வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
புசல்லாவை இளைஞர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா?

புசல்லாவை இளைஞர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா?

பொலிஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ரீசேட்!

பொலிஸார் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மக்களின் தோழன் என்றும் வர்ணிக்கப்படுகிறது. சில இடங்களில் இது நடந்தும் வருகிறது. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஓர் முன்மாதிரியான பொலிஸ் நிலையமாக வீரபுர பொலிஸ் நிலையம் செயற்படுவதாக கட்டுரை வரைந்திருந்தோம். அடுத்த வாரம் அந்தச் செய்திக்குச் சேறு பூசுமாப்போல், ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பொலிஸார் கைது செய்த இளைஞர் ஒருவர் காணாமற்போய்விட்டாரென்றும் அவரை பொலிஸார் அடித்துக்ெகான்றுவிட்டார்கள் என்றும் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், ஈற்றில், அந்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடி மறைந்திருந்து ஒன்பது நாட்களின் பின்னர் பொலிஸ் மாஅதிபரிடம் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை மறைத்து வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவரது சகோதர்களையும் சகோதரியையும் சட்டத்தின் முன் நிறுத்தினார்கள் பொலிஸார்.

இப்போது மீண்டும் பொலிஸாரை ஒரு சர்ச்சையிலும் சிக்கலிலும் கொண்டுபோய்விட்டிருக்கிறது புசல்லாவை இளைஞரின் மரணம். பொலிஸ் கைதுசெய்த பின்னர் அந்த இளைஞர் பொலிஸ் சிறைக்கூண்டில் மரணமடைந்திருக்கிறார். தற்கொலை செய்துகொண்டதாகப் பொலிஸார் கூறினாலும் அது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுத்திருக்கிறது. அவர் அணிந்திருந்த ரீசேட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டார் என்று பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். அது சாத்தியமில்லை என்பதை நீதிமன்றமே உணர்ந்திருக்கிறது. அதனால், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தின் வை.ஆர்.சி பிரிவைச் சேர்ந்தவர் நடராஜ் ரவிச்சந்திரன். வயது 31. அம்மா, அப்பா, ஒரு சகோதரன். பெற்றோர் தோட்டத்தில் தொழில்செய்யவில்லை. இவரும் கூலி வேலை. அதில்தான் குடும்ப வண்டியை ஓட்டி வந்திருக்கிறார். திருமணம் செய்யவில்லை. ஒரு நாள் கள் அருந்திவிட்டு, மற்றொரு போத்தலை வைத்திருந்தபோது பொலிஸார் கைதுசெய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவரை சமூக சேவையொன்றில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், அவர் அந்தப் பணியைப் புறக்கணித்துவிட்டார் என்று அவருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம். அதன் அடிப்படையில்தான் புசல்லாவை பொலிஸார் அவரை கைதுசெய்திருக்கிறார்கள். மறுநாள் சிறைக்கூண்டில் இறந்துவிடுகிறார். இது எப்படி சாத்தியம்? என்கிறார்கள் பொதுமக்கள். பொலிஸார் அவரை அடித்து உதைத்துப் பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள் அவர்கள். இதே கேள்விளை நீதிமன்றமும் எழுப்பியிருக்கிறது.

இளைஞனின் மரணம் தொடர்பிலான வழக்கு கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணையை ஆரம்பித்த மாவட்ட, நீதிபதி திருமதி சாந்தனி மீகொட, ரவிசந்திரனின் தந்தையிடமும் அண்ணனிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

பின் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு தற்கொலைக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் ரிசேட்டை பரிசோதனைக்கு உட்படுத்தி சுருக்கு ஒன்றைப் போடுமாறு சட்டத்தரணிக்குப் பணித்துள்ளார். அவ்வாறு சுருக்கு போட்டபோது அதனுள் ஒருவர் தலையை இட்டுத் தற்கொலை செய்வதற்கான சாத்தியம் இல்லை. சுருக்கு போட்டுத் தொங்கி இருந்தால் ரீசேட் இழுபட்டு அடையாளம் இருந்திருக்கும், அதுவும் இல்லை. அதேவேளை சிறைக்கதவில் சுருக்கையும் போட்டு கட்டித் தொங்குவதற்கு ரீசேட் போதுமானதாகவும் இருக்கவில்லை.

இதனை உணர்ந்த நீதிபதி வழக்கை 14.10.2016 வரைக்கும் ஒத்திவைத்ததுடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் சிறைச்சாலையை பார்வையிட 30.09.2015 விஜயம் ஒன்றினைமேற்கொள்ளவுள்ளார்.அதள் பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற முடிவு தெரியவரும்.

அந்த இளைஞரை நம்பியே அவரின் பெற்றோர் இருக்கின்றனர். ஆகவே, அவர் என்னதான் பிரச்சினை என்றாலும் தற்கொலை செய்யத்துணிந்திருப்பாரா? என்பது தோட்ட மக்களின் கேள்வி.

பொலிஸார் திட்டமிட்டுச் செய்யாவிட்டாலும், அவர்களின் தாக்குதலால் இளைஞர் மரணித்திருந்தாலும்கூடக் கொலைதான் என்பதைப் பொலிஸார் அறியாதவர்களா என்ன! ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் உண்மையை உரைப்பதற்கான ஏற்பாடுகள்தான் என்ன என்பது பொலிஸ் தரப்பில் கண்டறியப்படவேண்டியவொன்று.

அண்மையில் பொலிஸ் ஆணைக்குழு பொலிஸாருக்குக் கண்டிப்பான ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது யாவருக்கும் நினைவிருக்கும். அதாவது, கைதுசெய்யப்படும் ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. அவர்களுக்கு நீதிமன்ற அதிகாரம் கிடையாது என்று தெரிவித்திருந்தது. சுருங்கச் சொல்லின் கைதாகும் எவரையும் தாக்கும் உரிமை பொலிஸாருக்கு இல்லை என்பதுதான் அது. இந்த நிலையில் புசல்லாவை இளைஞனின் மரணம் பொலிஸ் துறைக்குப் புதிய பாடங்களைக் கற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.