வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

யுத்தநிறுத்தம்

முறிந்தும் முறியாத

யுத்தநிறுத்தம்

செப்டெம்பர் 12 ஆம் திகதி சூரியன் மறையும் போது குறைப்பிரசவமாகத் தான் போர் நிறுத்தம் ஆரம்பமானது. குழந்தையை காப்பற்ற வேண்டுமானால் அதற்கு பக்குவமாக மருந்து செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை.

போர் நிறுத்தம் ஆரம்பமானபோது மோதல்கள் தணிந்தது என்னமோ உண்மைதான் ஆனால் அது நிற்கவில்லை. ஆங்காங்கே சண்டைகளுக்கு பஞ்சம் இருக்கவில்லை. இப்படியான மோதல்களை தடுக்க கொண்டுவந்த யுத்த நிறுத்தத்தில் எந்த பொறிமுறையும் இல்லை.

அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜெனீவாவில் மாதத்திற்கு ஒரு முறையாவது கூடி ஓயாமல் பேச்சுவார்த்தை நடத்தியே இந்த போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இந்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதற்கு என்ன சிரியாவில் இந்த நாடுகள் நேரடியாக சண்டைபிடிப்பதில்லை. உசுப்பேற்றும் வேலையைத் தான் தீவிரமாக செய்கின்றன.

சிரியாவில் சண்டை பிடிக்கும் தரப்புகள் முழு விருப்பத்தோடு யுத்த நிறுத்தத்திற்கு போகவில்லை. அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. ரஷ்யாவை பொறுத்தவரை யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவது சற்று இலகுவான வேலை. தான் ஆதரவளிக்கும் சிரிய அரச தரப்பை சம்மதிக்க வைத்தால் போர் நிறுத்தத்தை கொண்டு வந்து விடலாம்.

அமெரிக்காவின் நிலைமை அப்படி அல்ல. ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை எதிர்த்து ஒரு தரப்பு மாத்திரம் துப்பாக்கி தூக்கவில்லை. தெருவுக்கு ஒரு குழுவிருக்கிறது. இதிலே அமெரிக்காவின் சொல்வார்த்தை கேட்கும் கிளர்ச்சியாளர்கள் சொற்பம். அவர்களை வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு கட்டுப்படுத்த முடியும். மற்றையவர்கள் யுத்தநிறுத்தத்தை மீறினால் யாருக்கும் தட்டிக்கேட்க அருகதை இல்லை.

எப்படியோ இந்த இரு தரப்பை சாமாளித்து யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்தோம் என்றாலும் இவர்களை தண்டி மற்றொரு கூட்டமும் சிரிய யுத்தத்தில் பங்கு கொண்டிருக்கிறது. இஸ்லாமியவாதிகள், ஜிஹாதிக்கள் அப்படி இல்லை என்றால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திய கூட்டம். இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்), ஜபத் பதாஹ் அல் ஷாம் போன்ற குழுக்கள் இந்த ரகத்தை சேர்ந்தவை.

அதாவது சிரியாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும் இவர்களுடனான யுத்தம் முடியவில்லை. இவர்களை யார் வேண்டுமானாலும் தாக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் உடன்பாட்டில் தனி குறிப்பே எழுதப்பட்டிருக்கிறது.

அதிலும் யுத்த நிறுத்தம் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு வெற்றிகரமாக நீடித்தால் இந்த இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டணி சேர்ந்து தாக்குதல்களை ஆரம்பிக்கும் என்று மற்றொரு நிபந்தனை உண்டு. இது சற்று வினோதமான யுத்த நிறுத்தம் என்பதை சொல்வதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

கடைசியில் இந்த நிபந்தனை தான் யுத்த நிறுத்தத்தை சொதப்ப காரணமாக மாறியது. டெயிர் அல் சூர் பகுதியில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்துவதாக கூறி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை குண்டுகளை போட்டு விட்டு வந்தன. கடைசியில் பார்த்தால் அந்த போர் விமானங்கள் குண்டு போட்டிருப்பது சிரிய துருப்புகளின் தலைக்கு மேல். அங்கு சிரிய படையினரும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக சண்டை பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது. அது தெரியாமல் அமெரிக்க ஆதரவு விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டன. 62 சிரிய துருப்பினர் கொல்லப்பட்டு விட்டார்களாம்.

அன்றே போர் நிறுத்தத்தின் பாதி உயிர் போய் விட்டது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும் சிரியாவும் அமெரிக்காவை கண்டபடி திட்டின. ஐ.எஸ்ஸுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படை இந்த வான் தாக்குதலை நடத்தியதாக கூறியது அதன் உச்சம்.

போர் நிறுத்தத்தின் முக்கியமான நிபந்தனை சிரியாவில் உதவிகள் செல்ல முடியாத முற்றுகை பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை அனுப்ப இணங்கியதாகும். ஆனால் அது பேச்சோடு சரி. ஐ.நா முதற்கொண்டு தொண்டு நிறுவனங்கள் உதவி பொருட்களை லொரிகளில் ஏற்றி சிரியாவுக்கு செல்ல ஆயத்தமாயின. ஆனால் போகத்தான் முடியவில்லை.

