வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
பாசிக்குடாவில் ஜீரணிக்க முடியாத சோகம்

பாசிக்குடாவில் ஜீரணிக்க முடியாத சோகம்

கடந்த 18 ஞாயிற்றுக்கிழமை மாலை தமது பிரதேசத்தில் என்ன நடக்கவுள்ளது அதனைத் தொடர்ந்து என்ன விபரீதம் இடம்பெறவுள்ளது என அறியாமல் கல்குடா பிரதேச மக்கள் தமது அன்றைய நாள் பொழுதினையும் வழமைபோன்று காலச் சுற்றோட்டத்திற்கு ஏற்ப செலவழித்தனர்.

அப்பொழுதுதான் அன்று மாலை கல்குடா கடலில் நண்பர்கள் மூவருடன் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவர் கடலில் மூழ்கி கடல் அலையினுள் அமிழ்த்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் பிரதேசத்தில் பல இடங்களிலும் காட்டுத்தீயாய் பரவியது.

இதனையடுத்து பிரதேசத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் அவ்விடத்திற்கு சென்றிருப்பார்களா, சகோதர சகோதரிகளும் தங்களது அண்ணன், தம்பிகள் சென்றிருப்பாரோ, நண்பர்கள் கூட தங்களுக்கு தெரியாமல் சகநண்பர்கள் கடல் குளிக்கச் சென்று இருப்பார்களோ என்ற விபரம் புரியாமல் அச்சத்துடன் காணப்பட்டார்கள்.

இதனையடுத்து சம்பவத்தில் சிக்கிக் கொண்டவர்கள் யாராக இருக்கலாம் என்று அறியாமல் பரபரப்புடனும் கவலையுடனும் சம்பவம் இடம்பெற்ற இடமான கல்குடா கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையை நோக்கி உண்மையான தகவலை அறிய ஓடோடிச் சென்றார்கள்.

அங்கு பிரதேசத்தின் மீனவ சுழியோடிகள் மற்றும் கடற்படையின் உதவியுடன் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கடலில் உயிருக்கு போராடிய மூவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருந்தனர். அவர்கள் ஏ. ரஜிதன் வயது (16) மற்றையவர் கே. டிலக்ஸன் வயது (16) தா. சுஜித் வயது (16) ஆகியோர்களாகும். காப்பாற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, மேலும் தெரியவந்தது இரு சகோதரர்களான சண்முகம் சதீஸ்குமார் வயது (21) என்பவரும் இவரின் இளைய சகோதரரான சண்முகம் சுரேஸ் வயது (18) என்வரையும் தேடும் பணி தொடர்ந்தது. பின்னர், உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்களும் மறுநாள் திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டன.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இரு சகோதரர்களும் சக மூன்று நண்பர்களுமாக ஜந்து பேர் குளிப்பதற்காக கல்குடா, குடாக் கல் கடற்கரைக்கு சென்றுள்ளனர். இங்கு குறிப்பிடப்படும் குடாக்கல் கடற்கரையானது மிகவும் ஆழமும் பேரலைக் கடலாகவும் இருக்கிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளிப்பது மிகவும் குறைவாகும். இது பாசிக்குடா கடல் கரை போன்றதல்ல என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளவே இதனை தெரிவிக்கின்றேன்.

அங்கு ஐந்து பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர்களில் சுரேஸ்குமார் என்பவர் கடலலையினால் அள்ளுன்டு செல்லப்பட்டுள்ளார்.

தமது சகோதரர் நீரில் அடித்துக் கொண்டு செல்வதை அறிந்த சதீஸ்குமார் அவரை காப்பற்ற முயற்சித்துள்ள அவ்வேளையில் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இவ் நிலவரத்தினை பார்வையுற்ற கரையில் நின்ற நண்பன் பு. டிலக்ஸன் விபரீதம் நிகழ்வதை அறிந்து நண்பர்களை காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பியுள்ளான்.

