புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
யாழ்ப்பாணத்தின் பாணன் எஸ்.பொ

யாழ்ப்பாணத்தின் பாணன் எஸ்.பொ

“இலக்கியவாதி ஒரு நவீன ‘குலப்பாடகன் (பாணன்) காலம் துடைத்தழிக் கும் அவனது குலமும் நில மும் அவனுடைய சொற்கள் வழியாகவே என்றும் வாழ் கின்றன. அம்மக்கள் காலூ ன்றி நின்ற நிலத்துக்குப் பதி லாக அப்படைப்பாளியின் மொழி வந்து அமைகிறது. எஸ். பொன்னுத்துரை குலப் பாடகன். யாழ்ப்பாணத்தின் பாணன்” என ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்.

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரும் ஈழப் படைப்பாளிகளில் முதன்மையானவருமான எஸ். பொ. என்கிற எஸ் பொன்னுத்துரை நம்மை விட்டு மறைந்து ஒரு வருடகாலமாகிறது.

தமிழ் ஊழியத்தில் தன் தேடலை ஊன்றித் தமிழுக்குப் புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் கொடுத்தவர். மரபை முற்று முழுதாக நிராகரிக்காமலே இலக்கியம் படைத்தவர். இவைகளே எஸ். பொவை தமிழ் நெஞ்சங்களில் இன்றும் என்றும் நிறுத்தியிருக்கிறது. வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களை தமிழ் இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட இலக்கியவாதி, நவீன இலக்கியங்களில் எஸ்.பொவின் சாதனைகள் அவரை இந்த நூற்றாண்டின் தலை சிறந்த இலக்கியவாதியாக உயர்த்தியிருக்கிறது. தனது சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் கால் பதித்து தன் கடைசிக் காலம் வரை எழுத்துலகில் தனக்கென தனித்துவமான இடத்தினை தக்க வைத்துக்கொண்டவர் மறைந்தும் இலக்கிய வரலாற்றிலும் வாசக உள்ளங்களிலும் இலக்கியவாதிகளின் எண் ணங்களிலும் உலாவந்து கொண்டிருக்கிறார்.

ஆறுமுகநாவலர், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகிய தமிழ்ப் பெரியார்கள் தோன்றிய நல்லூரில் ஒடுக்கப்பட்ட குடும்பமொன்றில் எஸ். பொன்னுத்துரை (எஸ். பொ) 04-06-1932இல் பிறந்தார். புனித பத்திரிசியார் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கற்றார். பொதுவுடமைக் கட்சியின் ஈடுபாடு இவரை பத்திரிசியார் கல்லூரியிலிருந்து விலகச் செய்தது.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கைப் பாட விதான சபை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் பணியாற்றினார். இளம் வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர், பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார். நைஜீரியாவில் கல்லூரி ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றியவர். மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். 1990 முதல் அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தார்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என இப்பொழுது சர்வதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுவதை பலரும் அறிவர் இதற்கு புகழிட இலக்கியம் என்ற பதத்தைக்கொடுத்து ஒரு முகத்தை ஏற்படுத்தியவர் எஸ். பொ. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தான் சர்வதேச தமிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குமெனத் தன் குரலை ஓங்க ஒலித்தார். இதற்கு “பனியும் பனையும்” என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் அத்திவாரமிட்டார். எஸ். பொ பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

எழுத்தாளராக மட்டுமன்றி எஸ். பொ. இலக்கிய நூல் வெளியீட்டாளராகவும் தனது தமிழ்ப் பணியை அகலித்துள்ளார். சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் “மித்ர ஆர்ட் அன் கிரியேஷன்ஸ்” என்ற நூல் வெளியீட்டகம் எஸ். பொவுக்குச் சொந்தமானதே. இதனூடாக அரிய தமிழ் நூல்களோடு இலக்கிய எத்தனிப்புக்களையும் பல முயற்சிகளையும் எடுத்து நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டு தன் இலக்கிய ஊழியத்தை விஸ்தரித்தவர்.

