புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
மரணத்தின் பின்னர் மறுபிறப்பு உண்டா?

மரணத்தின் பின்னர் மறுபிறப்பு உண்டா?

எந்தக் குறைபாடுடையவரும் இறந்தபின் முழுமையடைகிறார் என்கிறார் குருபாதம்

“முப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனது நண்பர் ஒருவர் கூறிய சம்பவமும் மறுபிறப்பு பற்றிய நூலை எழுதுவதற்குக் காரணமாகியது.

“தான் இருந்த வீட்டுக்கு அயல் வீட்டில் கூக்குரல் கேட்டதாகவும் ஓடிப்போய் பார்த்தபோது, அந்த வீட்டுக்காரர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுமாறு அவரின் மனைவியும் மாமியாரும் எழுப்பிய கூக்குரல்தான் அது. பின்னர் மூவருமாகச் சேர்ந்து அவரைக் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கிறார்கள். இவர் சொல்கிறார் அவர் இறந்துவிட்டாரென்று. அங்குக் கூடிய ஏனைய அயலவர்களும் இறந்துவிட்டார் என்ற முடிவினை எடுத்துவிட்டார்கள். கொஞ்சநேரத்தில் அவரில் ஒரு மாற்றம் தெரிந்ததால், உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அங்குத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் கண்விழித்துவிட்டார். கண்விழித்துப் பார்த்தும் அந்த அயல்வீட்டுக்காரனைப் பார்த்து முதலில் கேட்ட கேள்வி, “நீ ஓடி வரேக்க ஏன் விழுந்தாய்?” அவர் திகைத்துப்போனார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாது. உறக்க நிலையிலிருந்த இந்தச் சம்பவம் என் மனதில் பதிந்துவிட்டது. அதேபோல் இறந்த ஒரு டாக்டர், மீண்டும் உயிர்பெற்றபோது, இறந்ததற்கும் உயிர் மீணடதற்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விபரித்திருக்கிறார். இதுவும் என் நண்பர் சொன்ன கதையுடன் பொருந்திப்போகிறது. இப்படி நான் வாசித்தறிந்து கொண்ட பல்வேறு சம்பவங்களை ஏனையோரும் அறிவதற்காகவே நூலாக்கித் தந்திருக்கின்றேன். இவற்றுள் இன்னுமொரு சம்பவம், ஒருவர் இறந்தவுடன் அவருடைய உடலில் இருந்து வெளியேறுகின்ற ஆத்மா அல்லது உயிர் அல்லது சுயம் என்று சொல்லாம்,

அது வெளியில் மிதந்து வந்து ஒரு படக்காட்சியைப் போல தன்னுடைய உடலை அது பார்க்கிறது. முன்னால் நடக்கின்ற சம்பவங்கள் அனைத்தையும் அது அவதானிக்கின்றது. சிலவேளை திரும்ப அது வந்து உடலுக்குள் பிரவேசித்து உயிர்பெற்றுவிடும் சந்தர்ப்பமும் உண்டு. அப்படியே வெளியில் சென்றாலும் ஒரு பத்து நாட்களுக்குத் தான் வாழ்ந்த இடங்களிலெல்லாம் சுற்றித் திரிவதாக அறிந்துகொள்கிறோம்.”

உதாரணத்திற்கு இன்னொன்று, அமெரிக்காவின் சிக்காகோவில் என நினைக்கின்றேன். கண் தெரியாத ஒருவர். அவருடைய வீட்டில் கொள்ளையடிக்கப்போன இடத்தில் அவரைச் சுட்டுச் சாக்காட்டுறாங்கள். அந்த நேரம் அங்கு சென்ற பொலிஸார்; தன் உடலுக்குமேல் நடப்பதைப் படம்பிடித்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிர் பெற்றிருக்கிறார். கண் தெரியாத அந்த அறைக்குள் நடந்த அத்தனை சம்பவங்களையும் விளங்கப்படுத்துகிறார்.

இன்னொரு சம்பவம் இந்தியாவிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் திபெத் நாட்டிற்குச் சென்ற ஒரு துறவி. அவர் மரணத்திற்கு அப்பாலுள்ள நிலையைத் தானே கடந்து; அந்த அனுபவங்களை நூலாக்கியிருக்கிறார்.

