வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

short stories

சிலுசிலுவென்று வீசிய இளந்தென்றல் காற்றில் நன்கு செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் கதிர் தள்ளிய தாய்மைப் பூரிப்பில் அசைந்தாடிய அழகு நிகரில்லாதது. அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அப்படிப்பட்ட எங்களது வயலில் மையத்தில் பரந்து விரிந்த ஒரு மருத மரம். பல நூற்றாண்டுகளைக் கண்டும் பல்வேறு இயற்கை தாக்கங்களை அனுபவித்தும் இன்றும் இளமை மாறாது பசுந்தளிர்களுடன் வாழும் மரம். அதை மரமென்று சொல்வதை விடப் பறவைகளின் மாளிகையென்று சொல்லலாம். அந்தளவு பறவைகள் அம் மரத்தை வசிப்பிடமாக்கிக் கூடுகள் அமைத்து வாழ்ந்தன. அந்திப் பொழுதுகளில் பறவைகள் கூடுகளுக்குத் திரும்பும் வேளையில் பெரியதோர் இசைக்கச்சேரி இடம்பெறுவது போன்று பல்வேறு குரல்களில் பறவைகள் குதூகலமாக உரையாடி மகிழ்வது வழக்கம். அந்த இனிமையான ஓசை வயல் வெளியின் அமைதியில் மன மகிழ்ச்சியை அள்ளித் தெளிப்பதாக அமைந்திருந்தது.

பக்கத்தில் நீரோடை அந்தத் தெளிந்த நீரில் சிறுசிறு மீன்களின் ஊர்வலம். அந்த ஓடை வரப்பில் மீன்களுக்காய்க் காத்திருக்கும் வெள்ளை நிறக் கொக்குகளின் வரிசையென்று வர்ணித்துக் கொண்டே போகலாம். அவ்வளவுக்கு இயற்கை குறைவில்லாமல் அழகை அள்ளியிறைத்திருந்தது.

எவ்வளவுதான் அழகை இறைவன் உலகமெல்லாம் நிறைத்திருந்தாலும் அதை இரசிக்கின்ற மனநிலை அதற்கான சந்தர்ப்பங்கள் சிலருக்கு மட்டுமே அமைந்திருக்கிறது. அவர்கள்தான் உண்மையிலேயே பாக்கியவான்கள்.

நெற்பயிர்கள் கதிராகும் காலங்களில் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்து இளங்கதிர்களிலிருக்கும் பாலைக்குடிக்கும். அப்படிக்குடிக்கப்பட்ட கதிர்கள் வெறும் பதராகவே இருக்கும். அதனால் வயலுரிமையாளர்கள் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

பல சிறுவர்களை வயல்களில் இடையிடையே நிறுத்தி ஓசையிடவைப்பார்கள். அவர்கள் வெற்றுத்தகர டப்பாக்களைத் தட்டியும் சப்தமிட்டும் பட்டாசுகளைக் கொளுத்தியும் குருவிகள் வராமல் கலைப்பார்கள். பாடசாலை விடுமுறை நாட்களில் என்னையும் எனது தந்தை வயலுக்கு அழைத்துச் செல்வார். நானும் வயலில் குருவி விரட்டும் பணியில் மிகவும் உற்சாகமாக ஈடுபடுவேன்.

வரப்பில் ஓடுவதும் ஓடையில் குதித்து நீச்சலடிப்பதும் சூரம்பழம் நாயுண்ணிப்பழம் என்றும் பல்வகைக் காட்டுப்பழங்களைப் பறித்துத் தின்பதும் ஆட்காட்டிக்குருவி முட்டை பொறுக்கி அவித்துத்தின்பதும் மனம் மறக்காத மகிழ்ச்சியான நாட்கள். சந்தோசமான பொழுதுகள்.

