புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
இனப்பிரச்சினைத் தீர்வில்

இனப்பிரச்சினைத் தீர்வில்

எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்

அரசியல் இலாபம் கருதி செயலாற்ற வேண்டாம்
அமைச்சர் மஹிந்த அமரவீர

* கேள்வி : இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாக அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு, ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்கள்?

பதில் : இந்த அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது, ஜனாதிபதியின் தேவைக்காகவோ அல்லது அரசாங்கத்தின் தேவைக்காகவோ அல்ல. பாராளுமன்றத்திலுள்ள சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அபிப்பிராயத்தின் படி இதனைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானமானது பெரும்பாலும் வரவேற்கத்தக்கது. இந்தச் சந்தர்ப்பம் பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரச தரப்பு மற்றும் எதிர்த் தரப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைத்துள்ளது. எனவே, பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சமர்ப்பிக்கப்படும் தீர்வொன்று தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை ஏற்படாது. இதேபோல் இதற்கு பெருந்தொகையான பணம் ஒதுக்க வேண்டிய அவசியமுமில்லை.

இதன்மூலம் சிறந்த தீர்வொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். இந்நேரத்தில், முன்னரைவிட எதிர்க் கட்சியினர் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்வார்களென நாம் எண்ணுகிறோம்.

* கேள்வி : தீர்வுத் திட்டம் குறித்து பேசும் போது, இது 13 வது திருத்தச் சட்டத்துடன் மட்டுப்படுத்தப்படுமா? அல்லது இதற்கு அப்பால் எடுத்துச் செல்லப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இது குறித்து தங்களது கருத்து என்ன?

பதில் : இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியதும் இந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவே யாகும். தற்போது சிலர் 13 சிறந்தது என்கிறார்கள். மற்றும் சிலர் 13 அதிகம் என்று கூறுகிறார்கள். 13 க்கும் அப்பாற் செல்ல வேண்டும் என வேறு சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். என்றாலும் தெரிவுக் குழுவுக்குள் அனைத்துக் கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்வதால் இவ்வாறான பலதரப்பட்ட கருத்துக்களை ஆலோசனைக்கு எடுத்து, தகுந்த சிறந்த ஆலோசனைகளை ஏகமனதாக அல்லது பெரும்பாலானோரின் விருப்பத்திற்கேற்ப முன்னெடுத்துச் செல்ல முடியும்.

தமிழ் மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் இருக்குமேயானால் அவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வைப் பெற்றுக் கொடுக்க பின்னடையத் தேவையில்லை. எல். ரீ. ரீ. ஈ. யினரே அவர்களின் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர். எனினும், எல். ரீ. ரீ. ஈ. அழிக்கப்பட்ட பின்னர் தற்போது தீர்வொன்றை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புக்கிட்டியுள்ளது. தமிழ் மொழியிலேயே கடித மொன்றை எழுதுவதற்கும், பொலிஸில் முறைப்பா டொன்றைச் செய்வ தற்கும் அந்த மக்களுக்கு சுதந்திரம் ஒன்றை ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், இன்னும் இவ்வாறான வசதிகள் ஏற்படுவது குறித்து சில சிக்கல்கள் உள்ளன.

எனினும், இது போன்ற பிரச்சினைகளுக்கு நாம் உரிய தீர்வுகளைத் தேடிக் கொள்ள வேண்டும்.

தற்போது அமைச்சர் வாசுதேவ இவை தொடர் பில் பாரிய பிரயத்தனங் களை எடுத்து வருகிறார். நாம் அனைவரும் ‘இலங்கையர்கள்’ என்பதை உணர்ந்து இந்தப் பிரச்சினை களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

* கேள்வி : இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழு சம்பந்தமாக சில எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனவே, பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு, அனைத்துக் கட்சிகளின் சம்மதத்துடன் அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் நல்லதல்லவா?