இதன்போது, அவ்வேளை பிரதேசத்தின் உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால் செய்வதறியாது தான் முன்வந்து அவர்களை காப்பாற்றியதாகவும் சம்பவத்தினை நேரில் கண்ட டிலக்ஸன் என்பவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் காலம் சென்றவரான சதீஸ்குமார் தமது வீட்டிற்கு வந்து தாம் தொழில் புரியும் பட்டியடிச்சேனை கல்குடாவிலுள்ள சிகை அலங்கார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அவர்கள் வழக்கம் போல் ஓய்வுநேரங்களில் குறித்த கடையில் நண்பர்களுடன் சேர்ந்து கதைத்திருப்பது வழக்கமாகும் என்றார்.

இதன்போது சதீஸ்குமாரின் மனைவிற்கு வீட்டில் வீட்டு வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கியதாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதேவேளை, அவரது மனைவி கர்பவதியாம்.இதனையடுத்து இருவரும் வீட்டிற்கு சென்று மனைவியை பார்த்து விட்டு அவர் தமது மனைவிற்கு இளநீர் வெட்டிக் கொடுத்து விட்டு மீண்டும் கடைக்கு திரும்பினோம்.

அப்போது கடலுக்கு குளிக்கச் செல்வோம் என்று கூறினார். இவ்விடயம் தமது மருமகனான மிதுவிற்கு (மிதுள்காந்) தெரியக்கூடாது என்றும் கூறினார். ஏன் என்றால் அவன் வீட்டில் உள்ளோருக்கு தெரியப்படுத்துவான் என்றார்.

பின்னர் ஏனையயோர்களையும் அழைத்துக் கொண்டு கடலில் குளிக்கச் சென்றோம். நாங்கள் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு செல்லவில்லை பொழுதுபோக்கினை கழிக்கவே சென்றோம்.

அப்போது போகும் வழியில் நாவல் மரத்தடியில் எங்களது துவிச்சக்கர வண்டி ஒன்றையொன்று மோதி விபத்திற்குள்ளானது. அதனையும் பொருட்படுத்தாது கடையில் சோடாவும் சீவல் பக்கட்டும் வாங்கிக் கொண்டு கடற்கரையில் வைத்து சாப்பிட்டு விட்டு எல்லோருமாக கடலில் குளித்தோம்.

அவ்வேளை ஏனைய நால்வரும் கொஞ்சம் ஆழத்தில் சென்று குளித்தனர். பின்னர் சதீஸ் ஒரு பக்கமாகவும் ஏ​னைய மூவரும் ஒரு பக்கமாக குளித்துக் கொண்டிருந்தனர்.இதன்போது அலையின் தாக்கத்தினானல் சதீஸ்குமார் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மற்றைய மூவரையும் காப்பாற்ற முயற்சித்தேன். அதில் இருவரை மட்டுமே காப்பற்ற முடிந்தது. சுரேசினை காப்பாற்ற முயற்சித்தேன் பயனளிக்கவில்லை.

அதேசமயம் அடம்பன் கொடியாவது என் கையில் இருந்திருந்தால் அவர்களை காப்பாற்றியிருப்பேன் என்று கவலையுடன் தெரிவித்தார். பின்னர் காப்பற்றிய இருவருடனும் இணைந்து ஏனைய இருவரையும் காப்பாற்றுவதற்கு தோனியினை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் இவர்கள் இருவரும் சோர்வுற்று காணப்பட்டதினால் என்னால் தனித்து நின்று செயல்பட முடியவில்லை.

அதன் பிற்பாடே அவசர பொலிஸ் பிரிவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து கல்குடா பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணயினை மேற் கொண்டனர் என்றார்.

இவர்களில் ஏ. ரஜிதன் வயது (16), கே. டிலக்சுமனன் வயது (16) ஆகியோா கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவத்தினை தொடர்ந்து. உயிரிழந்த இரு சகோதரர்களின் பெற்றோர்களான கல்குடா பட்டியடிச்சேனையினைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் வயது (49), அவரது மனைவி கணபதிப்பிள்ளை யோகலெட்சுமி வயது (46) ஆகியோர் தங்களது பிள்ளைகளுக்கு நேர்ந்த அவலத்தினை தாங்க முடியாது

வேதனையில் துடித்து எவருக்கும் தெரியாமல் இருவரும் திங்கட்கிழமை அதிகாலை (19) வீட்டு முற்றத்திலுள்ள மரமுந்திரி மரத்தில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இவ்விடயமானது மேலும் ஊரை சோகத்தில் ஆழ்த்தியது.

