புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
அயரா உழைப்பால் உயர்ந்த தந்தையின் அறப்பணியில் என் பணி தொடர்கிறது

அயரா உழைப்பால் உயர்ந்த தந்தையின் அறப்பணியில் என் பணி தொடர்கிறது

விடைக் கொடிச் செல்வர் கலாநிதி சின்னத்துரை தனபாலா

சமூகப் பணியே சைவப்பணி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரான விடைக்கொடிச் செல்வன் சின்னத்துரை தனபாலா சைவத்தின் மேல் பற்றுக் கொண்ட தீவிர பக்தர். சமய கலாசார பண்பாட்டு விழாக்கள் விடைக் கொடியேற்றித் தொடங்க வேண்டும் என்றும் இல்லம் தோறும் விடைக் கொடி பயன்படுத்த வேண்டும் என்ற பேராவலை செயல்படுத்தி வெற்றி கண்ட சைவப் பெருமகன் இவர். இந்நாட்டின் ஒற்றுமைக்கு உதாரண புருஷராக வாழ்ந்து முத்திரை பதித்துக் கொண்ட தந்தை வழி நின்று இன்று வரை சமய சமூகப் பணிகளை மேற்கொண்டு வழிநடத்தி வரும் அவரின் வாழ்க்கைப் பயணத்தை திரும்பிப் பார்க்கின்றேன்.

அப்பெரியாரை சந்தித்த வேளை பிறந்தகத்தைப் பற்றி கேட்டேன்.

எங்கள் பூர்வீகம் யாழ். காங்கேசன்துறை. என் தந்தையின் தந்தை அக்காலத்தில் மலேசியாவில் ஓடலியாகத் தொழில் பார்த்தவர். (வைத்தியருக்கு உதவியாளராக மருந்து கலக்கிக் கொடுப்பவர்). அவரின் குடும்பம் யாழில் தங்கியிருந்தது. மலேசியாவில் உழைத்து மூன்றாண்டுகளுக்கொரு முறை தேடிய செல்வத்தோடு இங்கே வந்து குடும்ப நலன்களைப் பார்த்துச் செல்வார். இந்தச் சூழலில் 1903ம் ஆண்டு என் தந்தையார் சின்னத்துரை காங்கேசன்துறையில் பிறந்து அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்திருந்த வேளையில் மூன்றாண்டுகளுக்கொருமுறை அவரின் தந்தை வந்து குடும்பத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்கும் பொருளாதார வளம் திடீரென்று நின்று விட்டது. தொடர்பு சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் பல வருடங்களுக்குப் பின்பே அவர் மலேசியாவில் இறந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

எதிர்பாராத விதத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டதால் என் தந்தையார் இடைவெளியில் கல்வியை நிறுத்திவிட்டு தனது 14வது வயதிலேயே தொழில்தேடி கொழும்பு நகருக்கு வந்து விட்டார். ஆமர் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் மாதமொன்றுக்கு மூன்று ரூபா சம்பளத்திற்கு வேலையில் அமர்ந்து குடும்பச் சுமையை ஏற்றார். வர்த்தக நுணுக்கங்களை அறிந்த அவர் வாழக்கையின் படிகளில் முன்னேறி பல நிறுவனங்களை உருவாக்கி பலநூறு குடும்பங்களின் வாழ்வுக்கு வழிசமைத்த ஒரு காருண்யமிக்க தொழிலதிபராக விளங்கினார்.

பதினொரு வயதில் கொழும்பில் காலடி எடுத்து வைத்த என் தந்தையாரின் வாழ்வின் திருப்பு முனையாக 1931ம் ஆண்டு அமைந்தது. புறக்கோட்டை கேந்திர ஸ்தானத்தில் லீலா ஸ்டோர்ஸ் வர்த்தக நிறுவனத்தின் உரிமையா ளரானார். அதன் வளர்ச்சி யில் 1940ம் ஆண்டளவில் மெலிபன் வீதியில் ‘நியூ லீலா பிரஸ்’ என்ற அச்சகத்தை ஆரம்பித்தார். லீலா சித்திரக் கலண்டர் நாட்காட்டி அவரை புகழேணியின் உச்சிக்கே இட்டுச் சென்றது. தமிழில் பஞ்சாங்க விடயங்களை உள்வாங்கி நாட்காட்டி இருந்தது போன்று சிங்களத்திலும் 1950ம் ஆண்டு முதன் முதலாக பஞ்சாங்க கலண்டரை அறிமுகப்படுத்திய பெருமையும் என் தந்தையாருக்கு உண்டு.

