புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
கால்நடை உற்பத்தித் துறையில் யாழ். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

கால்நடை உற்பத்தித் துறையில் யாழ். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

ஜீhல்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 13 ஆம் திகதியன்று யாழ். வடமராட்சி பகுதிக்குச் சென்று அப்பிரதேசத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், பண்ணையாளர்களைச் சந்தித்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கரவெட்டி பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் பல்துறை சார்ந்த மக்களை சந்தித்து உரையாடினார். மேச்சல் தரை, கால்நடை மருத்துவ வசதிகள், கால்நடை பெருக்கத் திற்கான வழிவகைகள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.

அப்பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கால்நடை வளர்ப்பு பண்ணைகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார்கள். குறிப்பாக பால் சேகரிப்பு நிலையம், நீர் இறைக்கும் இயந்திரம், புல் தரைகள், மேய்ச்சல் தரை, கால்நடைக்கான உணவுகள் போன்ற விடயங்களில் நிலவும் குறைபாடுளை சுட்டிக்காட்டிய பண்ணையாளர்கள் எதிர்வரும் காலங்களில் இவற்றை பெற்றுத் தருமாறும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்கள்.

அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அமைச்சர், அப்பகுதிகளில் கால்நடை உற்பத்தி சங்கங்களை அமைப்பதன் மூலம் கால்நடை உற்பத்திக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அமைச்சுடன் இணைந்து செயற்பட கால்நடை உற்பத்தியாளர்கள் முன்வருவார்களானால் மேலதிக உதவிகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 5000 முட்டைக் கோழிக் குஞ்சுகளையும், கால்நடை உற்பத்திக்கு தேவையான 10 காளை மாடுகளையும் 100 நீரிறைக்கும் இயந்திரங்களையும், பண்ணையாளர்களுக்கான பால் சேகரிப்பு நிலையத்தையும் குளிரூட்டும் தாங்கிகளையும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கால்நடை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. கரவெட்டி பிரதேச செயலாளர் சத்தியசீலனின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றுகையில்,

மூன்று தசாப்த கால போர்ச் சூழலுக்குப் பிறகு நாட்டில் அமைதி திரும்பியிருக்கிறது. தற்போது இலங்கையில் எப்பகுதியிலும் சென்று கால்நடை அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் மாற்று பொருளாதாரத்திற்கு வழி செய்யும் வகையிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் நன்மை கருதியும் கால்நடை உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்ய அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாழ். வடமராட்சி பண்ணையாளர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் புதிதாக கால்நடை பண்ணைகளை ஆரம்பித்தல், பலன் தரக்கூடிய புதிய இன கால்நடைகளை வழங்குதல், கால்நடை துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல், பசளை உற்பத்தி, கோழி மற்றும் ஆடு வளர்ப்பதற்கான பண்ணைகளை நிர்மாணித்தல், சுயதொழில் முயற்சிக்கான ஆலோசனைகளை வழங்குதல், கால்நடைகளுக்கு தேவையான புற்றரைகளை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் இவ்வாண்டில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை மக்கள் கால்நடை வளர்ப்பில் அதிக நன்மைகளைப் பெறும் வகையில் பால் கிராமங்களை அமைத்து அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அமைச்சின் திட்டமாகுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலாளர் சத்தியசீலன் கருத்துத் தெரிவிக்கையில் கரவெட்டி பிரதேசம் 35 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 47 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 1500 பேர் வன்னியிலிருந்து மீளக்குடியமர்ந்துள்ளனர். இப்பகுதியில் சிறியளவில் கால்நடை உற்பத்தி நடைபெற்று வருகிறது. கால்நடை உற்பத்தியை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கேற்ற உதவிகளை கால்நடை அபிவிருத்தி அமைச்சு செய்ய முன்வர வேண்டுமென்றார்.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் எச். ஆர். மித்ரபால மற்றும் அரச அதிகாரிகள், கால்நடைவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ. எச். கமகே, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, மில்கோ நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


வன்னி நிலப்பரப்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் இரண்டாவது கரையோரப் பாதை

வடமாகாணம் என்பது யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணம், அங்குள்ள வளங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் தொடர்ந்தும் மக்கள் அபிவிருத்தியை நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரவாத நடவடிக்கை ஆட்கொண்டிருந்தது.

இப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதில் பிரதானமாக வடக்கின் வசந்தம், நேர்ப், கமநெகும, மகநெகும உள்ளிட்ட இன்னும் பல குறிப்பாக வடமாகாணத்தின் அபிவிருத்தியில் அரசாங்கம் கூடிய கவனத்தை கொண்டுள்ளது என்பதை அம் மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை வைத்து கூற முடியும்.

இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை வரிசைப்படுத்தும் போது வீதிப்புனரமைப்பே முதன்மை பெறுகின்றது. 2010ம் ஆண்டு காலப் பகுதியில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராகவும் தற்போதைய கைத்தொழில், வணிக அமைச்சராகவும் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், புத்தளத்திலிருந்து எலுவன் குளம், சிலாவத்துறை, மன்னாருக்கான பாதையினை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவினால் அது திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும், பூநகரி, சங்குப்பிட்டி பாதையின் சங்குப்பாட்டி பாலம் இவ்வருடம் ஜனவரி மாதம் 14ம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான இப்பாதை புனரமைப்பு பணிகள் அதிவேகமாக இடம் பெறுகின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அண்மையில் யாழ் நாவற்குழி - கேரதீவு சங்குப்பிட்டி பாதை புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இதற்கென 1387 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

17.4 கிலோ மீற்றர் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 20 மாதங்களில் இப்பணிகள் முடிவுறும்.

வன்னி மாவட்டத்தையும், யாழ் மாவட்டத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணத்துக்கான இரண்டாவது பிரதான பாதையான, இப்பாதையின் தற்போதைய நிலை குறித்து கைத்தொழில், வணிக துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அண்மையில் யாழிலிருந்து மன்னார் - சிலாவத்துறை- புத்தளம் வரைக்கும் பயணமொன்றை மேற்கொண்டார். சுமார் 40 சதவீதமான பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில் எஞ்சிய பணிகளை துரிதப்படுத்துவதன் அவசியம், அதன் மூலம் வர்த்தக மேம்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எடுத்துரைத்தார்.

வடக்கில் தமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டு வலயங்கள் என்பவற்றுக்கு இப்பாதை பெரும் உந்து சக்தியாக அமையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பிலிருந்து - யாழ்ப்பாணத்துக்கு, புத்தளம், அநுராதபுரம், வவுனியா, ஆனையிறவு ஊடாக 410 கிலோமீற்றர் காணப்படுகின்றது. இதேவேளை கொழும்பிலிருந்து புத்தளம், சிலாவத்துறை, முருங்கன்- விடத்தல்தீவு, பூநகரி, சங்குப்பிட்டி வழியாக 300 கிலோ மீட்டர் தூரமே பயணிக்க வேண்டும். மிகவும் குறுகிய யாழ்ப்பாணம்- கொழும்புக்கான இரண்டாவது கரையோரப் பாதை இதுவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.