வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
ஆணவக் கொலையின் அடுத்த பலியா ராம்குமார்?

ஆணவக் கொலையின் அடுத்த பலியா ராம்குமார்?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தினை கடந்த ஜூன்மாதம் உலுக்கிய கணனித்துறைப் பொறியியலாளரான சுவாதி பயங்கரமான முறையில்வெட்டிக் கொல்லப்பட்டமை தமிழகமெங்கனும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழகம் மாத்திரமல்ல தமிழ்கூறும் நல்லுலகெங்கனும்பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதன் பாதிப்பினை சமூக வலைத்தளங்களின் ஊடாக உணரக்கூடியதாக இருந்தது. தற்போது சுவாதி கொலையின் சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து கடந்த 19 ஆம் திகதியன்று தற்கொலை செய்ததாக சிறைத்துறை அறிவித்திருப்பது மீண்டும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதோடு காவல்துறை தொடர்பிலான சந்தேகங்களையும் கேள்விகளையும் தமிழக மக்கள் மத்தியில்தோற்றுவித்துள்ளது.

சுவாதி கொலையின் பின்னணி பற்றி பலரும் பல்வேறு கோணங்களில் இதுவரை ஆராய்ந்தாயிற்று, தமிழக காவல் துறை சுவாதியைக் கொலைசெய்தது ராம்குமார்தான் என்று சாத்தித்தாலும் ராம்குமாரோ சுவாதி யாரென்றே தெரியாதென்றே சாதித்து வந்தார். ராம்குமார் இறப்பதற்கு முதல்நாள் முக்கிய உண்மைெயான்றினைக் கூறப்போவதாகச் சக கைதிகளிடம சொல்லியுள்ளார். இதுவும் பலருக்கும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

சம்பவத்தினத்தன்று சி.சி.டி.வி.யில் பதிவான அந்த உருவம் மட்டுமே கொலையாளியை நெருங்குவதற்கான கருவியாக கருதப்பட்ட நிலையில் அந்த உருவம் ராம்குமார்தான் என்று எதன் அடிப்படையில் பொலிசார் முடிவெடுத்தனர்?

சிகிச்சையில் இருந்த ராம்குமாருக்கு சரிவர மயக்கம் தெளியாத பொழுதே வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கொலைக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே குற்றவாளி என்றும் பொலிஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது.

கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் ராம்குமாரால் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடிந்தது? ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராம்குமார் நன்றாக பேச 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தது உண்மை எனில் நிஜமாகவே வாக்குமூலம் பெறப்பட்டதா?

முறையாக அடையாள அணிவகுப்பு நடத்தாமல் ராம்குமாரின் புகைப்படத்தை கொலையாளி என்று கூறி ஊடகங்களில் வெளியிட்டது ஏன்?

சுவாதி யாரோ ஒருவன் அவரை பின் தொடர்வதாக கூறினார் என்றும் அந்த நபரை தான் சில முறை பார்த்துள்ளதாகவும் அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார். பிடிபட்ட ராம்குமார்தான் பின் தொடர்ந்த அந்த நபர் என்று அந்த தோழி ஊர்ஜிதப்படுத்தினாரா?