பதில் : இந்த முறையாவது இத் திட்டம் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகவும் நல்லது. ஆனால், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சில கட்சிகள் எம்மோடு ஒத்துழைக்கவில்லை. அக்காலப் பகுதியிலும் அவர்கள், வேலை நிறுத்தப் போராட்டங்களையும், ஏன்...? எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் கூட மேற்கொண்டனர். பாதுகாப்புப் படையினரை தன் வசம் இழுத்துக் கொள்ளவே இவ்வாறான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர். என்றாலும், அதனை அரசியல் கட்சிகளும், அரசியல் சார்ந்த மக்களும் நிராகரித்தனர். மக்கள், ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கைகளைப் பலப்படுத்தினர். இந்தக் காரணங்களை எதிர்க் கட்சியினர் புரிந்துகொண்டால் மிகவும் நல்லது.

* கேள்வி : அரசாங்கத்திற்கு அரசியல் தீர்வு தொடர்பில் சரியான நிலைப்பாடு இல்லையென்றும், இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சி கூறி வருகின்றதே. இது தொடர்பில் தாங்கள் கூற விரும்புவதென்ன?

பதில் : நாம் ஏதாவதொன்றைக் கொடுத்து அல்லது பலவந்தமாக ஏற்றி இந்தக் காரியத்தில் இறங்காமல் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளினதும் அபிப்பிராயம் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது சிறப்பாக இருக்குமல்லவா? இந்த இடத்தில் ஐ. தே. க., ஜே. வி. பி., மற்றும் த. தே. கூ. ஆகிய அனைத்துக் கட்சிகளுக்கும் தமது ஆலோசனைகளை வழங்க முடியும். இதனை விட்டுவிட்டு, இவ்வாறான குறைகளைச் சுட்டிக்காட்டுவது, இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கேயாகும். இது மாத்திரமல்ல, அரசியல் இலாபத்தைக் கருதியே இவ்வாறான கைங்கரியத்தில் எதிர்க் கட்சி ஈடுபட்டு வருகிறது. நேர்தல் முறைமைச் சட்டத்தை மாற்றியமைக்கும் தெரிவுக் குழுவில் நானும் ஒரு பிரதிநிதியாகச் செயற்படுகிறேன். நாம் அனைவரும் நிராகரிக்கும் இந்த தேர்தல் முறைமைச் சட்டத்தை மாற்றவிருந்த அந்த அருமையான சந்தர்ப்பத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) யினரே சின்னாபின்னமாக்கினர்.

* கேள்வி : அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ள இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச அழுத்தங்களை தாங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிaர்கள்?

பதில் : சர்வதேச அழுத்தங்களுக்கு நாம் சிறந்த முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு நாமே பதிலைத் தேடிக் கொண்டால் சர்வதேசங்களுக்கு எவ்வகையிலும் எம்மைச் சீண்ட முடியாது. நாம் இதற்கான பதிலை அரசுக்கும் அப்பால் நமது நாட்டுக்காகத் தேடவேண்டும். இந்தப் பிரச்சினை காரணமாக, 1983 தொடக்கம் நமது நாட்டை அழித்தொழிப் பதற்கு சர்வதேச மட்டத்திலும் பாரிய திட்டங்களை மேற்கொண்டனர். தொடர்ந்தும் இதற்கு இடமளிக்கக் கூடாது. தற்போது பொதுவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பது எல்.ரீ.ரீ. ஈ. யினருக்காக அல்ல. நட்டு மக்களுக்காக வேண்டியே அந்தத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, சர்வதேச ஒத்துழைப்பு போன்றவற்றையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

* கேள்வி : மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் பற்றிக் கூற முடியுமா?

