வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
நல்லாட்சி அரசில் அபிவிருத்திக்கு தடைகள் இல்லை

நல்லாட்சி அரசில் அபிவிருத்திக்கு தடைகள் இல்லை

கேள்வி: பிரதேசத்தின் அபிவிருத்தி இலக்குகள் முழுமையாக அடையப்பெற்றுள்ளதா?

நூறு நாள் வேலைத்திட்டத்தின் போது மஹிந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களே அதிகமாக இருந்தனர். சில விடயங்களில் 100 நாள் வேலைத் திட்டம் வெற்றியளித்தாலும் நிறைய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது. ஆனால் நல்லாட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி தொடர்பில் நிலவிய பல்வேறு தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சதொச போன்ற நிறுவனங்களையும் தொழில் பேட்டைகளையும் உருவாக்குவதன் மூலம் 250,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற ஒரு பிரதேசம் விடுவிக்கப்பட்ட உடனே எல்லாம் கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பது நியாயமான விடயமல்ல. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன பிரிந்தே செயற்பட்டுள்ளன. ஆனால் நல்லாட்சியில் இரண்டு கட்சிகளும் ஓரணியில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய, முற்போக்கு மலையக முன்னணி போன்ற கட்சிகள் அரசாங்கத்துடன் இந்த நல்லாட்சிப் பயணத்தில் இணைந்துள்ளன. இதனால் எமது அபிவிருத்தி இலக்குகளை விரைவாக அடைந்து கொள்ள முடியும் என நான் உறுதியாக கூறுகிறேன்.

நல்லிணக்க ஆட்சியில் இன்று பாராளுமன்றம் ஒரு யாப்பு சபையாக உருவாக்கப்பட்டு சகல தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெறக்கூடிய ஆட்சி செய்யக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் அபிவிருத்தி தொடர்பில் நிலவுகின்ற பல்வேறு தடைகளை அகற்றலாம்.

கேள்வி: பிரதேசத்திலுள்ள வளங்களைப்பற்றி சற்று விளக்க முடியுமா?

உல்லாசப் பயணிகள் விரும்பி உண்ணுகின்ற நண்டு, இறால் போன்ற கடல் உணவு வகைகள் இப்பகுதியில் பெருமளவு காணப்படுகின்றது. இத்துறைகளை அபிவிருத்தி செய்வதன்மூலம் மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் முடியும். உப்பு உற்பத்தியில் நவீன முறைகளைக் கையாள்வதன் மூலம் உப்பு உற்பத்தியினை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். இதன்மூலம் பிரதேசத்தின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். உப்பு உற்பத்தி தன்நிறைவில் எம்மாலும் பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும்.

கிண்ணியாவிலிருந்து அனுப்பப்படுகின்ற கடற் சிப்பித் தூள் கண்டி, கம்பஹா போன்ற பகுதிளில் கோழித்தீன் மற்றும் சுன்னாம்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

சிப்பித் தொழிலை முன்னேற்றுமுகமாக சிப்பி பதனிடுகின்ற தொழிற்சாலை ஒன்றினை அமைத்துத் தருவதாக அமைச்சர் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

கேள்வி: பிரதேசத்தின் பொருளாதாரம் பற்றி சற்று விளக்க முடியுமா?

பெரும் நிலப்பரப்பினை கொண்ட கண்டல்காடு, தீனேரி போன்ற வயல் நிலங்களும், வான்எல, சூரங்கல், காலிபாய்ந்தான் போன்ற நீர் வளம் கொண்ட பிரதேசங்களும் இருந்ததன் காரணமாக திருகோணமலை குடாவிலே ஒரு நீண்ட கரையோரப் பிரதேசமாக அதாவது 6 கிலோ மீட்டருக்கும் அதிகமான விஸ்தீரணத்தை கொண்ட பிரதேசமாக கிண்ணியாவை அண்டிய பிரதேசம் அமைந்திருந்ததினால் ஆரம்ப காலங்களில் அதிகளவு மக்கள் இப்பிரதேசத்தில் குடியேறினர். 1945ஆம் ஆண்டுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்திலே சிலர் தொழில் அதிபர்களாகவும் இருந்துள்ளனர். யுத்த சூழல் காரணமாக இப்பிரதேசத்தை விட்டு காட்டை நோக்கி குடிபெயர்ந்தபோது பிரதேசத்தின் பெரும்பாலான வளங்கள் சூறையாடப்பட்டன.

அதற்கு பிந்திய காலப்பகுதியில் உள்நாட்டு கலவரங்கள் உருவாவதற்கு முன்னர் மீண்டும் இப்பிரதேசத்தில் மக்கள் காட்டுத் தொழில், கடற்றொழில், விவசாயம் போன்றவற்றிலே மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கிண்ணியா பிரதேசத்தை அண்டிய சில பகுதிகளில் இடம்பெற்றன. குறிப்பாக கண்டல்காடு, படுகாடு, கங்கை, சுடலைப்பிட்டி போன்ற பிரதேசங்களிலும் மணியரசன்குளம், வான்எல போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு வயல் நிலங்களாக காணப்பட்டதாலும் பக்கத்திலிருந்த தமிழ் கிராமமான தம்பலகாமத்தின் ஊடாக கப்பல்துறை முத்துநகர் போன்ற பிரதேசங்களுக்கும் அவர்கள் ராணி காட்டினூடாக கிழக்கின் வடக்கை நோக்கியும் வடக்கு நோக்கியும் நகர்வதற்கான இணைப்பு பாதையாக இருந்ததன் காரணமாக முதலிலே இப்பிரதேசத்தினுடைய காட்டுத்தொழில் பாதிக்கப்பட்டது. பெரும் நிலப்பரப்பான கண்டல்காடு தீனேரி, தம்பலகாமம் போன்ற பிரதேசங்களிலே வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டுகளில் யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதிகளில் ஆண்களும் அதனைத் தொடர்ந்து பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நோக்கி நகர ஆரம்பித்தனர். யுத்தம் வலுவடைந்த நிலையில் எதுவித தொழிலையும் செய்ய முடியாத நிலையில் பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நோக்கி ஊக்குவிக்கப்பட்டனர். இதனால் பல கலாசார சீரழிவுகள் ஏற்பட்டதுடன் பிரதேசத்தின் கல்வி நிலையும் பெருமளவு பாதிக்கப்பட்டது.

