வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவோம்

வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவோம்

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் பாக்கீர் மாக்கார்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தூர நோக்குடன் செயற்பட்டு தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டு அடிப்படையில் நல்லாட்சிப் பாதையில் செழிப்பான நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதே தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணியாகும் என தேசிய ஊடக நிலையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி விசும்பாயவில் தனது கடமையைப் பொறுப்பேற்ற தன் பின்னர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தேசிய ஊடக நிலையத்தின் செயற்பாடுகள் பற்றி தினகரன் வாரமஞ்சரிக்கு சிறப்பு நேர்காணலொன்றை அளித்தார். அதன் போது அவர் மேற்கண்ட கருத்தை உறுதிப்படுத்தினார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி : புதிய நிறுவனமொன்று உருவாக்கப்பட்டு அதுவும் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட பொறுப்பொன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் : தேசிய ஊடக நிலையம் என்பது எமக்குப் புதிய தொன்றாக இருக்கலாம். ஆனால் உலகளாவிய மட்டத்தில் பல நாடுகளில் இதுபோன்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல முன்னணி நாடுகளில் ஊடக மத்திய நிலையங்கள் இயங்குகின்றன. தொழில் வாண்மை ரீதியில் சர்வதேச தரத்துக்கு இந்த நிலையத்தையும் கொண்டு வருவதற்கு திட்டங்களை வகுக்கவிருக்கின்றோம்.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நல்லாட்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு ஊடகங்களை ஒருங்கிணைத்து சரியான தகவல்களை, செய்திகளை நாட்டு மக்களுக்கு கிட்டச் செய்வதற்கான பணியையும் மேற்கொள்வதே எமது நிலையத்தின் முக்கிய பணியாகும். ஊடகத்துறையினருடன் எனக்கிருக்கும் நட்புறவு இதற்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

கேள்வி : நாட்டில் வெளிவரும் ஊடகங்களுடன் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றப் போகின்றீர்கள்?

பதில் : ஊடகங்களுக்கு உத்தரவுகளைப் போட்டு அவற்றுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதல்ல எமது எண்ணம். ஊடகத்துறையினரின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதோடு. எமது ஆலோசனைகள், ஒத்துழைப்புகளை அவர்களுக்கும் பெற்றுக் கொடுப்போம். தேவைப்படுமானால் அறிவுரைகளைக் கூட எம்மால் வழங்க முடியும்.

இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றோம். ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் மாதமிருமுறை சந்திப்புகளை மேற்கொண்டு ஆரோக்கியமான ஊடகத்துறையை கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றோம்.

கேள்வி : ஊடக மத்திய நிலையத்தை அமைப்பதன் பிரதான நோக்கம் என்ன?

பதில் : நாட்டின் வரலாற்றில் இது ஒரு புதிய முயற்சி என்பதை ஏற்கனவே தெரிவித்தேன். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதி செய்வதும், தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதுமே எமது பிரதான இலக்குகளாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.

இனரீதியில் பிளவுண்டிருந்த நாட்டை நல்லாட்சியின் மூலம் மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இந்த மாற்றத்துக்கு 2015 ஜனவரி 8ஆம் திகதியன்றே அடித்தளமிடப்பட்டது. பதவியேற்று ஒருவருட காலத்துக்குள் அரசு உரிய இலக்கை நோக்கிப் பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சகல சமூகங்களையும் சரிநிகர் சமானமாக ஏற்று சின்ன சின்ன குறைபாடுகளை நிவர்த்திப்பதன் மூலமே இன ஐக்கியத்தை இந்த மண்ணில் ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். மக்கள் எதிர்பார்க்கும் சமாதான சக வாழ்வுக்கு தேசிய நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும். அந்த தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது முதற் பணியாகும். அதனூடாக இன விரிசல்களை முடிவுக்குக் கொண்டு வந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு முனைப்புக் காட்டி வருகின்றது. நாடு யுகமாற்றமொன்றுக்குள் பிரவேசித்துள்ளது. அந்த மாற்றமானது தேசத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான இலக்கை முன்வைத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது.

கேள்வி : தமிழ் – சிங்கள ஊடகங்களின் பார்வை, அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் உங்களது பார்வை குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

பதில் : இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால் மிக அவசியமானதும் கூட ஊடகத்துறை சார்ந்தோர். இன, மத, மொழி, வேறுபாடுகளைக் கடந்து சிந்திக்கவேண்டும். செயற்பட வேண்டும். எனினும் அவ்வாறான சிந்தனைப்போக்குடையவர்களை மிக அரிதாகவே காணப்படும் நிலைதான் உண்மை. சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களை அல்லது அம் மொழியைப் பேசுவோரைத் திருப்திப்படுத்தும் விதத்தில் எழுத வேண்டியுள்ளது. அதேபோன்று தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழி பேசும் ம்ககளுக்காகவே எழுதவேண்டிய நிலை. ஆங்கில ஊடகங்களைப் பொருத்தளவில் சற்று வித்தியாசம் இருக்கலாம்.