எங்களது வயல் வாடிக்கு முன்னாலுள்ள பந்தலில் பெரிய பெரிய பானைகள் போன்ற பூசணிக்காய்கள் ஏராளமாகக் காய்த்துக் கிடந்தன. நான் வயலுக்குச் சென்றால் வாடிக்குள்ளிருப்பதைவிட மருத மரத்தின் நிழலில் தான் கூடுதலாக ஓய்வெடுப்பேன். அன்றும் ஒரு நாள் அப்படித்தான் மரத்தடியில் மல்லாக்கப்படுத்துக் கிடந்தேன்.

மேலே மரக்கிளைகளில் தூக்கணாங் குருவிகள் கூடுகளமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. புற்களிலிருந்து மெல்லியதாகக் கிழித்துக் கொண்டுவரும் சிறிய நார்களை வைத்துப் பின்னி மிகவும் அழகான கூடுகளைத் தயாரிக்கும். கைகளைப் பயன்படுத்தும் மனிதர்களால் கூட எவ்வளவுதான் முயன்றாலும் அப்படியோர் அழகிய கூட்டை அமைக்கமுடியாது. ஆனால், அந்தச் சிறிய குருவிகள் தங்களது சின்னஞ்சிறிய அலகுகளால் நார்களைப் பின்னி மிகவும் பாதுகாப்பான பலமான, அழகான கூடுகளைத் தயாரித்து முடிப்பதென்பது மிகவும் அதிசயிக்கத்தக்க விடயமே.

உலகில் பல்லாயிரக்கணக்கான பறவையினங்கள் பல்வேறு வகையான வித்தியாசமான கூடுகளை அமைத்து வாழ்ந்தாலும் தூக்கணாங் குருவிக்கூடு போன்று அழகிய கூடுகள் எந்தப் பறவையினங்களாலும் அமைக்க முடியாது. அனேகமாக வயல்கள் கதிராகும் காலங்களில்தான் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி முட்டையிடும். அதுதான் அவைகளது இனப்பெருக்கப் பருவகாலம் என்று சொல்லலாம்.

உலகம் உருவான நாள் தொட்டு இன்றுவரை இயற்கை மட்டும் மாறாமல் காலங்காலமாக ஒரே சுழற்சி முறையில் விலங்குகள். பறவைகள் மற்றுமுள்ள மரம் செடிகொடியனைத்தும் நியதி தவறாமல் தமது வாழ்க்கை முறையினை முன்னெடுப்பதைக் காணலாம். மனித இனம் மட்டும் காலத்துக்காலம் தனது வாழ்க்கை முறையினை மாற்றிப் புதுப்புதுப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுச் சீரழிந்து போவதைக் காண்கிறோம். ஆகவே, மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.

மரத்திலிருந்த குருவிகள் கூட்டமாகச் சென்று நெற்கதிர்களில் உட்கார்ந்தன. எனது தந்தையார் சப்தமிட்டபடியே அந்தக் குருவிகளை விரட்டும் முயற்சியில் தோற்றுப் போனார். காரணம் அவைகளை ஓரிடத்திலிருந்து கலைத்து விட்டால் சுற்றிக்கொண்டு வந்து திரும்பவும் வயலில் வேறு ஒரு புறத்தில் விழும். இந்த அலைக்கழிப்பினால் ஆத்திரமுற்ற எனது தந்தை ஒரு நீண்ட தடியுடன் வந்தார். அந்தத்தடியின் நுனிப்பகுதியில் ஒரு வளைவான கத்தி பொருத்தப்பட்டிருந்தது.

