புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

பீதியில் உறைந்துள்ள இந்திய அரசியல் பண முதலைகள்

பீதியில் உறைந்துள்ள இந்திய அரசியல் பண முதலைகள்

இந்திய அரசியல் வரலாற்றில் பதவியில் இருந்தபோதே ஊழல் வழக்கொன் றிற்காக சிறைத் தண்டனையை அனுபவிக்கும் முதலாவது முதலமைச்சராக செல்வி. ஜெயலலிதா ஜெயராம் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இதனை அவர் தனது அரசியலுக்கான பிரசாரத்தில் பெருமையாகக் கொள்ளக் கூடும். ஆனால் இது எத்தகைய அவமானச் சின்னம் என்பதை இப்போது நான்கு சுவர் கொண்ட சிறையிலிருக்கும் அவரது மனச்சாட்சி நிச்சயம் அவருக்கு உணர்த்தியிருக்கும்.

கடந்த பதினெட்டு வருடங்களாக நீதித்துறையை ஏமாற்றி வந்தவருக்கு இப்போது சரியானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை அவர் அரசியல் பழிவாங்கலாக அல்லது அரசியலிலிருந்து தன்னை ஓரங்கட்டு வதற்கான சதி முயற்சி எனக் கூறினால் கூட அவையெல்லாம் பொய் என்ப தற்கு இந்திய நீதித்து றையினரிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதனை அவரால் ஒருபோதுமே மறுதலிக்கவே முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிற்கு இப்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அறுபத்தாறு கோடி ரூபாவை முறைகேடாக சம்பாதித்தார் என்றே இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அவரது இருப்பிடங்களில் நடத்தப்பட்ட அதிரடியான சோத னைகள் மூலமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட பெருந்தொகையான நகைகள் மற்றும் பண மூடைகள், சொத்துப் பத்திரங்கள் அனைத்துமே அன்றே இவர் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்களாக அமைந் திருந்தன.

எனினும் நீதித்துறையானது அவருக்கு கால அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டது. அவரும் கடந்த பதினெட்டு வருடங்களாக மாறி மாறி விளக்கம் அளித்துக் காலத்தைக் கடத்தி வந்தார். இக்காலத்தில் கூட அவர் மீது மேலும் சில நிதி மோசடி சம்பந்தமான வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் அவர் தனது குற்றத்திலிருந்து தப்பிக்க மக்கள் அவரை நம்பி வழங்கிய முதலமைச்சர் எனும் கவசத்தைப் பயன்படுத்தி வந்தார். அத்துடன் அவர் தனது பணபலத் தையும் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி காலத்தைக் கடத்தி வந்ததாகவும் இப்போது தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பது போல இப்போது அந்தத் தெய்வம் ஆற அமர நின்று தன் தண்டனையை வழங்கியி ருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேர்த்தி இளவரசிக்கும், தனது மகன் எனக் கூறும் சுதாகரனுக்கும் இவர் தனது தலைமையில் நடத்தி வைத்த திருமண வைபவத்திலிருந்தே இவரது கைகளுக்கு நீதி தேவதை கைவிலங்கை மாட்டி விட்டாள் என்றே கூற வேண்டும்.

இந்தியாவிலே அதுவும் தமிழகத்தில் வதிவோரில் அரைவாசிக்கும் அதிகமான மக்கள் வறுமை நிலையில் வாழ்ந்து வருகையில் இவர் நடத்தி வைத்த திரும ணத்தின் செலவு அம்மக்களின் பல நாள் பசியைப் போக்க வல்லதாக இருந்திருக் கும் என்று அன்றே குறை கூறப்பட்டது. ஆனால் அம்மணி எதனையும் கண்டு கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரம் தனது கண்களை மறைக்க தான் நினைத்ததை அவர் செய்து முடித்தார்.