அக்காலத்தில் வீட்டுரிமை காணிச்சட்டம் நிலவியதால் அச்சகத்தை ‘சென் செபஸ்டியன் ஹில்’ நீதிமன்ற வளவு பகுதிக்கு மாற்ற வேண்டியிருந்தது. வீடும் அச்சகமுமாக ஒரே கட்டிடத்தில் அமைந்திருந்தது.

இந்தப் பிரதேசப் பகுதியில்தான் அன்று ஆர். பிரேமதாச 16 வயது வாலிபனாக என் தந்தைக்கு அறிமுகமானார். சமய பாடசாலை மாணவனாக (தகம் பாடசாலை) இருந்த அவர் சிங்கள நோட்டிஸ் சம்பந்தப்பட்ட அச்சக தேவைக்கு வந்து செல்வார். திறமையான சிங்கள ஆற்றல் அவரிடம் இருந்ததால், சில சிங்கள புறூப்களை அவரிடம் கொடுத்து திருத்தி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வார் என் தந்தையார். இவ்வாறே அவரின் நட்பு குடும்ப சகோதரர்களில் ஒருவராக வளர்ந்தது. இது போன்ற பல அரசியல் இடதுசாரிகளின் நட்பும் அச்சகம் மூலம் கிடைத்தது.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் அமைந்திருக்கும் கேந்திர ஸ்தாபனத்தில் பல இலட்ச பெளத்தர்கள் வழிபடும் தலமாக அமைந்திருக்கும் ‘போதிராஜ’ விகாரையின் ஸ்தாபகராக இருந்தவர் என் தந்தையராவார். ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் அந்த இடத்திலிருந்த அரச மரத்தடியில் அன்று பழக்கத்திலிருந்த அரச மரத்தைச் சுற்றி மாட்டை கட்டி வைத்திருப்பார்களாம். இந்த இடத்தை விஸ்தரிக்கும் நோக்கோடு அன்றைய ஆங்கில மேயர் அரச மரத்தை தறித்து அப்புறப்படுத்தும்படி பணித்திருந்தாராம். அரச மரத்தை தறிக்கக் கூடாது என குரல் எழுப்பிய சில பெளத்த அபிமானிகள் என் தந்தையாரின் தலைமையில் சென்று மேயரிடம் முறையிட்டனர். அதற்கமைய அது நிறுத்தப்பட்டு அந்த இடத்தைப் புனித தலமாக அமைக்கப்பட்ட எக்ஸத் போதிராஜ சமித்திய இயக்கத்தின் ஸ்தாபக பொருளாளராக என் தந்தையார் நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை போதிராஜ ஆலயத்தின் போஷகராக எங்கள் குடும்பம் இருக்கின்றது. அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை என் தந்தையார் நல்கியிருந்தார். இதன் மூலம் இந்து - பெளத்த நட்புறவின் முன்னோடியாக என் தந்தையார் திகழ்ந்தார். இந்து சமயப் பணியைப் போன்றே சமத்துவமாக பெளத்த சமய பணிக்கும் பங்களிப்பை நல்கி வந்தார். மாகோவில் அமைந்திருக்கும் மகா போதி விஹாரைக்கும் போஷகராக விருந்து பங்களிப்பை செய்து வந்ததை இன்றும் தொடருகின்றோம். 1935ம் ஆண்டு முதல் கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீபால செல்வ விநாயகர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டு பணியாற்றி வந்தவர்.

வடக்கிலே பிறந்து தெற்கிலே வாழ்ந்து பல்லின மக்களுடன் பழகி நாட்டின் ஐக்கியத்திற்கு பாலமாக விளங்கிய பெருமைக்குரிய குடும்பத் தில்தான் நான் பிறந்தேன்.

எங்கள் குடும்பத்தில் சகோதரர்கள் ஒன்பது பேர். எல்லோருமே ஆண் மக்கள். மூத்த சகோதரர்கள் இருவர் பிரபல்யமான வக்கீல்களான சுந்தரலிங்கம், பாலேந்திரா ஆவர்.

கல்வி நிலை பற்றிக் கூறுவீர்களா?

