அருவருப்பான பாலியல் செயற்பாடுகளை சித்தரிக்கும் வீடியோப் படங்களில் சிறுவர்களை நடிக்க வைத்தல், சிறுவர்களின் நிர்வாணப் படங்களைப் பிரசுரித்தல் மற்றும் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களை நாளொன்றுக்கு 16 மணித்தியாலயங்கள் தொழிற்சாலைகளில் பலவந்தமாக பணியாற்றச் செய்தல் போன்றவை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளாக சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் அந்தக் குற்றத்தைப் புரிந்தார்கள் என்பதை நீதிமன்றங்களில் சந்தேகத்துக்கு இடம் அளிக்காத வகையில் சாட்சியங்கள் மூலம் ஊர்ஜிதம் செய்வதிலும் பல சிக்கல்கள் இருக்கிறன. நீதிமன்றத்தில் சிறுவர்கள் தங்கள் மீதான வன்முறைகள் குறித்து சரியான முறையில் சாட்சியம் அளிக்கும் அளவுக்கு அனுபவம் இல்லாத காரணத்தினால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி காமுகர்கள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்து விடுவது போன்ற பல வேதனைக்குரிய சம்பவங்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் நடைபெறுவதாகவும் இப்போது புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கும தனியார் மற்றும் அரசாங்கம் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சில பொறுப்பதிகாரிகளே அப்பாவி சிறுவர், சிறுமியரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவங்களுக்காக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்ற நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

1996ம் ஆண்டில் சிறுவர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிப்படையின் 1998ம் ஆண்டின் 50வது இலக்க சட்டத்த்தின் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படக் கூடிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏற்படுத்தப்பட்டது.

அதையடுத்து 2006ம் ஆண்டில் இதற்கென தனியான சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு ஏற்படுத்தப்பட்டது. இவ் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நம் நாட்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக தற்போது மகத்தான பணிகளை செய்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றைப் போன்று இலங்கையிலும் இளம் பெண்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் விடலைப் பருவத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக உலக வங்கி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் சிறுவர், சிறுமியர் மற்றும் விடலைப் பருவத்தைச் சேர்ந்த அப்பாவி பெண் பிள்ளைகளும் மது போதையில் உள்ள இளைஞர்களினால் பாலியல் சூறையாடலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்த பல சம்பவங்கள் சமீப காலத்தில் ஊடகங்களில் முக்கிய செய்திகளாக வெளியிடப்பட்டன.

இலங்கையில் 19வயதை அடைவதற்கு முன்னரே ஆண்களில் 38.9 சதவீதமானோர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்று உலக வங்கியின் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சிறுவர், சிறுமியர் பெரும்பாலும் அவர்கள் வாழும் இல்லத்துக்கு அருகில் உள்ள பக்கத்து வீட்டு அண்ணா, குடும்ப நண்பனான மாமா ஒருவர் மற்றும் குடும்பத்திலேயே வாழும் ஒரு வயோதிப உறவினரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

இவை குறித்து பெற்றோருக்கு அறிவுறுத்தும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் பெற்றோர் எந்நேரமும் தங்கள் பிள்ளைகளை ஆண்களின் பராமரிப்பில் விடாமல் பெண்களின் பாதுகாப்பிலேயே வைக்க வேண்டும் என்றும் உறவுக்கார ஆண்களைக் கூட நம்பி சிறுவர், சிறுமியரை அவர்கள் பாதுகாப்பில் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

மதுபோதையில் உள்ள தந்தையரே தங்கள் பிள்ளைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் சம்பவங்கள் இன்று அதிகரித்துள்ளது. எனவே தாய்மாரே தங்கள் சிறுபிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும் என்று அதிகார சபையினர் மேலும் அறிவுறுத்துகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் தான் சில காமுகர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று சிறுவர், சிறுமியரை துன்புறுத்துகிறார்கள் என்றும் அத்தகைய சந்தர்ப்பங்களைப் பெற்றோர் ஏற்படாதவாறு தவிர்த்துக் கொண்டால் எவ்வித அசம்பாவிதமும் எந்த குடும்பத்திலும் இடம்பெறாது என்று அதிகார சபையினர் மேலும் யோசனை தெரிவிக்கிறார்கள்.