ஈழத்து இலக்கியப் பரப்பை தமிழ் நாட்டு இலக்கியத்திற்குச் சவாலாக செயல்பட்டார். இதற்காக அச்சு ஊடகத்தையும் மேடையாக பயன்படுத்தினார். அவர் ஈழத்து இலக்கிய செல்நெறிக்குக் கொடுத்த அதிர்வுகள் இன்று இலக்கியமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வீச்சு எஸ். பொவின் இலக்கியக் கருத்துக்களை சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இது எஸ். பொவின் தூர நோக்கிற்கு எடுத்துக்காட்டல்லவா.

அவருடைய நூல்கள் பலதரப்பட்டவை மனிதனை ஆட்டிப்படைக்கும் காமத்தையும், யாழ்ப்பாணத்து வாழ்க்கையினையும், மனித உணர்வுகளையும் அடியாழத்தையும் மிக இயல்பாகவும் உண்மையாகவும் அணுகியிருக்கிறார். சடங்கு என்ற நாவலினூடாக தொடர்ச்சியாக நனைவிடை தோல்தல், பூ, கீதையின் நிகலிலே, இனி, ஈரு, கேள்விக்குறி, அப்பாவும் மகனும், உறவுகள், தேடல், முறுவள், மத்தாப் பூ, சதுரங்கம், வலை முள், தீதும் நன்றும், மணிமகுடம் போன்ற பல நாவல்களோடு, எஸ். பொ கதைகள் பெரும் தொகுப்பாக பல கதைகள் தொகுக்கப்பட்டு வந்திருக்கிறது. மாயினி என்ற அரசியல் வரலாற்று நாவலினையும் நமக்குத் தந்திருக்கிறது இது ஈழ அரசியலோடு சில இந்திய அரசியல்வாதிகளையும் இணைத்து யாரும் சொல்லத் துணியாத பல அரசியல் நாடகங்களை, அந்தரங்க உறவுத் தொடர்புகளைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். எஸ். பொவின் படைப்புகள் பல ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு கோலங்கள், சமூக அரசியலில் சம்மந்தப்பட்டவர்களால் கிழித்தெறியப்பட்ட உண்மையான பக்கங்கள்.

இவரது எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும் அதன் கருப்பொருள் உத்தி, வசன நடை எடுத்துச் சொல்லும் நுட்பமான பாங்கு என சொல்வளம் என்பன எத்தனை தடவை அவைகளை வாசித்தாலும் சலிக்காது. இவரது எழுத்துக்களின் துணிச்சலை வியக்காமல் இருக்கவே முடியாது. அடிக்கடி தனது படைப்புகளில் பரிசோதனைகளைச் செய்து காட்டுபவர். கட்டுடைப்புச் செய்த இவரது- எழுத்துக்கள் பலரிடமும் வசைகளை வாங்கிக்கட்டியதும் மறுப்பதற்கில்லை.

தீ நாவலோடு தன்னை சாதாரண இச்சை பொருந்திய மனிதனது காட்டி சர்ச்சைகளோடான ஒரு எழுத்தாளனாகப் பிரகடனப்படுத்துகிறார். ‘தீயை தீயிலிட்டுக் கொளுத்துங்கள்’ எதிர்க்கோசத்தை தன் முதல் வெற்றியாகக் கணிப்பிடுகிறார். இந்த தீ நாவலில் பாலுணர்வு பிரச்சினைகளை, சுய இன்பத்தை அசாத்திய துணிச்சலுடன் எழுதியிருப்பார். ஆரம்ப காலங்களில் இந்த மாதிரியாக தமிழில் வந்தநூல் இதுதான் எனலாம்.