எங்களது இல்லம் கொழும்பு சென் செபஸ்டியன் ஹில்லைக் கொண்டிருந்தாலும் நான் மூத்த சகோதரரின் வெள்ளவத்தை இல்லத்திலிருந்து தான் பாடசாலைக்குச் சென்றேன். எனது முதல் பாலர் வித்யாரம்பம் 1956ல் வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில்தான் ஆரம்பமாயிற்று. அங்கே ஐந்தாம் வகுப்புவரை ஆண்பிள்ளைகள் பயில முடியும். இங்கே நான் இரண்டு ஆண்டுகள் படித்துக் கொண்டிருந்த போது, 1958ல் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரம் தலைநகரில் வாழ சூழல் சரியில்லையென்று குடும்பத்துடன் யாழிற்கு இடம்பெயர்ந்து விட்டோம். அங்கே தெல்லிப்பளை மகஜனவில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தோம். சுமார் மூன்றரை ஆண்டுகள் தந்தை தலைநகரிலும் நாங்கள் யாழிலுமாக காலம் கடந்த போது நாட்டின் நிலைமையும் அமைதியாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மீண்டும் குடும்பத்துடன் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில் தந்தையார் எங்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விட்டார். ஹல்ஸ்டோப் கார்டனில் வீடெடுத்து தங்கினோம்.

தொடர்ந்து என் கல்வியை பம்பலப்பிட்டி இந்து கல்லூரியிலும், இரத்மலானை இந்து கல்லூரியிலுமாக தொடர்ந்தேன். இந்த இரண்டு கல்லூரிகளிலும் நானும் என் சகோதரர்களும் கல்வியைத் தொடர முடிந்தது. தலைநகரில் இந்து சமய மாணவர்களுக்கென பாடசாலையொன்று அமைய வேண்டும் என்பதில் குரல் கொடுத்த பிரமுகர்களில் என் தந்தையும் முக்கியமான ஒருவர். தமிழ் தனவந்தர்கள் பலர் ஒன்றிணைந்து செயல்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளை தனியார் கல்லூரிகளிலே சேர்த்திருந்தார்கள். ஆனால், நல்ல பொருளாதார வசதியிருந்தாலும் கொள்கையில் வழுவாத அவர் நாம் பெற்றக் கல்வி கூடத்தை வளர்க்க வேண்டும் என்ற நன்னோக்கோடு எங்களை இதே கல்விக் கூடத்தில் படிக்க வைத்தார். இவ்விரு கல்லூரிகளின் அபிவிருத்திச் சபையில் முக்கிய பிரமுகராக விருந்து அதன் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை நல்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக பழைய மாணவர்கள் என்ற ரீதியில் எங்கள் பங்களிப்பும் இன்று வரை பல கோணங்களில் தொடர்கிறது. சமூகநலன் குழுத் தலைவராகவிருந்து வெளிமாட்டத்தில் முல்லைதீவு, வவுனியா பிரதேசங்களில் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்கிறேன்.

கல்லூரிக்குப் பிறகு தாங்கள் கால் பதித்த முதல் தொழில் எது?

வர்த்தகத் துறையில் கோலோச்சிய என் தந்தையின் நிறுவனங் களை அவருக்கு உதவியாக இருந்து கவனிக்கும் வகையில் எங்கள் நிறுவனத் திலேயே காலடி யெடுத்து வைத்தேன். இங்கே தான் எனக்கும் வர்த்தகத்தோடு சமய, சமூகப் பணிகளும் என்னைத் தொற்றிக் கொண்டது. மருதானை ஸ்ரீபால செல்வவிநாயகர் ஆலயம், கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, (அடுத்த வாரம் தொடரும்...)

அகில இலங்கை இந்து மாமன்றம், இந்துக் கல்லூரி அபிவிருத்திச் சங்கம், போதிராஜா சமாஜம் என்று பல சமூக தொண்டுகளில் ஈடுபட்டிருந்த என் தந்தையாரை அதன் கலந்துரையாடல்கள் கூட்டங்கள் என்பவற்றிற்கு வாகனத்தில் நான்தான் பெரும்பாலும் அழைத்துச் செல்லும் போது மேலும் பல பிரமுகர்களும் பெரியார்களும் இணைந்து கொள்வார்கள். அதன்போது வாகனத்திலேயே அவர்கள் கலந்துரையாடிக் கொள்ளும் சமய விவகாரங்கள், நிர்வாக விடயங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் எனது மனதை ஈர்ந்தது. உள்வாங்கிக் கொண்ட சமய விடயதானங்கள் என் தந்தையின் இடத்தை நிரப்பக் கூடியதாகவிருந்தது. சமய, சமூகப் பெரியார்களின் அறிமுகமும் பெரும் நெருக்கமான தொடர்பை தேடித் தந்தது. இந்த உந்துதல்களே என்னையும் வர்த்தக துறையோடு சமயப் பணியையும் தொடர வைத்தது. சமயப் பணியோடு அரசியல் கலப்பற்ற சமூக பணியையும் தொடர்ந்தேன்.

