வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
சீசன் காட்சிகளாய் மக்கள் எழுச்சிகள்

சீசன் காட்சிகளாய் மக்கள் எழுச்சிகள்

“எழுக தமிழைத் தொடக்கி, எல்லாத்தையும் நாசமாக்கிறானய்யா....” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் சம்பந்தன்.

“எதிர்க்கட்சித் தலைவராகி, எல்லாத்தையும் நாசமாக்கிட்டார்டா....“ என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் பேரவைக்குமிடையில் இதுவரையும் புகைந்து கொண்டிருந்த போர் இப்பொழுது ஏறக்குறைய பகிரங்கமாகவே வெடித்துவிட்டது.

இந்தப் போருக்குரிய கணைகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பிரதான இரண்டு பத்திரிகைகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஏவிக் கொண்டிருக்கின்றன.

“எழுக தமிழ்“ நிகழ்வை ஒரு பத்திரிகை ஆதரிக்கிறது. அது ஆதரிக்கிறது என்று சொல்வதை விட, முன்னின்று நடத்துகிறது எனலாம்.

இதைக் கடுமையாகவே எதிர்க்கிறது மற்றையது.

ஆனால், “எழுக தமிழில்" கஜேந்திர குமார் அணி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன் வைத்திருக்கும் கோரிக்கைகளுக்குமிடையில் அதிக வித்தியாசங்களில்லை. இந்தக் கோரிக்கைகளை அடைவதற்கான நிலைப்பாடுகளும் நிபந்தனைகளும்தான் சற்று வேறுபாடானவை.

இந்த வேறுபாடுகளை அடைவதற்கான வழிமுறைகள் கூட ஒன்றும் புதியவையல்ல. தமிழ் மிதவாதப் பாரம்பரிய அரசியல் வழிமுறைகளின்படி மிக மென்நிலையில் போராட்டங்களை நடத்துவது. அதாவது போட்டிருக்கும் சட்டை கசங்காமல் நடப்பது மட்டுமே. அப்படிப்பார்த்தால், அடிப்படையில் இரண்டு தரப்பும் ஒன்றுதான். ஒன்று மோதகம் என்றால், மற்றது கொழுக்கட்டை.

இதை மேலும் விளக்க வேண்டுமென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக, தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபையிலும் வெற்றியடைந்திருந்தால், இன்று என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணரக்கூடியவர்களுக்கு அதிகம் விளக்கவேண்டியிருக்காது.

முன்னணி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால் தமிழ்ச் சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கும் அரசியல் நெருக்கடிகளையும் சமூகப்பிரச்சினைகளையும் தீர்த்து முன்னேறியிருக்குமா? வடக்குக் கிழக்கில் நந்திக்கொடியோ புலிக்கொடியோ, மீன்கொடியோ பறந்திருக்குமா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அப்படியான ஒரு அரசியல் சமூக மாற்றத்துக்கான அடிப்படைச் சிந்தனைகளும் செயற்தன்மைகளும் இருந்திருந்தால், யுத்தம் முடிந்த பின்னரான ஏழு ஆண்டுகளில் களச்செயற்பாட்டின் மூலம் இந்தத் தரப்பு, புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கும். குறைந்த பட்சம், பேரவை உருவாக்கப்பட்ட பின்னரேனும் சில முயற்சிகள் நடந்திருக்கும்.

ஆகவே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பது அரசியல் அதிகாரத்துக்கான ஒரு போட்டியே. இன்னும் கூராகச் சொன்னால், சம்பந்தன் அணியைப் பலமிழக்கச் செய்யும் நடவடிக்கை. எனவே இது சம்பந்தன் அணிக்கு எதிரான ஒரு நடவடிக்கையே. ஆனால், இந்த நடவடிக்கையை அவர்கள் (எழுக தமிழ் ஏற்பாட்டினர்) சம்பந்தன் அணிக்கு எதிரானது என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்படி எதிராக மக்களை அணிதிரட்டவும் முடியாது. அப்படி சம்பந்தன் அணிக்கு எதிராக இப்போதையை நிலையில் மக்கள் திரளப்போவதுமில்லை. கூட்டமைப்பின் மீதும் சம்பந்தனின் மீதும் சனங்களுக்குச் சலிப்பும் கோவமும் நம்பிக்கையீனங்களும் அதிருப்தியும் உண்டு. ஆனால், அதற்காக மக்கள் சம்பந்தன் அணியை இன்னும் முற்றாக எதிர்க்கவோ நிராகரிக்கவே மாட்டார்கள். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இதில் அவர்கள் முன்னேறலாம்.

இதனால்தான் அவர்கள் அரசுக்கெதிரான – தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் சிலவற்றைக் கையில் எடுத்துள்ளனர். அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைகளை முன்நிறுத்தி, தமிழ்மக்களை அணிதிரட்டுவது எளிது. எனவேதான் அரசுக்கு எதிரான சுலோகங்கள் தூக்கப்பட்டிருக்கின்றன. மற்றும்படி தமிழ் மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அரசியற் பிரச்சினைகளுக்கும் சமூகப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என மெய்யாகவே சிந்தித்திருந்தால், அதை ஏற்கனவே இந்தத் தரப்பினர் செயல்வடிமாக்கியிருப்பர்.

குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்திலேயே இதைக் குறித்து நிலாந்தன் போன்ற ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிட்டிருந்தனர். அதாவது, புதிய அரசியல் முன்னெடுப்புக்குப் பாரம்பரிய அரசியல்வாதிகளின் அதே வழிமுறைகளும் அணுகுமுறைகளும் தேவையில்லை. பதிலாக புதிய களச்செயற்பாடுகளும் அதற்கான செயற்பாட்டாளர்களுமே தேவை.