பதில் : காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலான சகல நடவடிக்கைகளும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே அமையப்பெற்றுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளையும் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாக எடுப்பதே மிகச் சிறந்த முடிவாகும். ஏதாவதொரு காரணத்தினால், ‘அந்த அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்’ என அக்குழு தீர்மானித்தால், அவை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின், அவற்றை வழங்கத் தேவையில்லை. அவற்றிற்கான இறுதித் தீர்மானத்தை எடுக்கவும் இத் தெரிவுக் குழுவுக்கு முடியும். இத் தீர்மானங்கள், சகல கட்சிகளின் ஏகோபித்த முடிவுகளுடன் எடுக்கப்படுவதால், அங்கே எதுவித சிக்கல்களும் ஏற்பட வழியில்லை. இவ்வாறான பொது இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்வைப் பெற்றுக் கொண்டால், திரும்பவும் சர்வஜன வாக்கெடுப்பு போன்றவற்றை நடத்தத் தேவையில்லை. அத்துடன், இதற்கென பெருந்தொகையான பணத்தைச் செலவழிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது.

* கேள்வி : அரசாங்கத்தின் அதிகமான அபிவிருத்திப் பணிகள், அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்டே நடைபெற்று வருவதாக, பரவலாகப் பேசப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் தரும் விளக்கம் என்ன?

பதில் : முதலில் நான் அம்பாந்தோட் டையில் பிறந்ததையிட்டு பெருமைப் படுகின்றேன். இங்கு நடைபெறும் அபிவிருத்திப் பணிகளைக் கருத்தில் கொண்டல்ல. ஹம்பாந்தோட்டையைப் போன்று அழகான ரம்மியமான ஒரு இடம், உலகில் வேறு எங்கும் கிடையாது என்றே நான் கருதுகின்றேன். அதிகமான உஷ்ணம் அதேபோன்று, குளிர்மையும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ளது. மீன்பிடித் துறை மற்றும் மீன்பிடித் தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன. என்றாலும், காலாகாலமாக இம்மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வில்லை. அம்பாந்தோட்டைக்கு மாத்திரமல்ல, கிராமத்துக்கும் வரவில்லை. நாடு என்றால், கொழும்பு மாத்திரம்தான் என நினைத்துக் கொண்டே சகல அபிவிருத்தி வேலைகளும் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்பே, அபிவிருத்திப் பணிகளை கிராமத்துக்கும் கொண்டு வந்தார்.

ஜனாதிபதி இந்நாட்டைத் துரிதமாக முன்னேற்றி வருகிறார். அம்பாந் தோட்டையை மாத்திரம் அவர் முன்னேற்ற வில்லை. கொழும்பு உள்ளிட்ட சகல கிராமங்களும் தற்போது அபிவிருத்தியடைந்து வருகின்றன. இதனை நாம் தற்சமயம் கண் கூடாகவே காண்கின்றோம். கொழும்பைப் பாருங்கள். எவ்வளவு அழகான நகரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்நாட்டில் மூன்று கார்பட் பாதைகள் மாத்திரமே இருந்தன. இரத்தினபுரி முதல் கொழும்புக்கும், கண்டி முதல் கொழும்புக்கும், காலியிலிருந்து கொழும்பு வரை மாத்திரமே இவ்வாறான கார்பட் பாதைகள் இருந்தன. ஆனால் தற்போது கிராமியப் பாதைகளுக்கும் கார்பட் இடப்பட்டு வருகின்றது. இதுபோன்று, நீர், மின்சாரம் என்பனவும் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டையைப் பொறுத்தமட்டில் 99 வீதமான மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குடிநீர்ப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவற்றை நுவரெலியாவில் அமைக்க முடியாது. இவை, அமைய வேண்டிய இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் காரணம் காட்டி குற்றம் சுமத்த முடியாது. தற்போது அம்பாந்தோட்டை மாவட்டம் மாத்திரமல்ல, நாட்டிலுள்ள முழு மாவட்டங்களுமே அபிவிருத்தியடைந்து வருகின்றன. இதனால் நமது நாடு துரித முன்னேற்றமடையும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதே ஜனாதிபதியினதும் நமது அமைச்சுக் குழுவினதும் நோக்கமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.