புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

தென் மாகாண தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்

தென் மாகாண தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்

கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைய நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதில் பின்தங்கிய ஆளணி மற்றும் உட்கட்டமைப்புக்கள் குறைவாக உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தென் மாகாணத்திலுள்ள 35 முஸ்லிம் பாடசாலைகளும் பெருந்தோட்டங்களிலுள்ள 10 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காலி மல்ஹருஸ்சுலியா முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச, நகரசபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், வலயக் கல்வி அதிகாரிகள், பெற்றோர் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தென் மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோர் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர். காரணம் சிங்கள மொழியில் கல்வியைத் தொடர்வது மட்டுமல்லாது வேறு மொழிகளில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். இதனை தவறென சொல்லவில்லை.

இந்த பாடசாலையிலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மாணவர்கள் கல்வி பயின்று வருவதை நான் மிகவும் வரவேற்கின்றேன். இது இந்நாட்டின் இன ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது.

இருந்தும் நாம் பேசும் மொழியை வளர்க்க வேண்டும். அதற்கு கல்வித்துறை வளர்ச்சியடைய வேண்டும். அந்தவகைகளில் தென் மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூலமான 45 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். 2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் முழுநேர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் தொடர்ந்து வரும் 05 ஆண்டுகால பகுதியில் கல்வியில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என்றார் அமைச்சர். இப் பரிசளி்ப்பு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் உரைகளும், மாணவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்கள், பரிசில்களும் வழங்கப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.