ஆனால், அத்தகைய களச்செயற்பாடுகளை இவர்களில் யாரும் முன்னெடுக்கவில்லை. அதற்கான தியாக சிந்தனையும் சமூக நலப்பட்டு உழைக்க வேண்டும் என்ற மனப்பாங்கும் மக்கள் மீதான கரிசனையும் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிலையிலேயே மிக இலகுவான முறையில் அரச எதிர்ப்புவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

அரச எதிர்ப்புவாதத்திலுள்ள நியாயத்தன்மைகளை மறுதலிக்க முடியாது. குறிப்பாக அரசியல் அதிகாரம், அரசியற் தீர்வு, அரசியற்கைதிகள் விவகாரம், நில ஆக்கிரமிப்பு, காணி அபகரிப்பு, கலாசார மேலாண்மை போன்றவற்றில் உள்ள நியாயத்தன்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. இவற்றை எப்படித்தீர்ப்பது? தீர்வு காண முடியாதிருக்கிறது என்றால், அடுத்த கட்டப் போராட்ட வடிவமென்ன? அதை எப்படி முன்னெடுப்பது? யார் அவற்றை முன்னெடுப்பது என்பதில் எல்லாம் தெளிவான சித்திரமில்லை.

இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு, மக்கள் எழுச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதுபோல அடிக்கடி வீதிக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஒன்று கூடியிருக்கிறார்கள். உலகத் தலைவர்களின் முன்னே கண்ணீருடன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கோசங்களை எழுப்பி வானுயரக் கத்தியிருக்கிறார்கள். ஆனால், என்ன நடந்தது?

புறக்கணிப்பு. புறக்கணிப்பு. புறக்கணிப்பு.

மக்களுடைய அத்தனை குரல்களையும் அவ்வளவு கண்ணீரையும் இந்த உலகம் பாராமலே விட்டது. அப்படி அது கவனித்திருக்குமாக இருந்திருந்தால், இன்று இந்த மக்கள் சிந்திய கண்ணீருக்குச் சிறிய அளவிலாவது பயன் கிடைத்திருக்கும். நூறு பிரச்சினைகளில் பத்தாவது தீர்க்கப்பட்டிருக்கும். அப்படி நடந்ததா? இல்லையே!

அப்படியென்றால், என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கக்கூடும். போராட்டம் என்றால் இப்படித்தான். தொடரப்பட வேண்டும். தொடர்ந்து போராடுவதன் மூலமே இலக்கை அடைய முடியும் என்றும் சொல்லக் கூடும். நிச்சயாக இது மறுக்க முடியாத உண்மையே.

அதிகார அமைப்புகளிடமிருந்து விடுதலையையும் மாற்றங்களையும் இலகுவாக எதிர்பார்க்கவும் முடியாது. எட்டிவிடவும் முடியாது. அப்படியென்றால், அதற்கான தொடர் போராட்டங்களே தேவை. அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.

இதையே இந்தப் பத்தி வலியுறுத்துகிறது. வெறுமனே அரசியற் சுலோகங்களை மட்டும் கொண்டிருக்காமல், மக்களை வீதிக்கு அழைத்து வருவதோடு மட்டுமல்லாமல், இரா-ஜதந்திர ரீதியாகவும் சமூகச் செயற்பாட்டின் மூலமாகவும் அரசியலை அறிவு பூர்வமாக பிரயோகிப்பதன் வழியாகவும் இதைச் செய்ய வேணும்.

இது பிரமுகர் அரசியலுக்கு அப்பாலானது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும் குறிப்பாக சம்பந்தன் அணியையும் மெய்யாகவே பலவீனப்படுத்த வேண்டுமானால், முதலில் விட்டொழிக்க வேண்டியது பிரமுகர் அரசியலையே. அத்துடன், கூட்டமைப்புச் செய்யத்தவறிய, அரசியல் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது. இப்படிச் செய்யும்போதே, மெய்யான அர்த்தத்தில் ஒரு புதிய மாதிரித் தோற்றத்தைக் கட்டியெழுப்ப முடியும். முள்ளை முள்ளால் எடுக்க வேணும் என்ற வாதம் இங்கே பொருத்தமற்றது. பதிலாக, மறுதன்மைச் செயற்பாடே இந்த இடத்தில் வேலை செய்யும்.

ஆகவே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பது, இரண்டு தமிழ்த்தரப்புகளுக்கிடையிலான போராட்டமும் போட்டியுமாகும். இதில் நன்மைகளை அடையப்போவது அரசாங்கமே. தமிழ்த்தரப்பின் உச்சமான போட்டி யாருக்கு நன்மைகளைக் கொடுக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த இடத்தில் வேடிக்கையான விசயமொன்றையும் நினைவூட்டலாம். தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியவர்கள் இன்று இப்படி இரண்டுபட்டு நிற்பது வேடிக்கையன்றி வேறென்ன?

ஒன்றுபட்டு நின்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள், ஒன்றுதிரண்டு நின்று சர்வதேச சமூகத்துக்கும் மக்களுக்கும் சேதியுணர்த்த வேண்டியவர்கள் இரண்டுபட்டிருப்பது வருத்தத்திற்குரியதே.

எனவே, மாற்றத்துக்காகச் சிந்திப்பதென்பது, மெய்யாகவே போராடுவது என்பதுதான். அதைச் செய்ய முன்வருவதே போராட்டமாகும். அதற்காக உழைப்பவர்களே தலைவர்கள். அவர்களே, வரலாற்றைப் படைப்பவர்கள். மற்றதெல்லாம் சீசன் காட்சிகளே.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.