அந்தத் தடியினால் ஒவ்வொரு தூக்கணாங் குருவிக் கூடுகளையும் கொழுவிப் பிய்த்தெறிந்தார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனது உயிரைப் பிய்த்தெறிவது போன்ற வேதனை உணர்வே ஏற்பட்டது. உடனடியாக ஓடிச் சென்று தந்தையின் கரத்திலிருந்த அந்தத் தடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

“வாப்பா வாப்பா குருவிக் கூட்டப்பிய்க்காதீங்க வாப்பா! அதுகள் பாவம்!” என்று கண்ணீர் வடிய மன்றாடினேன். ஆனாலும் எவ்விதப்பயனுமில்லை “மகன் இதுகள வயலுக்க வெச்சா நம்மட நெல்லுக்கதிரெல்லாத்தையும் பதராக்கிப்போடும். பிறகு நாம கஷ்டப்பட்டுச் செய்த தொழில் நஷ்டமாகிப்போகும். அதுதான் கூட்டப்பிச்செறியிறன். அப்பதான் இதுகள் இந்த இடத்த விட்டுப் போகும்” என்று கூறியவாறே ஒன்று விடாமல் அனைத்துக் கூடுகளையும் அறுத்தெறிந்து விட்டுப் போய்விட்டார். என்னால் எதுவும் செய்யமுடியாத நிலை. அந்த வேளையில் நான் பட்ட துயரம் எனது வாழ்க்கையில் ஒரு போது நான் அனுபவித்ததில்லை.

எவ்வளவு சிரமப்பட்டுப் பல நாட்களாகக்கட்டிய கூடுகளை இழந்த குருவிகள் “கீச் கீச்” என்று ஓசையெழுப்பியவாறு மரத்தைச் சுற்றிப் பறந்த வண்ணம் தமது துயரத்தை வெளிக்காட்டின. வேதனையுடன் நான் சில கூடுகளைப் பார்த்த போது சிலவற்றில் ஒன்றிரண்டு முட்டைகள் இருந்தன. எவ்வளவு கொடுமை மனிதன் தனது சுயநலத்திற்காக அந்தச் சிறியதோரினத்தின் வாழ்விடத்தை முற்றாக அழிப்பதென்பதை என்ன காரணம் கூறிய போதிலும் எனது பிஞ்சு நெஞ்சம் ஏற்றுக்கொள்ளமறுத்தது.

உலகமென்பது மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானதா? இல்லையே! அனைத்து உயிரினத்துக்கும் சொந்தமானது. அப்படியிருக்கத் தான் மட்டும் வாழவேண்டுமென்ற தன்னலங் கொண்டு மற்ற இனத்தை அழிப்பதென்பது, பகுத்தறிவைக் கொண்டு வாழும் ஒரு மனிதன் செய்யும் செயலல்ல. அது கொடுமையானது மட்டுமல்ல, மனிதத்தன்மையில்லாத மகா பாதகமாகும். எனது கண் முன்னால் இப்படிப்பட்டதோர் அநியாயம் நடைபெற்றதைப் பார்த்த எனக்கு, மனித இனத்தின் மீதே ஆத்திரமும் வெறுப்பும் ஏற்பட்டது.

அநாதரவான அந்தக் குருவிகளின் துயர ஒலி என் நெஞ்சைப் பிழிய வேதனையின் உச்சத்திலிருந்த எனக்கு நேரம் போனதே தெரிய வில்லை. “வாங்க மகன் சாப்பிட” என்று எனது தந்தை அழைத்த குரல் கேட்டு, சுயநினைவுக்கு வந்த நான் “வாணா எனக்குப் பசிக்கல்ல” என்று மட்டும் பதிலளித்து விட்டு வெறுப்போடு முகத்தைத் திரும்பிக் கொண்டேன்.

சொற்ப நேரத்துக்கு முன்னர் அழகாகத் தெரிந்த வயல் வெளிகள். நீரோடைகள், மரங்கள் அனைத்தும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும்தான் என் கண்களுக்குத் தெரிந்தன. இப்படிக் கொடுமை செய்யும் மனித இனத்தில் ஒருவனாக நானும் ஏன் பிறந்தேன் என்று வெறுப்பேற்பட்டது.