குறிப்பாக கிழக்கு அலெப்போவின் கிளர்ச்சியாளர் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கென்று 20 டிரக் வண்டிகள் 185,000 பேருக்கு மாதத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணிக்க தயாராக இருக்கின்றன. என்றாலும் அந்த லொரி வண்டிகள் ஒரு வாரத்திற்கு மேலாக துருக்கி எல்லையை தாண்டி போக முடியாமல் தடுமாறுகின்றன.

இந்த டிரக் வண்டிகளுக்கான பாதுகாப்பை ஐ.நா கேட்கிறது. ஆனால் சிரியாவில் யுத்த தரப்புகள் உதவி வண்டிகளைக் கூட உள்ளே விடும் மனோ நிலையில் இல்லை.

குறிப்பாக கிழக்கு அலெப்போவுக்கு செல்லும் பிரதான வீதியில் இருந்து சிரிய அரச படைகளும் சிரிய கிளர்ச்சியாளர்களும் விலகி இருக்க வேண்டும் என்பது ஐ.நாவின் பிரதான கோரிக்கை. ஆனால் இரு தரப்பும் விடாப்பிடியாக அங்கு குந்தி இருக்கின்றன. சிரியாவின் ஏனைய பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் இதே இழுபறி நிலைதான்.

இப்படியான யுத்த நிறுத்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று உதவி இன்றி சிக்கி தவிக்கும் சிரிய மக்களே திட்டும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இப்படியான நேரத்தில் தான் உதவி வாகனங்கள் மீதே குண்டுகள் விழுந்து யுத்த நிறுத்தத்தை ஒன்றுமில்லை என்று ஆக்கியது. அலெப்போ நகரை ஒட்டி இருக்கும் உரும் அல் குப்ரா நகரில் 12 மனிதாபிமான உதவிகளை ஏற்றி இருந்த லொரிகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. தொண்டு பணியாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டார்கள்.

சிரிய அரச படை யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என்று கடந்த திங்கட் கிழமை அறிவித்து ஒருசில மணி நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்தது. சிரிய அரச படை அல்லது ரஷ்ய போர் விமானங்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஏகோபித்த கூற்று.

எனவே, ஐ.நா மற்றும் அமெரிக்கா சேர்ந்து ரஷ்யாவை திட்டித் தீர்த்தது. ஆனால் ரஷ்யா கதையை புரட்டிப் போட பார்க்கிறது. அதாவது சேதமாகி இருக்கும் லொரி வண்டிகளை பார்த்தால் இது வான் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சேதம் போல் தெரியவில்லையாம். தரையிலேயே ஏதோ தீ விபத்து ஏற்பட்டு உதவி வாகனங்கள் எரிந்து விட்டதாம். எனவே யுத்த நிறுத்தத்தை தோல்வி அடையச் செய்ய கிளர்ச்சியாளர்கள் வேண்டும் என்றே செய்த வேலை என்பது ரஷ்யாவில் தர்க்கம்.

இப்படி கதையை புரட்டிப் போடுவதில் ரஷ்யா கில்லாடி என்பது உலகுக்கே தெரியும். உக்ரைனில் மலேஷிய பயணிகள் விமானம் ஏவுகணை தாக்கி வீழ்த்தப்பட்டபோதும் ரஷ்ய இதுபோன்று சாக்குப் போக்கு சொன்னதை உலகம் இன்னும் மறந்திருக்காது.

இந்த உதவி வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு பின் சூடு சொறணை இருக்கும் யாரும் சிரியாவில் யுத்த நிறுத்தம் ஒன்று நீடிப்பதாக நம்ப மாட்டார்கள். ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் விடுவதாக இல்லை. யுத்த நிறுத்தத்தை பாதுகாக்க மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றன.

என்றாலும் உதவி வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னர் சிரியா விடயத்தில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் நல்லுறவு இல்லை. கடந்த வாரம் இரு நாடுகளும் பாதுகாப்பு சபையிலேயே வாய்ச்சண்டையில் ஈடுபட்டன.

எனவே, இந்த யுத்த நிறுத்தம் முறிந்தால் சிரியாவின் நிலை இருப்பதை விடவும் மோசமாகிவிடும். அசாத் அரசுக்கு நாடு முழுவதையும் மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு திராணி இல்லை. மறுபக்கம் கிளர்ச்சியாளர்கள் தான் கைப்பற்றி வைத்திருக்கும் பகுதிகளுக்கு அப்பால் முன்னேறும் அளவுக்கு பலம் பெறவில்லை.

மறுபக்கம் குர்திஷ்களுக்கு எதிராக அண்டை நாடான துருக்கி தனியே படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருப்பதால் அவர்களாலும் மேலும் முன்னேற்றம் காண முடியாது என்பதோடு துருக்கி தனது பக்கத்திலும் யுத்தத்தை மேலும் குழப்பி இருக்கிறது. எல்லா பக்கத்தாலும் அடிவாங்கும் ஐ.எஸ் குழு சிரியாவில் தனது தந்திரோபாயத்தை மாற்றிக்கொள்ளுமே ஒழிய ஒதுங்கிப் போய்விடாது.

எனவே சிரிய யுத்தம் வெற்றி தோல்வி இன்றி தொடர்வதற்கே அதிக வாய்ப்பு இருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.