இருவரும் அன்றைய தினமே கடலில் விழுந்து தற்கொலை செய்வதற்காக பல முறை முயற்சித்த போது இதனை கண்ணுற்ற அவர்களது மூத்த மகளான ச. தினேஸ்வரி வயது (28) தெரிவித்ததவாது, அன்றைய தினம் தான் அவர்களுக்கு பல ஆறுதல் வார்த்தைகளை கூறி காப்பாற்றியதாக தெரிவித்தார்.அது வீண் போய்விட்டதாகவும் தனக்கு ஏற்பட்ட இந்நி​ைலமை எவருக்கும் ஏற்படக் கூடாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

எனது சகோதரர்கள் மிகவும் அன்பானவர்கள் இதே போன்று எனது தாய் தந்தையரும் என்னுடன் மிகவும் பாசமுள்ளவர்கள் அவர்கள் எனது ஆறுதல் வார்தையினை கேட்டு எனது வீட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.பின்னர் நான் தூங்கி விட்டதும் எனக்கு தெரியாமல் சென்று தற்கொலை செய்து கொண்டமை வேதனையாகவுள்ளது. எனக்கு தற்போது எனது உறவுகள் இல்லாமல் உள்ளதே என்று கதறி அழுதார்.

எனினும், பெற்றோர்கள் தற்கொலை புரிந்தமை தாங்க முடியவில்லை. இதனால் கல்குடா பிரதேசம் எங்கும் சோகத்தில் மூழ்கியது.

இந்தச் செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்த இலங்கை வாழ் மக்களின் மனங்களையும் இச் சோகம் பெரிதும் ஈர்த்துள்ளது.

பிள்ளைகள் இருவரினதும் இழப்பினால் நொந்து போய் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகம், கணபதிப்பிள்ளை யோகலெட்சுமி தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் இருவர் ஆண்கள், இருவர் பெண்களாகும்.

தினேஸ்வரி, சுதர்சினி ஆகிய இருவரில் சுதர்சினி என்பவர் ஒருசில மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்து விட்டார். இந்தப் பிரிவுத் துயரில் இருந்த பெற்றோருக்கு, இரு மகன்களின் பிரிவு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. மட்டுமல்ல விரக்தியின் விளிம்புக்கே இட்டுச் சென்றது.

அவசர உணர்வுகளால் உருத்தப்பட்ட பெற்றோர்கள், ஜீரணிக்க முடியாத முடிவுக்கு வந்தனரென்பது கவலைக்குரியது. என்றாலும் இவர்களின் முடிவை ஒரு தீர்வாக ஏற்கவே முடியாது. நித்தமும் நிதானமிழந்து நடைபிணமாக வாழ்வதைவிட இப்படி வாழ்வை முடித்துக் கொள்வது நல்லதென ஒருசாரார் குதர்க்கம் செய்தாலும் உயிரை மாய்த்துக் கொள்வதென்பது ஒரு முடிவின் முடிவல்ல. மாறாக இது சமூகச் சீரழிவின் ஓர் அங்கமாகவே இதனைக் கொள்ள முடியும்.

இயற்கையின் படைப்பில் இன்பமும் துன்பமும் மகிழ்ச்சியும் சோகமும் இரண்டறக் கலந்தவை என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டாலே போதுமானது. நாளை என்ற ஒன்று சமூகத்தில் எமக்கிருக்கிறதென்பதை நாம் புரிந்துக் கொண்டாலே போதும்.

தங்களது இருபிள்ளைகளும் கடலில் காவு கொள்ளப்பட்டதற்கு தூக்கில் தொங்குவதால் தமக்கு என்ன பரிகாரம் கிடைக்கப் போகிறது? இந்த சமூதாயத்துக்கு நாம் விடுக்கின்ற கேள்வி இது.

பெற்றோருக்கு தெரியாமல் கடலுக்கு சென்ற பிள்ளைகளால் சமூகம் ஒரு பாடத்தை கற்றிந்திருக்கிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.