புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்ட காணியில் வெளியார் குடியேற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்ட காணியில் வெளியார் குடியேற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

கண்டி தெல்தோட்டை நகரத்திற்கு அண்மையிலுள்ள லிட்டில்வெளி தோட்டத்தில் வெளியார் குடியேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி மாவட்த்தில் ஏற்கனவே பல தோட்டங்களில் குடியேற்றம் நடத்தியதினால் அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டு விட்டனர். மீண்டும் நியாயமற்ற முறையில் தோட்டங்களில் வாழ்ந்துவரும் மக்களை அச்சுறுத்தி வாயடைக்க செய்துவிட்டு குடியேற்றம் நடத்தப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கடந்த திங்களன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கலஹா பிரதேச செயலாளார் தனது உயிரை பணயம் வைத்தாவது இந்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்றப்போவதாகவும், இவ்விடயத்தில் தன்னோடு எவராவது கதைக்க முற்பட்டால் தமது கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக பொலிஸ் முறைபாடு செய்து அவ்வாறானவர்களை சிறைக்கு அனுப்ப போவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

தோட்ட மக்களின் எதிர்ப்பையும் மீறி பிரதேச செயலாளார் குடியேற்றம் நடத்துவதில் அரசியல் பிற்புலம் இல்லாமல் இருக்க முடியாது. நாட்டின் கடந்தகால கசப்பான நிகழ்வுகள் மீண்டும் தலைதூக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே தற்போதைய நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கத்திற்கு கண்டி மக்கள் வாக்களித்து ஆட்சிபீடமேறச் செய்தனர். அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் கைம்மாறு தோட்டப்பகுதி தேயிலை காணிகளை கைப்பற்றி புதிய குடியேற்றங்களை உருவாக்குவதா? ஏன அவர் கேள்வியெழுப்பினார்.

தெல்தோட்ட லிட்டில்வெளி தோட்டத்தில் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழைமையான லயன் அறை ஒன்றில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்துவருகின்ற நிலையில் அந்த குடும்பங்களின் வீட்டுத்தேவையை உதாசீனம் செய்துவிட்டு வெளியாருக்கு 20 பேச் காணியை வழங்கி வீடமைப்பு திட்டம் நடைபெற்று வருகின்றது. சிலரின் அரசியல் தேவைகளை அரச அதிகாரிகளைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும். கண்டியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் இழந்த பிரதிநிதித்துவத்தை மீட்டுவிட்டதாக பெருமை கொண்டால் மாத்திரம் போதாது, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் தோட்ட தொழிலாளார்கள் வீதிக்கு விரட்டப்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தோட்ட காணிகளை அபகரித்து குடியேற்றம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கை தொமிலாளார் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டிருக்கிறதே தவிர அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இணங்கி செயற்பட்டதில்லை. அரச தேவைகளுக்கு தோட்ட காணிகளில் கைவைக்க முன் இலங்கை தொழிலாளார் காங்கிரசோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு இருந்து வந்தது. முன்னைய அரசாங்க காலத்தில் இரத்தினபுரி பாம்காடன் தோட்டத்தில் அரசாங்க அமைச்சர் ஒருவர் மூலமே அரச ஊழியர்களுக்கு வீடமைத்து கொள்வதற்காக பத்து ஏக்கர் காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சியை இலங்கை தொழிலாளார் காங்கிரசின் பொதுச் செயலாளார் ஆறுமுகன் தொண்டமான் தடுத்து நிறுத்தியதைப் போன்று ஏன் தற்போ​ைதய அரசாங்கத்தின் அமைச்சர்களால் லிட்டில்வெளி தோட்டத்தில் நடைபெறும் காணி அத்துமீறலை தடுத்து நிறுத்த முடியவில்லை? ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்திருந்தால் இவ்வாறான அவல நிலைக்கு லிட்டில்வெளி தோட்டத் தொழிலாளார்கள் முகங்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.