கரையோர கடற்றொழிலுக்கும் ஆழ்கடற்றொழிலுக்கும் கிண்ணியாவிலிருந்து உப்பாறு, மூதூர் கங்கை வரையான நீண்டதொரு கரையோரப் பிரதேசம் காணப்படுகிறது. கலப்பு கடற்றொழில் என்ற வகையிலே தம்பலகாமக் குடா, கண்டக்காடு தீனேரி போன்ற பிரதேசங்களில் இருக்கின்ற கலப்பு சார் கடல் வளங்களிலே இறால், நண்டு போன்றவற்றை பிடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. உப்பு உற்பத்தியிலும் கிண்ணியா கனிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

கேள்வி: பால் உற்பத்தியில் தன்நிறைவு அடைவதில் உள்ள தடைகள் என்ன?

மேய்ச்சல் தரை மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. யுத்த கால சூழலிலே மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்கள் என்பன காடுகளாக மஹிந்த ராஜபக்ச அரசினால் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மக்களது சொந்த நிலங்களை அவர்களால் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.

கேள்வி: கிண்ணியா வரலாற்றைப் பற்றி சற்று விளக்க முடியுமா?

சில வரலாற்று ஆசிரியர்களுக்கு இணங்க கிண்ணியா வரலாறு 500 ஆண்டுகளுக்கு அப்பால் நீண்டு செல்கின்றது. எனக்கு கற்றுத் தந்த ஆசான்கள் மூலமாக நானும் இது தொடர்பில் அறிந்து கொண்டேன். பாகிஸ்தான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களும், கண்டி கலவரத்தின் போது குடிபெயர்ந்த இலங்கையின் பூர்வீக குடியினரும் ஆரம்ப காலத்தில் தம்பலகாமம் போன்ற நீர் சார்ந்த பகுதிகளுக்கு அருகிலேயே குடியேறினர். கலப்பு பகுதிகளில் அவர்கள் இறால், நண்டு போன்றவற்றை பிடித்து ஜீவனோபாயம் நடத்தி வந்தனர்.

கேள்வி: கோழி வளர்ப்பில் பிரதேசத்தின் பங்களிப்பு என்ன?

இன்று இந்த நாட்டின் பல பாகங்களிலும் கோழி வளர்ப்புக்கு தேவையான கல்சியத் தேவையில் கனிசமான அளவு இப்பிரதேசத்திலிருந்து அனுப்பப்படுகின்ற கடற் சிப்பித் தூளில் இருந்தே நிறைவு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கிண்ணியாவிலிருந்து நாட்டின் தென் பிராந்தியம் உட்பட நாட்டின் நாலா பாகங்களுக்கும் சிப்பித் தூள் அனுப்பி வைக்கப்படுகிறது.

கேள்வி: கோழித்தீன் உற்பத்தியில் பங்களிப்பு பற்றி சில வரிகள்?

தம்பலகாமக் குடாவிலே சேகரிக்கப்படுகின்ற இறந்த சிப்பிகளை 50க்கும் அதிகமான ஆலைகளில் அரைக்கப்பட்டு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்புவதன் மூலம் நாட்டின் கோழித்தீன் உற்பத்தியில் பாரிய பங்களிப்பு செய்கின்றது.

கேள்வி: உப்பு உற்பத்தி பற்றி சற்று விளக்க முடியுமா?

2001ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த காலப்பகுதியில் கால் ஏக்கர் நிலத்தினை உப்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்கி உப்பு உற்பத்தியை ஊக்குவிக்க நான் முயற்சித்தபோது பெரும்பான்மையானவர்கள் அதனை எதிர்த்தனர். 2002ஆம் ஆண்டு எஸ். பீ. திஸாநாயக்க சமுர்த்தி அமைச்சராக இருந்தபோது 38 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து உப்பு உற்பத்தியாளர்களுக்கான பாசண வசதியை செய்துகொடுத்ததன் காரணமாக இன்று வருடமொன்றுக்கு 150,000 தொடக்கம் 200,000 மூடை உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மையடைகின்றன. இதனை இன்னும் நவீனமயப்படுத்தி அயடீன் உப்பு தயாரிக்கப்படுகின்ற பட்சத்தில் இன்னும் பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது என்கிறார் மஹ்ரூப்.

கேள்வி: பிரதேசத்தின் காணி விடுவிப்பு பற்றி சில வரிகள்?

யுத்த சூழல் காரணமாக பெரும்பாலான காணிகள் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியாருக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகள் தேசிய ஒதுக்கீட்டு காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது இவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. சம்பூரில் இலங்கை முதலீட்டுச் சபைக்கு கீழிருந்த 818 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பூரில் இருந்த சகல காணிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டன. எமது பிரதேசத்திலுள்ள மஜீத் நகர் போன்ற பகுதிகளில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.