இவ்வாறு வர்த்தகத்துறையோடு சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டிருந்த சமயத்தில் 19ம் ஆண்டு இலங்கை விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழிப் வானிலும் நிறுவனத்திலும் ஒலிக்க பயன்படுத்தினேன். இலங்கை விமானத்தில் முதன் முதலாக தமிழ்ப்பாட்டு ஒலிக்கவும், விமானத் தளத்தில் பயணிகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கவும், அறிவித்தல்கள் செய்யவும் வழிசெய்ததோடு அதற்குத் தேவையான தமிழ் பேசும் ஆளணிகளை நியமிக்கவும் என் பணிகாலத்தில் ஆவன செய்தேன். குறிப்பாக தமிழகத்திலிருந்துவரும் பயணிகளுக்கு தமிழ் மொழயிலேயே கருமமாற்றக் கூடிய கரும பீடங்களையும் அமைத்துக் கொடுத்திருந்தேன். இவற்றையெல்லாம் சாதிக்க பணிப்பாளர் பதவி உதவியது.

சமய, சமூகப் பணிகளில் தங்களை எப்போது முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டீர்கள்?

1980ம் ஆண்டு என் தந்தையாரின் சிரார்த்தத்திற்குப் பிறகு கதிர்காமத் தொண்டர் சபை மற்றும் பிள்ளையார் கோவில் நிர்வாக தொண்டர் சபை மற்றும் பிள்ளையார் கோவில் நிர்வாக சபைகளில் என்னை உப தலைவராக நியமித்தார்கள்.

கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கத்தில் எனது மூத்த சகோதரர் பாலேந்திராவின் ஈடுபாடு அதிகம் இருந்தபடியால் சேவையும் அங்கும் தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் கொம்பனித்தெரு கோவில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்வாக சிக்கலால் 1971ம் ஆண்டு முதல் கட்டிடம் எழுப்பப்படாமல் இருந்தது. அதிருப்தியாளர்கள் நீதிமன்றத்தை நாடிய போது எனது சகோதரர் பாலேந்திராவின் வழிகாட்டலில் நீதிமன்றத்தில் வாதிட்டு சாதகமான தீர்ப்பை பெற்றார்கள். தொடர்ந்து வழக்காடிய என் சகோதரரையே தலைமை தாங்கி கட்டிட வேலையை முன்னெடுக்க விரும்பினார்கள். நீதிக்காகத்தான வாதாடினேன் ஒழிய தலைமைப் பதவியை ஏற்கவில்லையென என் சகோதரர் மறுத்து விட்டார்.

இந்து சமய இராஜாங்க அமைச்சராகவிருந்த இராஜதுரையின் முயற்சியால் ஆலோசனை சபை அமைக்கப்பட்டு அவரின் வேண்டுகோளுக்கமைய எனது சகோதரர் மறுத்த பதவியை என்னை ஏற்கும்படி வேண்டினார். கோவில் நிர்வாக சபை அப்படியே இயங்க கட்டிட திருப்பணிச் சபையொன்று அமைத்து கட்டிக் குழுத் தலைவராக நான் இருந்து கோபுரத் திருப்பணியை செவ்வனே செய்து முடித்தோம்.

இதேவேளை இந்து மாமன்றக் கட்டிடமும் காலதாமதமாகிக் கொண்டிருந்து. பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டிடக் குழுவிலும் இணைந்து உப தலைவராக என் பங்களிப்பை வழங்கி கொழும்பு கோட்டையில் இந்து மாமன்றத் தலைமையக கட்டிடம் கம்பீரமாக எழ இறைவன் பாக்கியத்தைத் தந்தான். இந்து மாமன்றம் மூலம் சத்துணவுத் திட்டம், அறநெறிப் பாடசாலை, கோவில் அமைத்தல், கஷ்டப் பிரதேசங்களில் வறுமைக் கோட்டில் வாழ்வோருக்கு வாழ்வாதாரம் வழங்கல் போன்ற கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளோம்.