அந்த தெருவில் தினமும் நடமாடிய ராம்குமாரை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம். உணவருந்த செல்லும் இடம், செல்போன் ரீசார்ஜ் என்று ஒரு சில இடங்களில் பரிச்சயம் கூட ஆகியிருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு கூடவா அது ராம்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை? ராம்குமார் சென்னையில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்ததாக பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர் என்று தொலைக்காட்சிகளில் ஓயாமல் அறிவிட்டிருந்த போதும் ஏன் அந்த கடையில் உள்ள யாரும் ராம்குமாரின் மேல் சந்தேகப்படவில்லை. அந்த துணிக்கடையின் பெயர் என்ன? அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து பொலிசார் உறுதி செய்தார்களா? ஆனால் தற்போது ராம்குமார் சென்னையில் வேலையே பார்க்கவில்லை என்று தெரியவருகிறது. கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்னர் சுவாதியை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்போது சுவாதி அடித்தவரிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு சுவாதி அமைதியாக ரயில் ஏறி சென்றதாகவும் அதை நேரில் பார்த்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அடித்த நபர் கலராக இருந்தார் எனவும் கொலை செய்து விட்டு ஓடியது அன்று அடித்த நபர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் சுவாதியை அத்தனை பேர் முன்னிலையில் அடித்தது யார்? அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை பொலிஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன்? தமிழ்செல்வனிடம் முறையாக பொலிஸ் விசாரணை நடைபெற்றதா? அவர் கொலையாளியை நேரில் பார்த்ததாக தெரிவித்திருப்பதால் அவரை அணுகி ராம்குமார்தான் அந்த கொலையாளியா என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு அதன் காரணமாக ராம்குமார் சுவாதியை ஒருதலையாக காதலித்து, அதனை ஏற்க சுவாதி மறுத்தும் பின் தொடர்ந்து காதலை கூற, சுவாதி கோபமடைந்து தனது உருவத்தை விமர்சித்து திட்டியதால் ராம்குமார் அவரை வெட்டி கொலை செய்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் முகநூல் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தகைய குறுஞ்செய்திகள் பொலிசாரால் கையகப் படுத்தப்பட்டனவா?

சுவாதியின் முகநூல் பக்கம் அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க முடக்கப்பட்டாதாக கூறப்படுவது உண்மை என்றால் கொலையாளியை பிடிக்க முனையாமல் கொலையாளியை நெருங்க உதவும் கருவிகளை முடக்க நினைத்ததன் காரணம் என்ன?

சுவாதி அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த கொலை அவர்களது குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விடாமல் ஒருதலை காதல் என்று மட்டும் தீவிரமாக விசாரித்ததின் பின்னணி என்ன?

கொலையாளியை பிடிப்பதற்கு முன்னரே சுவாதியின் தந்தை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முதலமைச்சருக்கு அவசரமாக மனு செய்ததன் பின்னணி என்ன?

சுவாதியின் பெண் தோழி ஒருவர் முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவரிடம் சுவாதி சில இலட்ச ரூபாய் பெற்றதாகவும் அதனால் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இது உண்மையா? அந்த நண்பர் யார்? அவருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் பொலிசார் தீவிரமாக விசாரிக்கவில்லை?

சுவாதி ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் காதலித்த அந்த நபர் யார்? சுவாதிக்கும் அவர் முன்னால் காதலருக்கும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் பச்சத்தில் அந்த நபரை ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை?

சுவாதி இறந்த இரண்டு நாட்களுக்குள் பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று இணையத்தில் செய்தி பரவ என்ன காரணம்? அச்செய்தியை பரப்பியது யார்? அவர்களைப் பொலிசார் கண்டுபிடிக்காதது ஏன்?

பெங்களூரைச் சேர்ந்த பிலால் சுவாதி கொலையான அரை மணி நேரத்திற்குள் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்?இவையெல்லாவற்றுக்கும் உரிய விடையை தமிழக காவல்துறை கொண்டிருக்குமானால் உண்மையில் ராம்குமார் விடயத்தில் பலரும் கொந்தளிப்பினை வௌிக்காட்டியிருக்கமாட்டார்கள்.

மாறாக, ராம்குமார்தான் கொலையாளி என்பதை முன்பே தீர்மானித்து அதற்கேற்றவாறு சாட்சிகளை காய்நகரத்துவது போன்ற தோரணையில் பொலிஸார் செயற்பட்டதுதான் அனைவரையும் காவல்துறையை சந்தேகக் கண்கொண்டு பார்க்கச் செய்தது.

உண்மையில் ராம்குமார்தான் சுவாதியைக் கொன்றிருப்பின் அதற்கான குற்றஉணர்வில் தற்கொலை செய்து கொண்டதாக நியாயப்படுத்தலாம். ஆயிரம் கொலையாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாதென்கறத சட்டம்.

ஆயினும் குற்றம் புரியாமலே தண்டனை ராம்குமாருக்கு வழங்கப்பட்டிருப்பின் காதல் பழிவாங்கல்கள், ஆணவக் கொலைகள் இவ்வாறு வேறு ரூபங்களில் நிறைவேற்றப்படுவதனை தடுக்க முடியாமல் போய்விடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.