தான் முதலமைச்சராகப் பதவி வகித்தாலும் ஒரு ரூபாவை மட்டுமே சம்பள மாகப் பெறுவதாகவும், எல்லாமே தான் நடிகையாகத் தொழில் பார்த்து உழைத்தது என்றும் பெருமையாகக் கூறி வந்த இவரால் அதற்கான ஆதாரங் களை நீதியின் முன்பாக நிரூபிக்க முடியவில்லை. இவரது காலத்தில் இவரை விடவும் பிரபல்யமாக விளங்கிய கே.ஆர்.விஜயா, பத்மினி, செளகார் ஜானகி போன்றோர் அல்லது எம்.ஜி.இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், முத்துராமன் ஆகியோர் கூட இவர் வைத்திருந்த சொத்தில் காற்பங்கினைக் கூடச் சம்பாதிக்க வில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் மறைவிற்குப் பின்னர் இவர் முதலமைச்சரானதும் பல குறுக்கு வழிகளில் சொத்துக்களைச் சேர்த் துள்ளார். இவரது இணைபிரியா நண்பியாக இன்றுவரை விளங்கும் தோழி சசிகலா மற்றும் அவரது கணவர் தினகரன் ஆகியோருடன் இணைந்தே இவர் பல மோசடியான சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கப் படுகிறது. எது எவ்வாறி ருப்பினும் இவர் முறைகேடான விதத்தில் சொத்துக் களைச் சேர்த்தது இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது. இதுவரை காலமும் இவரும் இவரது சகாக்களும் நீதித்துறை யினரை ஏமாற்றி வந்துள்ளனர் என்பதே உண்மை.

இனியும் இவர் தான் செய்த குற்றத்திலிருந்து தப்ப முடியாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர் ஜாமினில் வெளியே வரலாம். மேல் நீதிமன்றில் எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால் இவர் குற்றவாளி என நிரூபணமாகி யுள்ளதை ஒருபோதும் மறைக்க முடியாது. உண்மையில் இந்தத் தீர்ப்பை வழங் கிய நீதிபதியை நாம் பாராட்ட வேண்டும். இரவு பகலாக கண் விழித்திருந்து பதினெட்டு வருட கால வழக்கை முழுமையாக வாசித்து தனது கைப்படவே தீர்ப்பை எழுதியுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அங்கு இடம்பெற்றுவரும் மாற்றங்களை அவதா னிக்கும்போது புதிய பிரதமர் நாட்டைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வ தனை உணர முடிகின்றது. மக்களைச் சுரண்டி வாழ முனையும் அரசியல் வாதிகளுக்கு இந்தியாவில் இனி இடமில்லை என்பதை செல்வி. ஜெயலலி தாவின் கைது உணர்த்தியிருக்கிறது. இவரது கைதால் அங்கு இவரைப் போன்று சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் தமிழகத்து அரசியல் பண முதலை களுக்கும், ஏனைய மாநில அரசியல் பண முதலைகளுக்கும் பெரும் கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரதமர் மோடியையே பாராட்ட வேண்டும். அவரது நேர்மை பற்றிப் பலரும் பேசி வருகின்றனர். அரசியலில் கைகள் கறை படியாதவராக அவர் காணப்படுகிறார். அதனால்தான் ஜெயலலிதாவின் கைது விவகாரம் தொடர்பாக அவருக்கு அறிவிக்கப்பட்டதும் நீதி தன் கடமையைச் செய்யும் என ஒரே வசனத்தில் தனது கருத்தினை வெளியிட்டார். தனது ஆட்சியில் ஜெயலலிதா போன்று நாடு பூராகவும் உள்ள அரசியல் பண முதலைகளைக் களை எடுப்பது இவரது நோக்கமாக இருக்கலாம். அதில் தவறில்லை.

ஊழலில்லா நாட்டை ஆள வேண்டுமெனில் ஊழலில் ஈடுபடுவோரை இல்லா தொழிக்க வேண்டும். அதனை ஒரு நாட்டின் தலைவராக விளங்கும் அவர் மேற்கொள்வதில் தவறில்லை. செல்வி. ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்க ளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும் பதினெட்டு வருடங்கள் வீணே காலத்தைக் கடத்தியதை பிரதமர் மோடி நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதனை விடவும் தன் மீதே இத்தனை குற்றச்சாட்டுக்களைச் சுமந்து கொண்டிருந்த செல்வி. ஜெயலலிதா அரசியலில் ஏனைய தலைவர்களைப் பாடாய்ப்படுத்தி வந்ததையும் பிரதமர் கவனத்தில் கொண்டிருந்திருப்பார்.

எது எப்படியோ இந்திய நீதித்துறை தனது கடமையைச் செய்திருக்கிறது. குற்றமிழைத்த ஒருவருக்கு அவரது தராதரம் பார்க்காது நீதி தேவதை தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறாள். இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக தீக்குளிப்பதும், பஸ்களை எரிப்பதும் முட்டாள் தனமான செயலாகும். செல்வி. ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது சில நல்ல சேவைகளை தமிழக மக்களுக்குச் செய்திருக்கலாம். அதற்காக நீதி அவரை மன்னித்து விட வேண்டும் என மக்களில் சிலர் நினைப்பது சரியானதல்ல. நீதிக்கு முன் சகலரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.