அந்த நூல்தான் இன்றைக்கும் ஓர் ஆதாரபூர்வமான நூலாக இருக்கின்றது. அந்த நூல் 1972ம் ஆண்டு வாசிக்கக்கூடிய நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றது. ‘இறந்தவருடைய திபெத் நூல்’ என்று அதற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு சம்பவங்கள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. அதனூடாக மறுபிறப்பு என்பது உண்மைதான் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்படுகிறது.

அந்த நூலில் அவர் எழுதுகிறார், ‘ஒருவர் அங்கவீனமாக இருக்கலாம். எந்தக் குறைபாடுடனும் இருக்கலாம். ஆனால், இறந்தபின் அவர் முழுமையடைகிறார். அப்படியென்றால், சிக்காகோவில் கண்தெரியாத அவர், இறந்ததும் எல்லாவற்றையும் அவதானிக்கின்றார். எனினும் உயிர் மீண்டதும் அவருக்குக் கண் தெரியவில்லை. இறந்த பின்னர் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருப்பார்களென்றும் உலகத்தில் உள்ள அத்தனைபேரும் ஒரே மொழிதான் பேசுவார்களென்றும் உறுதியாகச்சொல்கிறார்கள். சிலர் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லத் தயங்குகிறார்கள். சொன்னால் தம்மைப் பைத்தியக்காரர் என நினைத்துவிடுவார்கள் என்ற ஓர் அச்சம்! மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் சிலர் தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள்.

எல்லோருடைய கருத்தையும் பார்க்கிறபோது ஒருவர் இறந்து அவருடைய உயிர் வெளியேறிய பிறகு, எல்லோரும் ஒரே அனுபவத்தையே அடைந்திருக்கிறார்கள். ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், இந்துவாக இருக்கலாம், கிறிஸ்தவனாக இருக்கலாம் உலகத்தில் எவனாக இருந்தாலும் அடைகின்ற அனுபவம் ஒன்றுதான். இறந்து கண்விழித்தவர்கள் சொல்கிறார்கள். “நாங்கள் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ வேற்றுமைகளைக் காண்கிறோம். ஆனால், இறந்த பின் ஒரே அனுபவத்தையே காண்கின்றோம் என்று. அந்த அனுபவத்தைப் பல நாட்டைச் சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள்” என்றவரிடம்,

“புத்தர்கூட முற் பிறப்பைப் பற்றிச் சொல்கிறார். ஆனால், சில தரப்பினர், சில மதத்தினர் முற்பிறப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லையே!?” என்று கேட்டால், ஒருவர் இறந்துவிட்டார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? ஒருவரின் பிரக்ஞை வெளியேறினால் தான் தெரியும். பிரக்ஞை வெளியேறினால், கண் தெரியாது, காது கேளாது, பிரக்ஞைதான் முக்கியம். விவேகானந்தரும் சிக்காகோவில் இதனைப் பற்றிச் சொல்லியி ருக்கிறார். பிளேட் டோவும், சோக்ரிட் டிஸ¤ம் கூட இதனைச் சொல்லியிருக்கிறார்கள். கனியன் பூங்குன்றனார் எப்போதோ சொல்லி வைத்துள்ளாரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று. நான் இந்த நூல்களை வாசிக்கும்போது கனியன் பூங்குன்றனார் என் கண் முன்னே நிற்கிறார். உலகத்தில் உள்ள எல்லா நாட்டினரும் ஒன்றே என்று ஷேக்ஸபியர் முதலான ஆங்கிலக் கவிஞர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஆன்மா என்பது பிரிந்துபோய் திரும்ப வருகிறது என்று பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

வீதியில் நாம் செல்லும்போது சிலரைப் பார்த்தால் எங்கோ பார்த்தமாதிரி இருக்கும். தாயின் மடியில் உள்ள சிறு குழந்தை தவறி விழ நேர்ந்தால், தாயின் சங்கிலியைப் பிடித்துக்கொள்ளும், இல்லாவிடில் உடையைப் பற்றிக்கொள்ளும், ‘நாம் விழுந்தால் இறந்துவிடுவோம்’ என்று அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக்கொடுத்தது?. அந்தக் குழந்தைக்கு முற்பிறப்பு ஞாபகம் வருகிறது. பிறந்த குழந்தைக்குப் பழைய பெற்றோர்தான் ஞாபகத்தில் இருப்பார்களாம்.

