புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

ஊடகங்கள் மூலம் உயிர் வாழும் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியமும்

ஊடகங்கள் மூலம் உயிர் வாழும் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியமும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தமிழ்த் தேசியமும் இன்று சில ஊடகங்கள் மூலமாகவே தமிழ் மக்களிடையே உயிர் வாழ்ந்து கொண்டி ருக்கின்றன. அதிலும் சில தமிழ் ஊடகங்களே இவ்விரண்டு விடயங்களிற்கும் ஒட்சிசன் வழங்கி மக்களிடையே உயிர் வாழ வைத்து வருகின்றன. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருட காலமாகியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களிற்கு என இதுவரையிலும் ஒருசிறு உருப்படியான எதனையுமே செய்யாது தமது சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை காட்டி வருவதையே காணமுடிகிறது.

வீரவசனங்கள் கலந்த அறிக்கைகளை விதம் விதமாக விட்டு மக்களிடையே தமது பெயர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே இத்தலைவர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். அத்துடன் தாமும், தமது குடும்பமும், தமது நெருங்கிய உறவுகளும் எவ்வகையிலும் சிறிதும் பாதிக்கப்படாதிருப்பதிலும் இவர்கள் கவனமாக உள்ளனர். யுத்தக் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்து மீண்டெழுந்து உயிர் வாழ நினைக்கும் அப்பாவி மக்களை இன்றும் தமது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் இவர்களோ அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறர்கள். இவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. அன்று விடுதலைப் புலிகளை வளர்த்தது போன்றே இன்று தமிழ் ஊடகங்களும் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வளர்த்து வருகிறது. அன்று புலிகள் பல தவறுகளை இழைத்த போதும் அதனைச் சாதனைகளாக வர்ணித்த பல தமிழ் ஊடகங்கள் இன்று அதே பாணியில் கூட்டமைப்பின் தலைவர்கள் விடும் எந்தவொரு தவறினையும் சுட்டிக் காட்டுவதில்லை.

தமிழ்த் தேசியம் காண ஆயுதத்துடன் புறப்பட்ட புலிகள் அந்த ஆயுதத் தினாலே அழிந்தது போல தமிழ்க் கூட்டமைப்பினர் தமது வீரம் மட்டுமே கலந்த விவேகமற்ற அறிக்கைகளினால் தமக்கும் தமிழ் மக்களுக்கும் அழிவினைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசாங்கத்தை எடுத்ததற்கெல்லாம் எதிர்த்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இதுவரை ஒரு சிறு விடயத்தையாவது இந்த அரசாங் கத்திற்கு எதிராகச் செய்ய முடிந்ததா?

தெற்கிலுள்ள அரசியல் கட்சிகளினாலேயே இந்த அரசாங்கத்தை எதுவுமே செய்ய முடியாது. ஏனெனில் மக்கள் அரசாங்கத்திற்குப் பக்கபலமாக நிற்கி றார்கள். அரசாங்கம் மக்கள் தேவை அறிந்து செயற்படுகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் உள்ளது. கடந்த வாரம் கூட எதிர்க்கட்சிகளால் இந்த அரசிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வி அடைந்தது.

உண்மையில் இன்று தமிழ் மக்களை திருப்திப்படுத்தவும், ஏமாற்றவும் தமிழ் ஊடகங்களில் மட்டுமே அறிக்கைகளை விட்டுவிட்டு தமது தேவைகளுக்கு அரசாங்கத்திடம் தனித்தனியாகச் சென்று உதவிபெறும் நிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பலரிடமும் காண முடிகின்றது. அதில் தவறில்லை. உங்களது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைவது போன்று உங்களை நம்பி வாக்களித்த அப்பாவித் தமிழ் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய தமிழ்த் தலைவர்கள் முன்வரவேண்டும்.

கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தீபமேற்றல் என ஊடக அறிக்கைகளில் மக்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் உசுப்பேற்றி விட்டு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் வெளியே தலை காட்டவில்லை. தலைவர் இந்தியாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்கிவிட்டனர். இன்னும் சிலர் வழமை போன்று வடக்கிலிருந்து கொண்டே ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டது அப்பாவி மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே. இவர்களை இராணுவத்தினருடனும், பொலிஸாருடனும் மோதவைத்துவிட்டு அவர்கள் நல்லவர்கள் போல நாடகமாடினர்.

உண்மையில் மக்களிலும், மாணவர்களிலும் இத்தமிழ்த் தலைவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நிலைமையை விளக்கி படையினரும், பொலிஸாரும் தெரிவித்தது போன்று மரணித்த மக்களுக்காக அமைதியாக வீடுகளில் இருந்தவாறே பிரார்த்தனை செய்திருக்கலாம். தமது பெயர்களும், புகைப்படங்களும் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்திய புதிய சில தமிழ்த் தலைவர்கள் சிலரையே இம்முறை வடக்கில் காண முடிந்தது. தாம் செல்லுமிடமெங்கும் கூடவே கமராக்காரங்களை வாடகைக்கு அமர்த்தி அதனைப் பத்திரிகைகளுக்கும், இணையங்களுக்கும் அனுப்பி பிரசித்தமாவது இப்புதிய அரசியல்வாதிகளின் வாடிக்கையாகி விட்டது.

தமிழ்த் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிலைமை நீடிக்குமாயின் தமிழ்ச் சமூகத்தினால் வருடா வருடம் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் வருடங்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும்.

இதிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு உண்மையான யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் தமிழ் மக்களை ஏமாற்றி நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறார்கள் என்ற உண்மையைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் முடிந்து போன கதை. அதையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதால் விமோசனம் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு மக்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது காட்டிய அக்கறையில் பத்து வீதத்தைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் காட்டவில்லை. அவர்கள் தமது வெற்றியிலேயே குறியாக இருந்தனர். அடிப்படை வசதிகளுடன், அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் வழங்கி வந்த அரசாங்கத்தைக் கைவிட்டுவிட்டு தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் இன்றுதான் அதன் உண்மைத் தன்மையை விளங்கிக் கொண்டுள்ளனர்.

தமிழர் ஒற்றுமையையும், பலத்தையும் சர்வதேசத்திற்குக் காட்டுவோம் எனக் கூறியவர்கள் இன்று தமக்குள்ளேயே பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றனர். பதவிகளுக்காக போராடுகின்றனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றனர். இதற்கா பழியை அரசாங்கத்தின் மீது இலகுவாகப் போடுகின்றனர். இதற்கு ஊடகங்கள் சிலவும் ஒத்துழைக்கின்றன.

ஊடகங்கள் உண்மை நிலையில் சிறிதளவினையேனும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஒரு பக்கச் செய்திகளை வெளியி டுவதன் மூலமாக சமூகத்திற்கு மீண்டுமொரு தடவை தாம் தவறிழைப்பதை ஊடகங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையில் இன்று ஒருசில ஊடகங்கள்தான் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அவர்களது தமிழ்த் தேசியத்திற்கும் உயிர்கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றால் அதில் மாற்றுக் கருத்திருக்காது. அந்த உயிர் கொடுப்பை நல்லவிதமாகக் கொடுத்து தமிழ் மக்களை மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வைப்பதே ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.