வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

தேசிய நல்லிணக்க முயற்சியில் சிறுபான்மை தரப்பின் பலவீனம்

தேசிய நல்லிணக்க முயற்சியில் சிறுபான்மை தரப்பின் பலவீனம்

 உள்நாட்டு இனமுரண்பாடு தொடர்பாக உலகளவில் விமர்சிக்கப்படும் நாடுகளில் இலங்கை பிரதானமான நாடாக உள்ளது. மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் நிறைவு பெற்றுள்ள போதிலும் சர்வதேச அரங்கில் எமது நாடு இன்னுமே சர்ச்சைக்குரியதாகவே விளங்குகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள், இனங்களுக்குகிடையிலான தேசிய நல்லிணக்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்றெல்லாம் பல்வேறு விடயங்களில் இலங்கை நிறைவேற்ற காரியங்கள் நிறையவே உள்ளன. எனினும் இப்பிரச்சினைகளுக்குகெல்லாம் நிரந்தரமான தீர்வைக்கண்டு நாட்டில் அமைதியைத் தோற்றுவிப்பதற்கான நகர்வு இன்னும் மந்தகதியிலேயே காணப்படுகிறது.

கடந்த கால யுத்த அவலங்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்கள் மத்தியில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் குறித்து அவநம்பிக்கை தோன்றியுள்ளமை ஒருபுறமிருக்க, சர்வதேச ரீதியில் எமது நாடு தொடர்பாக இன்னுமே சந்தேகப் பார்வை நிலவுவதே மோசமான விடயம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக சமீப காலமாக தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. தென்னிலங்கை அரசியல்வாதிகளும், வடக்கு கிழக்கு சிறுபான்மை அரசியல் பிரமுகர்களும் தங்களுக்குரிய கோணத்தில் இதனை விமர்சித்துத் தள்ளுகின்றனர். தேசிய ஊடகங்களில் புத்திஜீவிகள் ஆழமாக விமர்சிக்கின்றனர். இவர்களது விமர்சனங்களில் ஒரேயொரு விடயம் மாத்திரம் எமக்கெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. தேசிய நல்லிணக்கத்தின் வாயிலாக ஐக்கியம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற குறிக்கோள் இவர்களில் பலரது உள்ளத்தில் இருப்பதாகத் தென்படவில்லை. அரசியல்வாதிகளில் பலர் தங்களுக்குள் தெளிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களது இனத்தின் குரலாகவே அவர்கள் ஒலிக்கின்றார்கள். அனைத்து இனங்களுக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற பொதுநலனை இவர்களது பேச்சில் காண முடியாதிருக்கின்றது. தங்களது இனத்துக்காக மாத்திரம் குரலெழுப்புவதன் மூலம் வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ளலாமென்ற அரசியல் வியாபாரத் தன்மையே இவர்களது நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றது. இவ்வாறான போக்கு தென்னிலங்கை இனவாத அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியதன்று. சிறுபான்மையின அரசியல்வாதிகளிடமும் இத்தகைய போக்கையே காண முடிகின்றது. தேசிய நல்லிணக்கத்தைப் பொறுத்த வரை இதுவே ஆபத்தான முட்டுக்கட்டை!

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி விடயத்தில் தென்னிலங்கை இனவாத சக்திகளே பிரதானமான தடையென்பதே பொதுவான கருத்து. அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இங்கு பிரதானமாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். ஆனாலும் தீர்வு முயற்சிக்கான தடைகளை ஆராய்வதில் இதற்கு அப்பால் செல்ல வேண்டியதும் அவசியம்.

உத்தேச அரசியல் யாப்பை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளிடையே கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டுமென்பது உண்மைதான். எனினும் நிரந்தத் தீர்வை ஏற்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் இணக்கப்பாடு மாத்திரம் போதுமானதா என்பதே இங்குள்ள கேள்வி.

வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கிடையே அரசியல் இணக்கப்பாடு தோன்றாதவரை, தீர்வுக்கான முயற்சிகள் எதுவுமே பலன் தரப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இவ்விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் இன்னும்தான் புரிந்துணர்வைக் காண முடியாதிருக்கிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளெனக் கூறக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது நிலைப்பாட்டை தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. வடக்கும், கிழக்கும் இணைந்த பிராந்தியம் ஒன்றுக்குள் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் தீர்வொன்றை எட்ட வேண்டுமென்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம்கள் தரப்பிலுள்ள அரசியல் சக்திகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பானது வெளிப்படையாக அறைகூவல் விடுத்தும் வருகிறது.

இவ்வாறானதொரு சூழலில் முஸ்லிம் அரசியல் தரப்புகளிடமிருந்து சாதமான மனவெளிப்பாடுகளை இன்னுமே காண முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சமாதான அழைப்பை அவதூறு செய்யும் வகையில் முஸ்லிம் தரப்புகளிலிருந்து கருத்துகள் வெளிப்படுவதையும் காண முடிகிறது. வடக்கு கிழக்கு முஸ்லிம்களை சதி வலைக்குள் வீழ்த்துவதற்கே இவ்வாறான அழைப்பை தமிழ்க் கூட்டமைப்பு வெளியிடுவதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.

இக்கருத்துகள் அவர்களது அரசியல் ஆதாயத்துக்கானதாக இருக்கக் கூடும். எனினும் சமாதான அழைப்பை அலட்சியம் செய்வதென்பது இனநல்லிணக்கத்துக்கு எவ்வாறு வழிகோலப் போகிறது? அங்குள்ள அரசியல் தரப்புகள் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் இது.

[email protected]

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.