புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்

சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி எம்.பி.வழங்கிய நேர்காணல்

* வட பகுதியில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது தொடர்பில் உண்மை நிலை என்ன?

உண்மையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை வடபகுதியின் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதி கடற்பரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றது.

இந்திய மீன்பிடி ரோலர்கள் இலங்கையின் வடபகுதிக் கடல்களில் மீன்பிடியில் ஈடுபடுவதாக அறியக்கூயதாக உள்ளது. இவ்வாறு இந்திய மீனவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதனால், எமது மக்களின் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக டைனமைற் வைத்து மீன்பிடியில் ஈடுபடுதல், கடலுக்கு அடியில் வெளிச்சத்தை பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளினால் வடபகுதியின் மீன் வளம் அழிந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

* இந்தப் பிரச்சினை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீங்கள் வேண்டுகோள் விடுக்கின்aர்கள்?

இந்திய மீனவர்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீள்குடியமர்த்தப்பட்ட எமது மக்கள் மீண்டும் அடிமட்டத்திலிருந்து தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நல்லாட்சியில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று நான் எதிர்பார்ப்பிக்றேன்.

* இந்த மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்aர்கள்?

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். தமது எல்லைக்கு அப்பால் இலங்கை எல்லையில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் இணைந்து எமது மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கு இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழக அரசும் இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களை தொப்புள்கொடி உறவுகள் என்று கூறி வருகின்ற தமிழக மக்களும், தமிழக அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

* இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக மக்களும் தமிழக அரசியல்வாதிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதே இலங்கைத் தமிழ் மக்கள் தமிழக மீனவர்களால் பாதிப்புகளை எதிர்நோக்குகின்ற இந்த விடயத்தில் மாத்திரம் பாராமுகமாக இருப்பது ஏன்?

இது தமிழக அரசு எமது மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநியாயம் என்றுதான் கூற வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அன்றாட ஜீவனோபாயத்தைப் பாதிக்கின்ற வகையில் இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இதனால் வடபகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிவருவதைத் தமிழக அரசு தடுக்காமல் இருப்பது எமது மக்கள் மத்தியில் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

* இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இருதரப்பு மீனவர் பிரதிநிதிகள் மத்தியில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும், அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன?

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இறுதி அமர்வின்போது விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் எமது தரப்பினர் இணைந்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக் கப்பட்டன.

எனவே, எதிர்காலத்தில் இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று எதிர் பார்க்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, வடபகுதி மீனவ பிரதிநிதிகளும் கலந்துகொள்வது அவசியமாகும்.

ஏனெனில், தமிழக மீனவர்களின் அத்து மீறல்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வடபகுதி மீனவர்களேயாகும். எனவே, வடபகுதி மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது ஆரோக்கியமானதாக அமை யும்.

* வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மீன்பிடித்துறை இன்னமும் வளர்ச்சி காணவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

உண்மைதான். வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, கரநாற்றுக்கேணி ஆகிய கிராமங்கள் மீன்பிடியில் அதிக வருமானத்தைப் பெறுகின்ற கிராமங்களாக இருந்தன.

ஆனால் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இந்தப் பகுதி மக்களுக்கு தமது பூர்வீக இடங்களில் தொழில்புரிவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

* வடக்கில் தென்பகுதி மீனவர்களின் ஆதிக்கமும் காணப்படுவதாக உள்ளது. இது குறித்து...

ஆம். அவர்களது ஆதிக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகம் காணப்படுகிறது. கொக்கிளாய் ஆற்றில் பெரும்பான்மையின மீனவர்கள் சட்டவிரோதமான இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன நீர் வெளியேற்றப்படும் பொழுது கடல் நீரேரி அசுத்தமடைகின்றது எனவே இந்த விடயத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பல துயரங்களைத் தாங்கி நிற்கும் நந்திக் கடலில் யுத்தத்தின்போது அமைக்கப்பட்ட காவலரண்கள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளன. இதனால், வீச்சு வலையில் மீன்பிடிக்கும் பல மீனவக் குடும்பங்களின் ஜீவனோபாயம் பாதிக்கப் பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.