வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
வேலைவாய்ப்பு விடயத்தில்

வேலைவாய்ப்பு விடயத்தில்

இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார்

நிதிச் செயலாளர் - --மலையக மக்கள் முன்னணி, உப தலைவர் -- தமிழர் முற்போக்கு கூட்டணி

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்து முகமாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதில், இனப்புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக பரஸ்பரம் மொழி அறிவை விருத்தி செய்வதற்கும் நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யாரும் யாருடைய மொழியையும் கற்கலாம், அதற்காக வேறு இனத்தின் தொழில்வாய்ப்பு விகிதாசாரப் பங்கீட்டைப் பாதிப்புறச் செய்யும் வகையில் அது அமைந்துவிடக்கூடாது என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார்.

நல்லிணக்கச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினராகவிருக்கிறார். அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த அவர், அந்த நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டியெழு-ப்பப்பட்டமை குறித்த ஆய்வுச் செயலமர்வில் பங்குபற்றிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

"இனங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கட்டியெழுப்புவது எங்ஙனம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமாகவிருந்தால், தென்னாபிரிக்காவிலேயே நாம் பாடங்களைக் கற்றுக்ெகாள்ள வேண்டும். அங்கு நிறவெறியினால் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுத் தற்போது அந்தப் பிரச்சினைகளிலிருந்து முற்றாக மீண்டிருக்கிறார்கள்.அங்கு நீதித்துறை மிகச் சுயாதீனமாக மட்டுமன்றி ஜனநாயகப் பண்புகளும் அதி உச்ச அளவில் பேணப்படுகின்றன" என்கிறார்.

"தென்னாபிரிக்கா விஜயத்தில் கற்றுக்ெகாண்ட பாடங்களைக் கொண்டு இலங்கையில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த பரிந்துரைகள் ஏதும் உள்ளனவா?

"நான் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். அதாவது அங்கு நீதித்துறை மிகவும் ஜனநாயக ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உதாரணமாக, நீதவான் கீழ்ப் பகுதியில் அமர்ந்திருக்க, பொது மக்கள் உயர்ந்த இடத்தில் அமர்ந்து வழக்கு விசாரணையைப் பார்க்கின்றார்கள். அவ்வாறான ஒரு மேம்பட்ட நிலைமை இலங்கையில் உருவாகுவதாகவிருந்தால், அது நீண்ட நாள் செயற்பாடுகளால் உருவாகவேண்டியவொன்று, மாற்றமடையவேண்டிய ஒன்று. ஆனால், பொலிஸ் துறையில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்று பரிந்துரைத்திருக்கின்றோம். அதாவது, பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யச் செல்பவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உதவிகளைப் பெற்றுக்ெகாள்வதற்கான ஒரு பிரிவு தென்னாபிரிக்க பொலிஸ் நிலையங்களில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளன. அவ்வாறான ஒரு பிரிவினை இலங்கை பொலிஸ் நிலையங்களிலும் ஏற்படுத்த முடியும் எனக் கேட்டிருக்கின்றோம். பெரும்பாலும் அந்தச் செயற்பாட்டை அமுல்படுத்த முடியும் என நம்புகின்றேன்"

"இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் என்னென்ன துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?"

"என்னைப் பொறுத்தவரை, இனங்களுக்கிடையில் மீள் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உண்மையைக் கண்டறிவது மிக முக்கியமான விடயமாக உள்ளது. குறிப்பாக 1971 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சி நடவடிக்ைககள் முதற்கொண்டு, 1983இல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறை, இறுதிப் போரின்போது ஏற்பட்ட மனிதப் பேரவலம் வரை உண்மையைக் கண்டறிந்து ஆற்றுப்படுத்துவது மட்டுமல்லாது அதற்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்ைக எடுக்கப்படவிருக்கிறது. இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றன. இதில் விசேடம் என்னவென்றால், 1971 ஆம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சி, 1989ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதன்மீதான நெருக்குவாரம் , அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மரணம் முதற்கொண்டு உண்மைகளைக் கண்டறிந்து அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்ைகயும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் நாட்டின் அனைத்து இனக்குழுமத்தினதும் மனக்காயங்கங்கள் ஆற்றுப்படுத்தப்படவிருக்கின்றன. இதுதான் உண்மையில் செய்யப்படவேண்டிய ஒன்று. அதேநேரம், இந்த நல்லிணக்க செயற்பாட்டை சமூகத்தின் சகல மட்டத்திலும் முன்னெடுக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் முதற்கொண்டு சகல மட்டத்தினரையும் உள்வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இனங்களுக்கிடையே உள்ள சந்தேகங்களைக் களைய நடவடிக்ைக எடுக்க வேண்டும்".

"இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ள காரணிகள் என்றால், எவற்றைக் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்?"

"உண்மையில், எல்லாவற்றுக்கும் காரணம் தொடர்பாடல் குறைபாடு என்று நான் சொல்வேன். அந்தக் குறைபாட்டைப் போக்க வேண்டும். இப்போது அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு அரச கரும மொழிகளையும் கற்றிருக்க வேண்டும் என்ற ஓர் ஊக்கப்படுத்தல் இருக்கின்றது. அவ்வாறு தேர்ச்சியை வெளிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் எல்லாம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். அதனால், எல்லோரும் இப்போது பிற மொழியைக் கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். உதாரணமாக, சிங்கள உத்தியோகத்தர்கள் தமிழிலும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது மிகவும் முன்னேற்றகரமான விடயம். இவ்வாறு நாட்டின் சகல பகுதிகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஓர் இடத்தில் சிலர் தமிழில் கதைத்துக்ெகாண்டு இருந்தால், அந்த இடத்தில் உள்ள சிங்கள மக்கள் அந்தச் சம்பாஷணையைச் சந்தேகக்கண்கொண்டு நோக்கும் சந்தர்ப்பங்கள் இனியும் இருக்கக்கூடாது".

"மற்றவர்கள் தமிழைக் கற்றுத் தமிழில் பணியாற்றுவது வரவேற்கப்பட்டாலும், சில வேளைகளில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கான இடம் இல்லாமற்போகின்றதே! என்ற ஓர் ஆதங்கம் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?"

"இதுவிடயத்தில் சற்று நிதானப்போக்கு அவசியம். எந்த மொழியையும் எவரும் கற்கலாம். அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சேவையாற்றுவதில் இது கைகொடுக்கும். ஆனால், தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றபோது இன விகிதாசாரத்தின் அடிப்படையில் உரிய இடம் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதில் நான் உறுதியாகவிருக்கிறேன். தற்போது பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் சிங்கள உத்தியோகத்தர்கள் தமிழிலும் செயலாற்றுகிறார்கள். அதேநேரத்தில் அங்குத் தமிழ் உத்தியோகத்தர்களை நியமித்துச் சேவையாற்றும்போது இன்னும் மக்கள் மத்தியில் பொலிஸார் நெருங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் அல்லவா! அவ்வாறு எல்லாத்துறையிலும் இந்தக் கட்டுக்ேகாப்பு பேணப்பட்டால், இன சௌஜன்யம் தானாய் வளரும்!"

"தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்கத்திற்கான செயற்பாட்டில் மன்னிப்பு என்பது ஒரு முக்கியமான விடயமாகவிருந்தது. அதேநேரம், குற்றமிழைத்தவர்கள் மன்னிப்புக்ேகாரி தாக்கல் செய்திருந்த ஆயிரக்கணக்கான கோர்க்கைகள் நிராகரிக்கப்பட்டும் இருந்தன. இலங்கையில் இந்தச் செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுக்கலாம் என நினைக்கிறீர்கள்?"

"மன்னிப்பு என்பது மனித இனத்தில் மகத்துவமானது. அது குற்றங்களின் தன்மையைப் பொறுத்து இருக்கின்றது. என்றாலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள், குற்றங்கள் எனப் பார்க்கின்றபோது, இன நல்லிணக்கத்திற்காக மன்னிப்பை வழங்கி பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திக் ெகாள்வதின் மூலம் நாட்டைச் சுபீட்சமான பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். உங்களுக்குத் தெரியும் தன்னைக் கொல்ல வந்த எல்ரிரிஈ இயக்க உறுப்பினரையே ஜனாதிபதி மன்னித்த சந்தர்ப்பமும் உண்டு. இவை எல்லாவற்றையும் முன்மாதிரியாகக் கொண்டு நாட்டு மக்கள் செயற்பட்டால் எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்பது எனது நம்பிக்ைக" என்கிறார் அரவிந்தகுமார் எம்பி.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.