வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
காலத்துக்கு பொருந்தும் அரசியல் நகர்வின் எதிர்பார்ப்பு

காலத்துக்கு பொருந்தும் அரசியல் நகர்வின் எதிர்பார்ப்பு

முஸ்லிம் காங்கிரஸில் நிலையாகுதல்

எமது நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களான நல்லாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்கின்ற அரசியல் பொறிமுறைக்குள் சிறுபான்மை அரசியலை நிலைப்படுத்தி அது சார்ந்த சமூகங்களின் அரசியல் உரிமைகளைப் வென்றெடுப்பதில் சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பலத்தை இன்னும் ஆழமாக ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

அந்தவகையில், இலங்கை முஸ்லிம்கள் இன்று நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரே ஒரு சமூகக் கட்சியாகவும் எமது மக்கள் ஏக ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்க கூடிய தனித்துவக் கட்சியாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகிறது. தேசிய அரசியலில் மாத்திரமல்லாமல் சர்வதேச அரசியல் சமூகங்கள் மற்றும் இயங்கங்களின் அவதானத்தையும் பெற்ற ஒரு கட்சியாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

அஷ்ரஃப் என்ற பெரும் நிலத்தின் மீது வளர்ந்து நிற்கும் விருட்சமாகி முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் நிழல் கொடுக்கும் மரம் ஒரு வரமாக எமது அரசியலை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இதுவரை காலமான போராட்டத்தில் பெரும் தலைவர் அஷ்ரஃபிற்குப் பிறகு இன்று இக்கட்சியை வழிநடத்தும் தலைமையின் தார்மீக அடையாளமாக இருக்கும் ரவூப் ஹக்கீம் பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் இக்கட்சியின் கம்பீரம் மாறாமல் அதன் நெஞ்சை நிமிர்த்தி வைத்திருக்கிறார். இதற்குப் பக்கபலமாக கட்சியின் உயர் பீடத்தினர் இருப்பதோடு, ஆரம்பகாலம் தொட்டு கட்சியின் விசுவாசத்தைச் சுமந்து கொண்டிருக்கும் கட்சிப் போராளிகளின் ஒத்துழைப்புக்களும் உறுதுணையாக இருப்பது வரவேற்க கூடிய ஒன்றாகும்.

இதுவரை காலமும் இந்தக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றவர்களின் உழைப்பும் கட்சியுடனான அவர்களது ஈடுபாடும் மதிக்கத்தக்க பெரும் பங்களிப்பாக இருக்கிறது. அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அசைவும் அதன் இருப்பும் இன்னும் திடப்படுத்தப்படுவதன் அவசியத்தையும் அதன் தொடர்ச்சியை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்ற வேலைத் திட்டங்களும் சமூகப் பொறுப்புக்களும் கட்சியினுள்ளும் வெளியிலும் முன்னெடுக்கப்படுவதன் தேவை இன்று மேலோங்கி இருப்பதனையும் நாம் உணரவேண்டும்.

ஒரு கட்சியின் தொடர்ச்சியை நிலைப்படுத்துவதிலும் அதன் இருப்பைத் திடப்படுத்துவதிலுமுள்ள செயற்பாடுகளில் முக்கியமானதாக இரண்டைக் குறிப்பிடலாம்.

01. சமூகத்தின் எல்லா இயங்கு தளங்களையும் ஒழுங்கு படுத்துகின்ற ஒன்றாக அது செயற்பட வேண்டும்.

02. அடுத்த தலைமுறைக்கு அரசியலைக் கைமாற்றும் பொறிமுறையும் அதற்கான ஈடுபாடும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

அரசியல் கட்சி என்பது உள்ளூராட்சி சபைகள் முதல் பாராளுமன்றம் வரை உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் அனுப்புகின்ற ஒரு செயல்முறையை மாத்திரம் கொண்டதல்ல. அது சமூகத்தின் எல்லாத் திசைகளையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு துருவமாகவும் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் வரலாறு, இருப்பு, ஒழுக்க விழுமியம், கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத அடையாளம் போன்ற எல்லாவகையான செயற்பாடுகளிலும் அவதானம் செலுத்தி அவற்றை ஒழுங்கு படுத்துகின்ற ஒரு பொறிமுறையை செயற்படுத்துகின்ற ஒரு இயந்திரமாகவும் எமது அரசியல் இருக்கவேண்டும்.