எஸ். பொவின் எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை என்பதற்கு எழுபத்தைந்து வயது தாண்டியும் எழுதி நிரூமத்திருக்கும் மாயினி, மகாவம்சம் போன்றவையே சாட்சி, எஸ். பொ தன்னிகரில்லா எழுத்தாளன் என்பதை மட்டுமில்லாமல் தான் ஈழத்திற்கும் தமிழுக்கும் விசுவாசமான ஊழியம் புரிந்திருப்பதையும் மகாவம்சத்தில் நிரூபித்திருக்கிறார். ஈழத் தமிழர்கள் தமக்கான வரலாற்றினை எழுதத் தவறி விட்டார்கள். ஆனால் சிங்களன் தனக்கான வரலாற்றை தன் இனத்தை மதத்தை ஓர்மப்படுத்த மகாவம்சத்தை எழுதினான். தன் வரலாறு எழுதியதால் தாம் இடையில் வந்தவர்கள் அதற்கு முன்னமே ஈழத்தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதை நிரூபனப்படுத்துகிறான். எஸ். பொ அதனை தமிழில் மொழி பெயர்த்து கொடுத்ததோடு அதிலுள்ள பிழைகளை, வரலாற்று மாற்றங்களின் உண்மைகளைச் சரியான சரித்திர ஆசானாய் இருந்து தந்திருக்கிறார். தன்னுடைய குறிப்புக்களான அவற்றை இடையிடையே சேர்ந்திருக்கிறார். இவ்வாறு குறிப்புக்கள் சேர்த்ததை சிலர் தவறு என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது தான் நியாயமானது. யாழ்ப்பாண வைபவ மாலையில் ஈழத்தமிழனின் வரலாறு படிக்கலாம் என்று கூறினாலும் அதிலும் முழுமையான விடயங்கள் இல்லை.

மேலும் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூலின் தன் வரலாற்றை எழுதியிருக்கிறார். தன் வாழ்வு பற்றிய அனைத்து உண்மைகளையும் வாழ்வியலோடு தொடர்புப்பட்ட சம்பவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நடந்ததை நடந்தபடி எழுதியிருப்பார். எஸ்.பொ பல தடவை சில அத்தியாயங்களை எனக்குப் படித்துக் காட்டியிருக்கிறார். அவருக்கு அவற்றை எனக்குப் படித்துக் காட்டுவதிலும் அந்த விடயங்களை அளவளாவுதலிலும் அந்த விடயங்களை கேட்பதிலும் அலாதிப் பிரியம் இப்படிப்பேசிக் கொண்டிருக்கையில் ஒருதடவை கூறினார். ‘வரலாற்றில் வாழ்தலை’ படித்துவிட்டு தன் மனைவி (எஸ். பொவின் மனைவி) மாதக் கணக் கில் தன்னுடன் பேசவில்லை. தனக்கு துரோகம் இழைத்து விட்டேன என’ என்றார்.

அவ்வளவு வெளிப்படையாக அவர் வரலாற்றில் வாழ்ந்திருக்கிறார். வரலாற்றில் வாழ்தலில் சில பகுதிகளே நான் படித்திருக்கிறேன். அவ்வாறு படித்ததில் அவர் கூறியிருந்த சில விடயங்களை எனக்கு மிகப் பிடித்திருந்தன. அவை...

இலங்கை அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அரசியல் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடினேன். நான் சமரன் தோற்றுப் போனேன். வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. தோல்வியை அறிக்கையிட ஏன் வெட்கப்பட வேண்டும்?

இன்னொரு இடத்தில்...

அவுஸ்ரேலியா பணியிலிருந்து ஓய்வினை நானாகத் தேடிப் பெற்றேன். அது என் தமிழ் ஊழியத்தைத் தொடர்வதற்கான வாய்ப்பு, ஊழியத்திலிருந்து நான் ஓய்வு பெறவே கூடாது. அது என் வாழ்க்கையிலும் மேலானது. அது சாவையும் வென்று தொடருதல் வேண்டும்.

உண்மை! சாவையும் வென்று எஸ். பொ வரலாறாய் எங்களுடனும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈழவாணி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.