வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமையுள்ள சுயாட்சி

இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமையுள்ள சுயாட்சி

'எழுக தமிழ்' மக்கள் பேரணியில் பிரகடனம்யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

போதைப்பொருளைப் பயன்படுத்தி திட்டமிட்ட சீரழிவை நிறுத்த வேண்டும்

இணைந்த வடக்கு, கிழக்கின் தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் ஒரு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என நேற்று யாழ் நகரில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் எந்தத் தீர்வையும் ஏற்கப்போவதில்லை என்றும் புதிய அரசியல் யாப்பில் தமிழர்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 68 ஆண்டுகால அனுபவத்தின் ஊடாக ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வொன்று எந்த வடிவத்திலும் சாத்தியமில்லை என்றும் நேற்றைய பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தௌிவில்லாத அரைகுறை தீர்வொன்றை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமைகொண்ட சுயாட்சி, சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி முறைமை, தமிழர் அபிலாஷைகளை அங்கீகரிக்காத அரசியலமைப்பை ஏற்கோம், குடிப்பரம்பலை வலிந்து மாற்றுவதை நிறுத்த வேண்டும்

சர்வதேச விசாரணையே தமிழர்களின் ஏகோபித்த நிலைப்பாடு, இராணுவமயம் நீக்கப்பட வேண்டும், சகல அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்,போதைப்பொருளைப் பயன்படுத்தி திட்டமிட்ட சீரழிவை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்ைககள் அடங்கலான பிரகடனம் நேற்று எழுக தமிழ் நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

“எழுக தமிழ் பேரணி எழுச்சியுற பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் பேரணி இரண்டு அணிகளாக யாழ் முற்றவெளியை வந்தடைந்தது.

யாழ். நல்லைக் கந்தன் ஆலய முன்றலிலிருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் பேரணிகள் ஆரம்பமாகின.

இரு பேரணிகளையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் கொடியினை அசைத்து ஆரம்பித்து வைத்தார்.

நல்லூர் ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, நல்லூர் பின் வீதிவழியாக அரசடி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து கந்தர்மடம் சந்தியைச் சென்றடைந்தது. யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பலாலி வீதி வழியாக கந்தர்மடம் சந்தியை வந்தடைந்தது. இரு மருங்கிலும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஒன்றிணைந்து கந்தர்மடம் சந்தியில் இருந்து பலாலி வீதி வழியாக இலுப்பையடிச் சந்தி ஊடாக நாவலர் வீதி வழியாக கஸ்தூரியார் வீதியை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக காங்கேசன்துறை வீதிக்கு வந்து கோட்டை சுற்றுவட்டத்தினை சுற்றி முற்றவெளியில் நிறைவடைந்தது.

பேரணிக்கு ஆதரவாக வடக்கின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுப்போக்குவரத்து ஊடாகவும் விசேட போக்குவரத்துகள் ஊடாகவும் வந்து மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணியின்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் மக்களின் பண்பாடு கலாசாரத்தைச் சீரழிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி என்ன? எமது நிலம் எமக்கு வேண்டும். இராணுவமே வெளியேறு தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பினை நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறும், கோ‌ஷங்களை எழுப்பியவாறும் மக்கள் பேரணியாக வந்தனர்.

“எழுக தமிழ்” எழுச்சிச் சுடரினைப் போரினால் பாதிக்கப்பட்டு இரு கைகளையும் இழந்த ஒருவர் சுடரினை ஏற்றி கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, பின்னர் எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. பிரகடனத்தினை இருதய வைத்திய நிபுணரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய பி. லக்ஸ்மன் மக்கள் மத்தியில் வாசித்ததை தொடர்ந்து, மக்கள் அனைவரும் பிரடனத்தினை தீர்மானமாக ஒரே குரலில் ஏற்றுக்கொள்வதாக குரல் எழுப்பினார்கள். பின்னர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்உரையாற்றினார்.

இறுதியில் மக்கள் ஒரே குரலாக எழுக தமிழ் கோஷத்தினை எழுப்பி கூட்டத்தினை நிறைவுசெய்ததுடன், கூட்டத்தின் நிறைவில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி கையெழுத்தும் மக்களிடம் பெறப்பட்டன.

“எழுக தமிழ் பேரணியில், நல்லை ஆதின குருமுதல்வர், கன்னியாஸ்திரிகள், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் கட்சி உறுப்பினர்கள், மீனவ சங்க உறுப்பினர்கள், மீனவர்கள், வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், என வடமாகாணத்தின் 5 மாவட்டத்தினைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டனர்.இணைந்த வடக்கு கிழக்கில் இறைமைகொண்ட சுயாட்சி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.