புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு

தமிழ் மொழியும் அரச கரும மொழியாக்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்ட போதிலும் இன்னும் அதற்கு உரிய இடம் அளிப்பதில் மந்தகதி இருந்து வருவதையே அவதானிக்க முடிகிறது.

தலைநகரில் இயங்கிவரும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அலுவலகங்களில் திருப்தியளிக்கும் வகையில் உள்ள போதிலும் பிராந்திய அலுவலகங்களில் அதாவது பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், பொலிஸ் நிலையங்கள், வங்கிகள் போன்ற அலுவலகங்களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையே இருந்து வருகின்றது. பொதுமக்களின் நன்மை கருதி பார்வைக்கு வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் தனிச் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

தோட்ட மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு பார்வைக்கு வைக்கப்படும் விளம்பரங்கள், பதாதைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தனிச் சிங்கள மொழி மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில தோட்டங்களில் தோட்டத் தொழிலாளருக்கு மாதந்தோறும் விநியோகிக்கப்படும் சம்பளப் பட்டியல் கூட அவர்கள் வாசித்து விபரங்களை விளங்கிக் கொள்ளக் கூடியதாக தமிழ் மொழி இடம்பெறாது சிங்கள மொழியில் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, றைகம் தோட்டத்தில் அண்மையில் தோட்ட நிர்வாகமும், தோட்டக் கம்பனியும் இணைந்து தோட்ட மக்களின் நலன் கருதி நடத்திய கண் சிகிச்சை முகாம் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை தனிச் சிங்கள மொழியில் மட்டுமே எழுதப்பட்டு தமிழ் மொழி முற்றாகவே புறக்கணிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இது தொடர்பாக தோட்ட வைத்தியரிடம் கேட்டபோது தான் இது பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் இந்நிகழ்வு திடீரென ஒழுங்கு செய்யப்பட்டதொன்றாகும் என்றார்.

தேசிய அரசாங்கத்தில் தேசிய கலந்துரையாடல் அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த புதிய அமைச்சர் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.