பொழுது சாய்ந்து கருக்கலான போதுதான் வாடிக்குப் போனேன்” என்ன மகன் ஒரு மாதிரி இரிக்கிற பகல் சாப்பிடயுமில்ல உடம்புக்கு என்ன பிரச்சினை ஏனிப்படி வாடிப்போயிரிக்கிறீங்க?” என்று எனது தந்தை கேட்ட கேள்விக்கெல்லாம் “இல்ல எனக்கு ஒண்டுமில்ல” என்று ஒரே வரியில் பதிலளித்துவிட்டுச் சிறாம்பியில் படுத்துக்கொண்டேன்.

எனது தந்தை வந்து பக்கத்திலமர்ந்து கொண்டு என் தலையைத் தடவி விட்டுக் கொண்டே” நான் குருவிக் கூட்டப் பிச்சது கோவமா’ என்று கேட்டார். பந்தலில் கொழுவியிருந்த விளக்கின் வெளிச்சத்தில் எனது கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்துவிட்டு” சே! இது என்ன மடத்தனம். கவலப்படாதீங்க மகன், இது எல்லா வயல்கார ஆக்களும் செய்றதுதான். வயலுக்கு குருவிக்கூடு இருந்தாப் பிச்செறியிற வழமதானே! இதுக்குப் போய்க் கவலப்பட்டுச் சாப்புடாமக்கிடக்கலாமா? எழும்புங்கசாப்புட” என்று எனது தந்தை வற்புறுத்தியதால் சிறிது சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டேன். விழிகளை மூடியவுடன் அந்தக் குருவிகள் தங்குவதற்காகக் கூடில்லாமல் எங்கு சென்றதோ? என நினைக்கும் போது தூக்கத்துக்குப் பதிலாகக் கண்ணீர்தான் வந்தது. என் நேரம் தூங்கினேன் என்று கூடத்தெரியாது. அமைதியாக இருந்த அந்த வயல் வெளியில் திடீரெனப் பல திசைகளிலு மிருந்து தீப்பந்தங்களுடன் காவற்காரர்கள் சப்தமிட்டுக் கொண்டும் யானை யானையென்று அலறிக் கொண்டும் ஓடிக் கொண்டிருந்தார்கள். எனது தந்தையாரும் உடனடியாக எழுந்து” மகன் எழும்புங்க ஆன வந்திட்டு போல கிடக்கு. வாடில இரிக்கப்போடாது ஆபத்து, வாங்கபோவம்” எனக் கூறியென்னை எழுப்பி விட்டார். தூக்கக் கலக்கத்தில் கண்ணைக்கசக்கிக் கொண்டு பார்த்த எனக்கு நிலாவொளியில் சிறிய சிறிய குன்றுகள் அசைந்து வருவதைப் போல் எங்களது வாடியை நோக்கிச் சில யானைகள் வருவதைக் கண்டோம். பாதுகாப்பான இடமொன்றை நோக்கி நாங்கள் ஓடிவிட்டோம். உயிர் தப்புவதற்காக. அடுத்த நாள் காலையில் எழுந்து வயலைப் பார்ப்பதற்காக வந்தால் மிக மோசனமானமுறையில் வயலின் பெரும்பகுதி சேதமுற்று அழிக்கப்பட்டிருந்தது. நாங்கள் வசித்த வாடி மீது எதுவும் இல்லாதவாறு பூரணமாக பிய்த்தெறியப்பட்டுப் பூசணிக்காய்கள் அனைத்தும் யானைகளின் இரையாகி இருந்ததைக்காணக் கூடியதாயிருந்தது. எங்களுக்கு உணவுமில்லை. தங்குவதற்கு வாடியுமில்லை. தற்காலிகமாக அந்த மருத மரத்தின் நிழலிலேயே தங்கவேண்டியேற்பட்டது. எங்களது அப்போதைய நிலையைப் பார்க்கும்போது நேற்றுக்கூடுகளை இழந்து தவித்த அந்தத் தூக்கணாங்குருவிகளின் நிலைதான் எமக்கு ஏற்பட்டிருக்கிறதென்றுதான் எண்ணத் தோன்றியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.