புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

(யார்? அவர் பெயர் நிஸாம் இஸ்மாயில்)

இங்கிலாந்து பேராட்சி மன்றங்கள் (County Council) என்று அழைப்பர்.

பிரிட்டிஷ் பாராளுமன்ற (House of Common) மாநகராட்சி மன்றம் (Municipality)  அடுத்து பேராட்சி மன்றம் (County Council)  பிரிட்டிஷ் பாராளுமன்றம், மாநகராட்சி மன்றம் கவுன்டி கவுன்சில் என்ற மூன்று வியூக நிர்வாகத்துறை இங்கிலாந்து நடைமுறையில் உள்ளது.

ஏற்கனவே முனிசிபல் மேயர்களாகவும் கவுன்டி கவுன்சில் உறுப்பினர்களாகவும் தமிழர்கள் பணியாற்றியிருக்கின்றனர். இப்பேற்றைப் பெற்றவர்களுள் இலங்கைத் தமிழர்களும் அடங்குவர். இதேபோல், இலங்கை முஸ்லிம்களும் பல கவுன்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லண்டன் மாநகரின் எல்லையைத் தொட்டிருக்கும் பேராட்சி மன்றம் தான் ஹரோ கவுன்சில் (Harrow Council).

முதன்முறையாக இங்கு இலங்கையைத் தாயகமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் துணை மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நம் இலங்கையர் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளத்தக்க செய்தியல்லவோ இது.

இப்பெருமைக்குரியவர் தென் மாகாண காலி நகரைச் சேர்ந்த எம். நிஸாம் இஸ்மாயில். (படத்தில் இடதுபுறம்)

காலி கோட்டை என்பது தென் மாகாண முஸ்லிம்களின் கோட்டை. இலங்கை சட்டசபையில் முதல் முஸ்லிம் அமைச்சராக நியமனம் பெற்ற சர் முஹம்மது மாக்கான் மாக்கார் இக்கோட்டையில் இருந்துதான் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டவர்.

துருக்கிய உதுமானிய சாம்ராஜ்ய காலத்தில் ஓர் 'எபந்தி' (Effendi) என்ற பட்டத்தால் கெளரவிக்கப்பட்டவர். துருக்கியின் முதல் தூதுவர் Consul General) ஆகவும் நியமனம் பெற்ற முதல் முஸ்லிம் தலைவரும் இவரே. 'பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா' எனும் சிறப்புமிக்க அரபுக் கலாசாலையை காலி கோட்டையில் உருவாக்கி இப்றாஹிமி என்ற உலமாக் குழாத்தை உருவாக்க முன்நின்றவர் இவர்.

இத்தகு பேரும் புகழும் கொண்ட ஒரு மகான் பிறந்த மண்ணில் பிறந்தவர் தான் நிஸாம் இஸ்மாயில்.

"ஹெரோ" என்பது ஆசிய நாட்டு மக்களைப் பெருவாரியாகக் கொண்ட பேராட்சி மன்றம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்தக் கவுன்டியில் வாழ்கின்றனர்.

சென்றமுறை நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு தேர்தல் நடந்தது. நிஸாம் இஸ்மாயில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் மிகவும் அலாதியான முறையைக் கண்ணுற்று நானும் அகமகிழ்ந்ததுண்டு. ஆங்கிலேயர் உட்பட ஆசிய நாட்டு வாக்காளர்கள் அனைவர் மத்தியிலும் இவர் செல்வாக்குப் பெற்றவராக விளங்கியதை நான் நேரில் கண்டதுண்டு.

ஆக, அவர் அம்மக்கள் மத்தியில் மிகவும் அபிமானத்துக்குரியவராக விளங்கியதன் காரணமாக தொடர்ச்சியாக நான்கு முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கவுண்டி கவுன்சிலாவார்.

நிர்வாகத்தில் உச்சாணிக்கேற இரண்டு படிகள். அதில் ஒன்றை அதுதான் துணை மேயர் பதவியை - அடைந்துவிட்டார். மேலும் ஒருபடி பாக்கி. அடுத்த வருடம் முதல்வராக - மேயராகத் தெரிவு செய்யப்பட இருக்கிறார்- பிரார்த்திப்போம்!

ஆபிரிக்கக் கண்ட கானா (GHANA)  நாட்டின் இலங்கையின் முதல் தூதுவராகப் பதவியேற்றுச் சென்ற காலியைச் சேர்ந்த எம்.எச்.ஏ. வஹாப் ஆவார். அவருடைய மகளைக் கரம் பற்றியவர் நிஸாம் இஸ்மாயில் என்பது அவருக்கு மேலும் கெளரவம் சேர்க்கிறதல்லவா?

கொழும்புக் கோட்டை ஆஸ்பத்திரி வீதியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் மண்டப விடுதியில் அவர் தங்கியிருந்த போது நாம் இருவரும் நட்பால் கட்டுண்டோம். அந்நட்பு இன்றும் தொடர்கின்றது....

இங்கு படத்தின் நடுவில் எம் உள்நாட்டு மன்றத்தின் இன்னொரு தலைவர். இலங்கையில் கிழக்கு மாகாண நிந்தவூர் பிரதேச சபையில் புகழ்பெற்ற தலைவர் ஏ. அஹ்மத். ஊர் மக்களால் 'தம்பி' என செல்லமாக அழைக்கப்பட்டவர். மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர். கிழக்குக்கு விஜயம் செய்யும் வேளையிலெல்லாம் அவர் இல்லம் சென்று மனைவி மக்களையும் சந்தித்து விருந்தோம்பல் பெற்றுவருவது என் வழக்கம். இன்று அந்தத் 'தம்பி' இல்லை. ஏனைய தம்பிமார்கள் நிந்தவூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். உள்ளூராட்சி நிர்வாகத்துறையில் முஹம்மத் தம்பி ஏற்றிய ஒளிச்சுடரை அணையாமல் காக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

துணை மேயர் நிஸாமும் நிந்தவூர் தலைவர் அஹ்மதும் ஒரேநேரத்தில் எமது பாராளுமன்றக் கட்டடத்தைப் பார்க்க வந்தனர்.

அவ்வேளை...... சொல்லொணா அழகு தியவன்னா ஓய. அதன் எழிலை ரசித்து மகிழ்கின்ற ஆங்கில நாட்டு துணைமேயர் நம் சொந்தம் நிந்தவூர் தம்பி அஹ்மது.... இருவருடனும் நாமும் சேர்ந்து க்ளிக் செய்யப்பட்ட படம் இங்கே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.