யதார்த்தத்தை, உண்மையை எழுத வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருந்தாலும் கூட சந்தை வாய்ப்பையும் மொழி சார்ந்த மக்களையும் கருத்தில் கொண்டு எழுத வேண்டிய தேவை அங்கு காணப்படுகின்றது. இதனை மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் ஓரளவுக்கேணும் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.

சில ஊடகங்கள் கடுமையான போக்கில் இருப்பதை மறுக்க முடியாது. அவ்வாறு தமது நிலைப்பாட்டை கருத்துக்களை வாசகர்களிடம், மக்களிடம் திணிக்க முற்படுவது ஊடக தர்மத்தை மீறும் செயலாகவே நான் பார்க்கின்றேன். ஊடகவியலாளர்கள் தமது எழுதுகோல்களை புனிதமாகக் கருதி அதனை நீதியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இத் தருணத்தில் முன்வைக்கின்றேன்.

நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்பட்டு எழுதுகின்றோம். தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். அதனால் ஏற்பட்ட தவறுகளை, பிழைகளை பிற்காலத்தில் கருத்திற் கொண்டுள்ளோம். மொழிப் பிரச்சினை, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் நிறையவே தவறு செய்திருக்கின்றொம். தொடர்ந்தும் அதே வழியில் நாம் பயணிக்க முடியாது. சரியான பாதையில் செல்லவேண்டும். ஜனாதிபதி, பிரதமர் இருவரும் சரியான பாதையைத் தேர்தெடுத்திருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் அந்த முயற்சிகளுக்கு ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் சகலதும் ஆதரவளிக்க வேண்டும்.

கேள்வி : இன்றைய அரசியல் களநிலையில் உங்களது பணி எவ்வாறாக முன்னெடுக்கப்படும்? கட்சி அரசியல் சாயம் பூசப்பட்டதாக மக்கள் எண்ணுவார்களா?

பதில் : எமது பணி இன, மத, மொழி, கட்சி, அரசியல் கடந்ததாகவே இருக்கும். யாராவது வேறு விதமாகப் பார்த்தால் அதற்கு எம்மால் எதுவும் செய்யமுடியாது. இனங்கள் ஒற்றுபட வேண்டும். வேறுபாடு இருக்கக்கூடாது. அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாகவே இந்த தேசிய ஊடக மத்திய நிலையம் செயற்படும். கட்சிசார்ந்ததல்ல. சகலரும் பயனடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கட்சி அரசியலுக்கு அப்பால் நின்றே நான் செயற்படுகின்றேன். அன்றைய தவறான அரசியல் இன்று கிடையாது. பாருங்கள் பிரதான இரண்டு கட்சிகள் ஒன்றாக கைகோர்த்திருக்கின்றன. வேறு சில கட்சிகளும் இந்த அரசுக்கு ஆதரவளித்திருக்கின்றன. நிறக் கண்ணாடி அணிந்து பார்க்காமல் வெள்ளையாகப் பார்ப்போமானால் எல்லாம் தாமாகவே நடக்கும்.

ஒன்றுபடுவதன் மூலமே எந்தச் சவாலையும் இலகுவாக வெற்றிகொள்ளமுடியும். ஒற்றுமையில் தான் நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கின்றது. நாம் இரண்டுபட்டு, தொடர்ந்தும் பிளவுபடுவோமானால் அழிந்துபோய் விடுவோம். சிங்கப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள் லீகுவான்யூ அதிகாரத்துக்கு வந்ததும் இனம், மதம், மொழி எதனையும் பார்க்கவில்லை. தண்ணீர் மட்டும் என்றிருந்த நாட்டை இன்று உலகம் திரும்பிப்பார்க்குமளவுக்கு மாற்றிவிட்டார்.

தமிழர்கள், சீனர்கள், முஸ்லிம்கள் என்ற சகலரையும் ஒன்றுபடுத்தினார். அனைவரையும் சிங்கப்பூர் மக்கள் என்ற ஒரே வார்த்தைக்குள் அணி திரட்டிச் செயற்பட்டதன் பிரதிபலன் சிங்கப்பூரை உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதனைப் போன்று ஏன் நாமும் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்றில்லாமல் இலங்கையர்களாக ஒன்றுபட முடியாது என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன். ஒன்றுபட்டால் நிறையவே சாதிக்கலாம். வேற்றுமைப்பட்டால் அழிவு ஒன்றுதான் மிஞ்சும். நல்லெண்ணத்துடன் சிந்தித்து செயற்பட்டு நல்லிணக்கம், சகவாழ்வுக்கான பயணத்தில் ஒன்றிணைந்து பயணிக்க சகலரும் முன்வர வேண்டும்.

நிச்சயமாக எமக்கும், எமது நாட்டுக்கும் நல்லதொரு எதிர்காலம் உண்டு என்பதை இத்தருணத்தில் உறுதி படத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.