இலங்கையில் சமீப காலமாக சிறுபெண் பிள்ளைகளை கடத்திச் சென்று அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் அப்பிள்ளைகளின் சடலங்களை எங்காவது விட்டுவிட்டு தப்பியோடும் காமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் சமீப காலத்தில் ஊடகங்கள் மூலம் வெளிவந்த செய்திகளில் இருந்து தெரிந்து கொண்டுள்ளோம்.

எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை 24 மணி நேரமும் கண்காணிப்புடன் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலமே அவர்களுக்கு ஏற்படும் இத்தகைய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் நாம் பெரியவர்கள் என்ற முறையில் ஒழுக்க பண்பாட்டு பெருமானங்களை சிறுவர் உள்ளங்கையில் விதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், போஷாக்கு உணவுத்துறையில் முன்னேற்றம் கண்ட தசாப்தமாக இன்று எமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தை குறிப்பிடலாம் என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி ‘எமது பிள்ளைகளைப் பொக்கிஷமாய் பேணுவோம்’ என்ற கருப்பொருளில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

உலக முதியோர் தினமும் இன்று கொண்டாடப்படும் போது சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு வயது எல்லையைக் கடந்த சுமார் 45 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 25 பேரை விசேட அதிதிகளாக அழைத்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா போஷாக்குணவுப் பொதிகளைக் கொடுத்து கெளரவித்தார்.

‘யாரையும் கைவிடாத ஒரே ஒரு சமூகம்’ என்ற தொனிப் பொருளில் இந்தத் தடவை உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. எங்கள் நாட்டின் சனத்தொகையில் 12 சதவீதமாக இருக்கும் முதியோர் எண்ணிக்கை 2025ல் 24 சதவீதமாகவும் 2050ல் 50 சதவீதமாகவும் உயர்ந்துவிடும்.

முதியோரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு சமூக சேவைகள் அமைச்சு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதை முதியோர் பெரும்பாலும் விருப்பம் காட்டி வருவதனால் முதியோருக்கு குறைந்த செலவில் பாதுகாப்பாக வத்திக்கான், தாய்லாந்து, ஜெருசலேம், வேளாங்கண்ணி, புத்தகாயா சென்று திரும்புவதற்கான வசதிகளையும் சமூக சேவைகள் அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

முதியோருக்கான விசேட மருத்துவர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உலக சிறுவர் தினம் இன்று எங்கள் நாட்டின் பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத் தலைவர்களும் பிள்ளைகளை நல்லவர்களாக வாழ்வதற்கு ஆலோசனை கூறுவதுடன், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிமார் வயோதிபத்தை அடையும் போது பெரியவர்களாகும் இன்றைய சிறுவர்கள் அவர்களை தங்கள் சொந்த கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்ற போதனையையும் பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத் தலைவர்களும் பிள்ளைகளின் மனதில் பதிய வைப்பது அவர்களின் கடமையாகும்.

இந்த நற்பழக்கத்தை சிறுவர்களுக்கு பெரியோர்களாகிய நாம் கற்பிக்காவிட்டால் பிள்ளைகள் என்றும் நல்லவர்களாக வாழ முடியாது இருக்கும். தங்கள் முதுமையடைந்த பெற்றோரையும் பாட்டா பாட்டிமாரையும் சிறந்த முறையில் பராமரிக்கும் ஒருவரே வாழ்க்கையில் மனநிம்மதியையும் ஆறுதலையும் பெற முடியும்.

இன்றைய உலக சிறுவர் மற்றும் உலக முதியோர் தினத்தில் இந்த நல்ல பாடத்தை எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நாம் நெறியான முறையில் கற்பித்தால், காலப்போக்கில் வயோதிபம் அடைந்த நம் பெரியோர்கள் எதிர்காலத்தில் அநாதை மடங்களில் முடங்கிக் கிடப்பதற்கான அவசியம் ஏற்படாது இருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.