அந்தக் குழந்தை வாய் பேசும் வரை பழைய ஆட்கள் எல்லோரையும் அதற்குத் தெரியும். பிறகு பிறகுதான் புதியவர்களை அடையாளம் காணும். இதுபோன்ற சம்பவங்களையும் நான் எனது நூலில் நிறைய குறிப்பிட்டிருக்கிறேன். அவற்றைப் படித்தால், முற் பிறப்பு உண்டா, இல்லையா, உண்மையா என்பது புரியும்” என்கிறார்.

“சில வேளைகளில் இறந்த ஆன்மாக்கள் மிருகங்களிடம் இருக்கமெனச் சொல்கிறார்களே! இதனைப் பற்றி ஆராய்ந் தீர்களா?”

“நல்லதொரு கேள்வி. அதனை பிளேட்டோவும் சொல்கிறார். ஆன்மாக்கள் வேறு சரீரம் எடுக்குமென பிளேட்டோ சொல்கிறார். பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்திருப்போம். எங்கோ ஓரிடத்தில் புதையல் இருந்த தென்றும், அதனை அண்மிக்க விடாமல் பாம்பொன்று பாதுகாத்துக் கொண்டிருந்த தென்று. அஃதோர் ஆன்மா, ஒருவர் என்னவாக நினைக் கின்றாரோ அதுவாகவே ஆகிறார் என்று பகவத் கீதையும் சொல்கிறது. ஒருவர் தான் அனுபவிக்க முடியாத சொத்துக்களை, செல்வங்களை ஒரு பானையில் இட்டு மூடித்துணியால் கட்டி, அந்தப் பானையின் மீது பாம்பின் உருவத்தை வரைந்து ஆழத்தில் புதைத்து வைத்துவிட்டு, அதே சிந்தனையில் இறக்கிறார். அவரது இறுதி எண்ணம் அதுவாகத்தான் இருக்கும். ஆகவே, அவர் அவ்வாறு மாறியிருக்கலாம்.”

“ஆன்மாக்கள் வெளியில் உலாவிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே!?”

“இது சரியான ஓர் உண்மை. இறந்தவர்கள் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள். அதனை நான் ஆராய்ந்திருக்கிறேன். ஓர் ஆண் பெண்ணாகவும் பிறக்கலாம், பெண் ஆணாகவும் பிறக்கலாம். வாழும் காலத்தில்தான் ஆண் - பெண் நிற வேற்றுமை எல்லாம். இறந்த பின் எல்லாம் ஒன்றுதான். ஆதலால் தான் உலகத்தில் நடைபெறுகின்ற மதப்போர்கள் எல்லாம் எந்த உண்மையை நிலைநாட்ட நடக்கின்றனவாவென்று எனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறேன்.”

“இந்த விடயங்களை நூலுருவாக்குவதற்கான அடிப்படை என்ன?”

“மரணம் என்பது ஓர் உண்மை. நாங்கள் அதனைப் பேசக் கூச்சப்படத்தேவை இல்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. மரணத்தை இலகுவாக்கிப் பார்த்தால், வாழ்க்கை சுலபமாகிவிடும். மத பாதையில் அதனை இறுக்கிவைத்திருக்கிறார்கள். இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தால்தான் குழந்தைப் பிள்ளைகளைப் பற்றிய நூல் சிறப்பாக வரும். அதனை முதலில் வெளியிட்டு அடுத்ததாக அந்த நூலை வெளியிட்டால் சரியாக இருக்குமென்று கருதினேன். மனதைக் கடப்பதற்கு துறவியாக வேண்டிய அவசியமில்லை. கணவன், மனைவியாக வாழ்ந்தே மனதைக் கடக்கலாம் என்று ‘தந்திரா’ சொல்கிறது. ஆகவே, அதனை ஆழமாகத்தேடினேன். உலகத்தை மறந்த நிலை மனதைக் கடந்த நிலை. அதனூடாக நீ ஓர் ஆன்மிக எல்லைக்கு வரலாம். சித்தர்களும் யோகிகளும் அதனைத்தான் செய்தார்கள்.”

என்று துணிந்து முத்தாய்ப்பு வைக்கிறார் குருபாதம்!

இவருடைய நூல்களுக்குப் பல இந்திய பத்திரிகைகளும் மதிப்புரை எழுதியுள்ளன. உலகத்தை மறந்து மனதைக் கடந்தேனும் மனிதம் உணரப்பட்டால் அதுவே தனது முயற்சிக்கும்கிடைக்கும் வெற்றி என்பது குருபாதத்தின் எதிர்பார்ப்பு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.