இந்நாட்டிலும் ஏனைய பிறநாடுகளிலும் நந்திக்கொடி கம்பீரமாக பறக்க தனி மனிதனாக நின்று உழைக்க உந்து சக்தியாக அமைந்த சம்பவம் எது?

பண்டைக் காலங்களில் இடபக் கொடியின் பாவனை மிகவும் சிறப்பாக இருந்து வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டளவில் இதன் பாவனையும் முக்கியத்துவமும் வீழ்ச்சி கண்டிருந்தது என்னவோ உண்மையே! நந்திக் கொடியின் பாவனையை நம்மவரிடையே அதிகரிக்கச் செய்வதற்கு அடியேனுக்கு ஆர்வம் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பல வருடங்களுக்கு முன்னதாக கொழும்புக்கு புறத்தே இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சர்வமத அறிவாலயம் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பெரியோர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வேளையில், அடியேனும் அப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அந்த வைபவத்தில் சர்வமத கொடிகளையும் ஏற்றி விழாவினை ஆரம்பிப்பதாக ஏற்பாடாகியிருந்தது. பெளத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கான கொடிகள் ஏற்பாடாகி இருந்தும் எமது சைவ சமயக் கொடிக்கான ஏற்பாடு செய்வதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டது.

பல சைவப் பெரியார்களையும் கோவில் தர்ம கர்த்தாக்களையும் சிவாச்சரியார்களையும் நாடியும் சைவக் கொடியொன்றினைப் பெறமுடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அன்றைய தினம் ஒரு காவிக் கொடியினை ஏற்பாடு செய்து அதனை எமது சைவக் கொடியாகப் பாவித்து விழாவினை நடத்தி முடித்தோம். எனினும் எனது மனதில் பாரிய குறை ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது. தமிழ் நாட்டில் கூட உடனடியாக எமது சமயக் கொடியாம் நந்திக் கொடியினை பெறுவதில் பெரும் சிரமங்கள் இருந்தன. காரணம் நந்திக் கொடி பாவனையில் மிகவும் குறைவாக இருந்ததே.

அன்று தொட்டு கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் மூலமாக நந்திக் கொடியின் பாவனையை நம்மவரிடையே பரப்பும் முயற்சியில் ஈடுபட்டோம். இலங்கையில் உள்நாட்டில் பல பாகங்களிலும் எமது அயராத முயற்சியினால் நந்திக் கொடியை இலவசமாக விநியோகித்து கோயில் திருவிழாக் காலங்களிலும் பாரம்பரிய சைவ நிகழ்வுகளிலும் படிப்படியாக நந்திக்கொடியின் பாவனையை அதிகரிக்கச் செய்தோம்.

இந்தக் காலக்கட்டத்தில் இந்து சமய கலாசார அமைச்சும் நந்திக்கொடி பாவனைக்கு தனது முழு ஒத்துழைப்பையும் தந்ததுடன் இந்து கலாசார திணைக்களமும் தொடர்ந்து தனது ஆதரவைத் தந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் இலங்கையில் நந்திக்கொடியின் பாவனை சிறப்பாக வளர்ந்து வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

அகில இலங்கை இந்து மாமன்றம் தனது தினசரி கடமைகளிலும் மாமன்றக் கூட்டங்களிலும் விழாக்களிலும் இன்னும் பல்வேறுபட்ட நிகழ்வுகளிலும் நந்திக் கொடியினை ஏற்றி எமது சைவக் கொடி பட்டொளி வீசிப் பறக்கத் துணை நின்று வருகின்றது.

உலக சைவவப் பேரவையின் மாநாடுகள் இலங்கையிலும் மற்றும் அகில உலக ரீதியாகவும் நடைபெறும் மாநாடுகளிலும் இடபக் கொடியினை ஏற்றி இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இப்பொழுது இந்த நந்திக்கொடிகளின் பாவனையை உலகளாவிய ரீதியில் எமது வேண்டுகோளுக்கு இணங்கி மேற்கத்தைய நாடுகளில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் சைவத் தமிழ் மக்களின் மத்தியில் இந்த நந்திக் கொடியின் பாவனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரிலே வீற்றிருக்கும் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும் அங்கு நடைபெறும் தேர்த்திருவிழாக்களிலும் நந்திக்கொடிகள் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருப்பதை எனது கண்ணூடாகக் கண்டு இன்புற்றேன்.