இதன்படி நமது சமூகத்தினை, நடைமுறை அரசியலின் அசைவோடும் நமக்கான அரசியல் போக்கோடும் வைத்திருக்கும் வகையில் ஆய்வரங்குகள், கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகள், ஆவணப்படுத்தல்கள் மற்றும் செயற்திட்டங்கள் என்று பல்வேறு இயங்கு தளங்களையும் எமது சமூகத்தினுள்ளும் சகோதர சமூகங்களோடும் தொடர் செயற்பாடுகளாக முன்னெடுக்கும் பொறுப்புக்கள் பற்றி நாம் சிந்திக்கும் ஒரு அரசியல் சூழல் எம்மை சூழ்ந்துள்ளது.

தேர்தல் காலத்தில் மட்டும் அரசியலைப் பேசுவதாகவும் அதற்காக செயற்படுவதாகவுமுள்ள ஒரு சமூகமாக மாத்திரமல்லாது, எமது சமூகம் தேசிய அரசியல் நீரோட்டத்தின் விளைவுகளுக்கு ஏற்ற இயக்கத்தினைக் காட்டக்கூடிய அரசியல் பலத்தை கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமான புதிய கோட்பாடுகள், கட்டமைப்புக்கள், கட்டுடைப்புக்கள், பரவலாக்கல்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். ஒரு சமூகக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இதன் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்தே செயற்படுகிறது எனலாம்.

அடுத்து புதிய தலைமுறையினர்களின் அரசியல் ஈடுபாட்டின் மூலம் கட்சியின் தொடர்ச்சியை நிலைப்படுத்துவதில் மூத்த தலைமுறையினர் தங்களின் வழிகாட்டுதல்களுடன் இளைய தலை முறையினரை நெறிப்படுத்தி தலைமுறை மாற்றத்தை நிகழ்த்துகின்ற ஜனநாயகமிக்க ஒரு கட்சியாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. தலைமுறை இடைவெளிகள் நீக்கப்பட்டு கட்சியின் தொடர்ச்சி எல்லாத் தலைமுறைகளுக்குள்ளும் நீட்சி பெற்றுச்செல்லும் ஒரு சமூகக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் நிலைபெற்றிருக்கிறது.

இதில் தலைவர் ரவூப் ஹக்கீம்“வேலி போட்டு கட்சியை வளர்க்க முடியாது” என்று கூறும் கருத்தின் விசாலம் முஸ்லிம் காங்கிரஸில் நிலையாகுதல் என்ற புதிய எண்ணக்கருவோடு வருகின்ற இளைஞர் சமூகத்திற்காக கட்சியின் கதவுகளைத் திறந்து கொடுப்பதாகவே இருக்கிறது.

தனக்கு மட்டும்தான் கட்சி, தான் மட்டும்தான் கட்சியிலிருக்க வேண்டும், தன்னை மீறி கட்சியில் யாரும் வந்துவிடமுடியாது என்று அடிமட்டத்திலான தடைகளைப் போடும் சிறு வேலிகள் கூட இந்தக் கட்சிக்குள் இருந்துவிடாமல், கட்சியை தலைமுறை மாற்றங்களுக்கு ஏற்ப சமூகத்தினுள் நிலைப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளை கட்சியின் கீழ் மட்டம் முதல் உயர்மட்டம் வரை கொண் டிருக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருப்பதனை இது எடுத்துக்காட்டுகிறது.

பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் ஆரம்பத்தோடு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இக்கட்சி பயணித்திருக்கும் அரசியல் வரலாறு எமது சமூகத்தின் புதிய தலைமுறையினருக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வடிவில் ஆவணப்படுத்தப்பட்டதாக கையளிக்கப்படல் வேண்டும். இது எதிர்கால சந்ததிக்கு இக்கட்சியின் அரசியல் நீட்சியை அறிவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவும் நிகழ்கால இளைஞர் சமூகம் சரியான ஓர் அரசியல் பாதையை தெரிந்துகொள்வதற்கான சிறந்ததொரு தொடக்கமாகவும் அமையும்.

இதன்படி பொருத்தமான காலகட்டத்தில் பொருத்தமான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் சமூக அக்கறைகள் பலவற்றிலும்இன்னும் விரிவாக காலூன்றிச் செயற்படும் என்பதற்கான சமூக நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதன் அரசியலோடு இணைகின்ற புதிய தலைமுறையினருக்கான வழி காட்டுதல்களுடன் நாமும் முஸ்லிம் காங்கிரஸில் நிலையாகுதல் என்ற கோஷத்தை எழுப்புவோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.