புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

இஸ்லாமிய விழுமியங்களை மனங்களில் விதைத்திடும் ஓர் அற்புதக் கடமை ஹஜ்

இஸ்லாமிய விழுமியங்களை மனங்களில் விதைத்திடும் ஓர் அற்புதக் கடமை ஹஜ்

நாம் அடையப் பெற்றி ருக்கின்ற துல்ஹஜ் மாதமானது பல சிறப்புக்களையும், மகோன்னதங்களையும் உள்ளடக்கி யிருக்கின்றது. அல்குர்ஆன் புனிதப் படுத்தி சிலாகிக்கின்ற நான்கு மாதங்க ளில் இதுவும் ஒன்றாகும். சூறா அல் பஜ்ரில் அல்லாஹுத்தஆலா சத்தியம் செய்துள்ள பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களையே குறிப்பதாக இப்னு அப்பாஸ் (ரb) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் “உலக நாட்களில் மிகவும் சிறந்தது துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களாகும். இந்நாட்களில் புரியப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவைகளாகும்” எனக் கூறினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் சிறந்ததா?” என வினவிய போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள் “ஆம், அம்மாதத்தில் செய்யப் படுகின்ற அமல்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் சிறந்தது. எனினும், அல்லாஹ்வின் பாதையில் தனது உயிர், செல்வம் என்பவற்றை எடுத்துச் சென்று திரும்பி வராத (ஷஹீதான) மனிதனைத் தவிர. (புஹாரி) இந்தளவுக்கு இம்மாதத்தில் செய்யப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்விடத்தில் பெறுமதி வாய்ந்தவைகளாக அமையப் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுன் ஒன்றான ஹஜ் நிறைவேற்றப்படு கின்ற மாதமாகவும் துல்ஹஜ் திகழ்கிறது.

“ஹஜ்ஜுக்காக நீங்கள் மனிதர்களை அழையுங்கள். (அவ்வழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தவர்களாக வும், இளைத்த ஓட்டங்களின் மீது வெகு தொலைவில் இருந்தும் உங்களிடம் வருவார்கள்” (அல் ஹஜ்-27)

ஹஜ் கடமை பல வகையான படிப்பினைகளை எமக்குக் கற்றுத் தருகின்றது. சுருக்கமாக அவற்றை பின்வரும் அடிப்டையில் நோக்க முடியும்.

உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இப்றாஹீம் (அலை) அவர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக எதிர்நோக்கிய கஷ்டங்களையும், துன்பங்களையும் ஹஜ் கடமையானது எமக்கு ஞாபகப் படுத்துகின்றது. அதுபோல, இந்த உலகில் முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும், யூதர்களும் ஏற்றுக் கொள்கின்ற ஒரே நபியாக இப்றாஹீம் (அலை) காணப்படுகிறார்கள். தனது சமூகம் சிலை வணக்கத்தில் மூழ்கிக் காணப்பட்ட போது அதனை எதிர்த்து நின்று, உறுதியாகப் போராடிய நபி இப்றாஹீம் (அலை) அவர்களது வரலாற்றை அல்குர்ஆன் ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றது.

ஹஜ் கிரியை நினைவூட்டும் மற்றுமோர் அம்சமாக இப்றாஹீம் (அலை) அவர்களது குடும்பத்தினரின் முன்மாதிரி திகழ்கின்றது. சத்தியத்தை எடுத்துரைத்த ஒரே காரணத்திற்காக இப்றாஹீம் (அலை) அவர்கள் தமது சமூகத்தால் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள். பல நாடுகளுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அவர்களுக்கு இருந்த ஒரேயொரு கவலை தன் மரணத்தின் பின் தனது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சந்ததி இல்லாமலாகி விட்டது என்பது மட்டுமே, இந்தக் கவலையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்கினான். என்றாலும், இவ்வாறு தவமிருந்து பெற்ற குழந்தையை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது, எவ்வித தயக்கமுமின்றி இறைவனின் கட்டளையை நிறைவேற்ற முன்வந்தமையானது ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. எனவேதான் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றத் துடிக்கும் கணவன், கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கின்ற மனைவி, பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கும் பிள்ளை போன்றோரை நாம் காண முடியும்.

ஹஜ் கடமை எமக்குக் கற்றுத் தரும் இன்னு மொரு படிப்பினையாக இது காணப்படுகிறது. இஸ்லாத்திற்காக இந்த உலகில் வாழ்கின்ற போது பல வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் என்பது பொது நியதி. இந்த உண்மையை நாம் நபிமார்கள், ஸஹாபாக்கள், நல்லடியார்கள் போன்றோரின் வாழ்வில் காண முடியும். இப்றாஹீம் (அலை) இஸ்லாத்திற்காகப் பட்ட கஷ்டங்களையும், தியாகங்களையும் ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு அம்சமும் எம் மனக்கண் முன் கொண்டு வருகின்றது.

மிக முக்கியமான இந்த இரண்டு விடயங்களையும் முஸ்லிம் சமூகம் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை ஹஜ் கடமை தெளிவாக முன்வைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது இறுதிப் பேருரையில் கூட இந்த அம்சத்தை வலியுறுத்தி இருப்பதனை அவதானிக்க முடியும்.

இன்று பிரதேசம், நிறம், அந்தஸ்த்து என வேற்றுமைப் பட்டிருக்கின்ற மனித சமூகத்தை ஒரே கோஷம், ஒரே திசை, ஒரே ஆடை, ஒரே இலக்கு என ஒற்றுமைப்படுத்துகின்ற ஓர் உன்னதமான கிரியையாக ஹஜ் திகழ்கின்றது.

ஹஜ் கடமையானது மனது உள்ளங்களை விட்டும் உலக ஆசைகள் போராசைகள், போன்ற ஷைத்தானியப் பண்புகளை விரண்டோடச் செய்கின்றது அல்லாஷ்வுக்கு பூரணமாகக் கட்டுப் படுகின்ற மனோநிலையை மனிதர்கள் ஏற்படுத்துவதோடு, மறுமைக் காட்சிகளை மனக்கண் முன் கொண்டு வருகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.