இந்தியாவில் கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற பேரூர் ஆதீன தவத்திரு சாந்தலிங்கம் அடிகளாரின் முத்து விழா நடைபெற்ற வளாகத்திலும் நந்திக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு விழா கோலாகலமாக நடைபெற்றதை காணக் கூடியதாக இருந்தது. இதற்கு மகத்தான வரவேற்பு இருப்பது கண்டு மனம் பூரிப்படைகின்றது. சைவத் திருக்கோவில்கள் இருக்கும் மேற்கு நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, ஹொலன்ட், அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, மொரிசியஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் நந்திக்கொடியின் பாவனை ஓங்கி வருகின்றமை என் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். விவேகானந்தா சபையில் உப தலைவராகவும், இந்து கல்விச் சபை, இந்து கலாசார நிதியத்தின் கெளரவ உறுப்பினராகவும், புறக்கோட்டை எக்ஸத் போதிராஜா சமித்தி, மாவோ பாலமுகந்திர ஸ்ரீமங்களராமய, எஹலியகொட பிரஜா சங்வர்தன பவுண்டேசன் என்பவற்றின் போஷகராகவும், இலங்கை பெளத்த - இந்து நட்புறவுச் சங்கத்தின் பிரதான உறுப்பினராகவும் இருந்து என் சேவைகளை செய்து வருகின்றேன்.

நந்திகொடியின் மத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், சைவ சான்றோர்கள் மற்றும் ஆதினங்களின் படைப்புகளைக் கொண்டு நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் என்ற தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளேன்.

வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத சம்பவம் என்றால் எதைக் குறிப்பிடுவீர்கள்.

கடனின்றி வாழ வேண்டுமென்ற என் தந்தையின் திடமான கொள்கையின் அறிவுரை. செய்யும் தொழிலே தெய்வம் எனும் வாக்கை மெய்ப்பித்து எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய செம்மலின் வழி. பிற இன சகோதரர்களுடன் ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற காலமறிந்த அவரின் செயற்பாடு இதை நாம் வாழும் குடும்பத்திலிருந்து ஐக்கியத்தைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற முன் உதாரணமாக பண்டாரநாயக்க மாவத்தையின் சகோதரர்கள் அனைவரும் ஒரே மனையின் மண்ணில் வாழும் வண்ணம் அமைத்த இல்லம், மக்கள் மத்தியில் ஒரு தனி மனித சகாப்த நாயகனாக வாழ்ந்த என் தந்தையின் அடிச்சுவடுகள் என்னால் மறக்க முடியாது.

தாங்கள் இதுவரை பெற்ற கெளரவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பேரூர் ஆதீனம் வழங்கிய விடைக்கொடிச் செல்வர், தொடர்ந்து ஆன்மீகத் துறைகள் வழங்கிய சிவப்பணி வித்தகர், சிவநெறிப் புரவலர், சிவநெறிச் செல்வர், விடைக்கொடி வேந்தன், நந்திக்கொடி போற்றும் வேந்தன், கெளரவ கலாநிதி, சைவ நெறிச் செம்மல் என்று கெளரவ நாமங்கள் சூட்டப்படட்டு கெளரவித்தார்கள்.

பெளத்த மதத்திற்கு நான் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ராமானிய நிக்காய அதிஉயர் பெளத்த பீடம் “சாசன சோபன லங்கா புத்ர” என்ற கெளரவ பட்டத்தை அளித்து என்னை கெளரவித்தது. மேலும் “தேசமான்ய பிரேமி” கெளரவ நாமமும் சூட்டினார்கள்.

தொடர்ந்து உங்களின் சேவையின் பங்களிப்பு எங்கெல்லாம் கிட்டுகின்றது....

கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, மனித நேய அறக்கட்டளை, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றின் போஷகராகவும், இந்து மாமன்றம், உலக சைவப் பேரவை இலங்கை

படங்கள்

1) ராமானிய நிக்காய வழங்கிய சாசன சோபனா லங்கா புத்ர கெளரவ விருது பெற்ற போது

2) முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பொன்னாடை போத்தி கெளரவித்த போது

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.