புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மோடி கடந்து வந்த பாதை

நீங்கள் எதிர்க்காலம், ஆதரிக்கலாம்.. எப்படி இருந்தாலும் நரேந்திர மோடி என்ற பெயரை ஒதுக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி.

டீக்கடையில் வேலை செய்து வந்த சாதாரண குடும்பத்து சிறுவன் இன்று பிரதமர் பதவி வரை வந்து விட்டார். அவர் கடந்து வந்த பாதை இதுதான்... குஜராத் மாநிலத்தின் வட்நாகர் கிராமம், மெக்சனா மாவட்டத்தில் உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு பாம்பே பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட மாநிலம்.

இங்கு வசித்தவர் தாமோதரதாஸ் முல்சந்த் மோடி. இவருடைய மனைவி ஹீராபென். இவர்களுக்கு 6 குழந்தைகள். அவர்களில் 3ஆவது குழந்தைதான் நரேந்திர மோடி.

கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி பிறந்தார். இவர்கள் கஞ்சி எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். வட்நாகர் ரயில் நிலையத்தில், தந்தை தாமோதர தாஸ் டீ விற்று வந்தார். அவருக்கு உதவியாக வேலை செய்தார் மோடி. பள்ளியில் சாதாரண மாணவன்தான் மோடி என்று ஆசிரியர்களால் கணிக்கப்பட்டவர். ஆனால், பள்ளி காலத்திலேயே அரசியல் உள்பட பல விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து விவாதம் செய்து வந்தார்.

ஆர். எஸ். எஸ். சில் சேர்ந்தார். அதுதான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போட்டு கொடுத்தது. அதில் இருந்து கொண்டே, சகோதரருடன் சேர்ந்து தனியாக வட்நாகர் பஸ் நிலையத்தில் டீ கடை நடத்தினார்.

தனது 13வயதில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து 18 வயதில் மோடிக்கு ஜசோதா பென் என்று பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சில நாட்களில் அவர்கள் பிரிந்தனர்.

அதன்பின் ஜசோதா பென், சகோதரர்கள் வீட்டில் தங்கி படித்து ஆசிரியையானார். (குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தல்கள் வரை பிரம்மசாரி என்ற கருதப்பட்ட மோடி, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில்தான் மனைவியின் பெயரை குறிப்பிட்டார்.

இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதன் பின் கடந்த 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போருக்கு பின்னர் ஆர். எஸ். எஸ். இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பிரசாரகராக விளங்கினார் மோடி.

பின்னர் சங் பரிவார் மாணவர் அணி தலைவரானார். இதற்கிடையில் டெல்லி பல்கலையில் அரசியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு முடித்தார். குஜராத் பல்கலையில் அரசியல் விஞ்ஞானத்தில் எம். ஏ. பட்டம் பெற்றார்.

இந்திரா காந்தி அவசரநிலை கொண்டு வந்த போது, அதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்றார். அப்போது சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களில் மோடியும் ஒருவர். அதன்பின், 1985ம் ஆண்டு மோடியை பா.ஜ.வுக்கு அனுப்பியது ஆர். எஸ். எஸ்.

அதன்பின், 1988ம் ஆண்டு குஜராத் பா.ஜ செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அரசியலின் அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்தார். அவர் அமைத்து கொடுத்த வியூகத்தால், 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத்தில் பா. ஜ ஆட்சியை கைப்பற்றியது.

அதன்பின், தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2001ம் ஆண்டு கேசுபாய் படேல் உடல்நிலை பாதிப்பு மற்றும் அரசு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

அப்போது, மோடியை முதல்வராக்க பா.ஜ மேலிடம் நினைத்தது. ஆனால், அனுபம் இல்லாத மோடியை முதல்வராக அத்வானி அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும் 2001 ஒக்டோபர் 7ம் திகதி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு குழு தீவிர விசாரணை நடத்தி, கோத்ரா கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

அதன்பின், 2002, 2007ம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார். அதன்பின், 2012ம் ஆண்டு மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 3வது முறையாக குஜராத்தில் பா.ஜ ஆட்சி அமைத்தார் மோடி. கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ சார்பில் தீவிர பிரசாரம் செய்தார் மோடி. அப்போதே அவர் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக கணிக்கப்பட்டார்.

அதன்படி கோவாவில் நடந்த பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். அதில் இருந்து அவருக்கு பல எதிர்ப்புகள் கட்சிக்குள் கிளம்பிள.

குறிப்பாக மோடியை எதிர்த்து கட்சியின் எல்லா பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் அத்வானி. எனினும், பா.ஜ தலைவர் ராஜ்நாத், சுஷ்மா சுவராஜ் உட்பட பல தலைவர்கள் அத்வானியை சமாதானப்படுத்தினர்.

அதன் பின் அத்வானி தனது இராஜினாமாவை வாபஸ் பெற்றார். அதன்பிறகு 2013 செப்டம்பர் மாதம் மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ அறிவித்தது. அது முதல் அவருடைய தேர்தல் வியூகம் எல்லாம் ஹைடெக்காவே அமைந்தது. அதற்கேற்ப ஊடகங்களும். பா.ஜ. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று முதலில் இருந்தே கருத்து கணிப்புகளை வெளியிட்டன. கடைசியாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வரை அந்த கணிப்புகளை ஊடகங்கள் மாற்றி கொள்ளவே இல்லை.

290 இடங்கள் வரை பா.ஜ கூட்டணி பெறும். மோடி பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே கூறி வந்தன. குஜராத் மாநிலம் வதோதரா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதியில் மோடி போட்டியிட்டுள்ளார்.

பா.ஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஜாதகம், அவருக்கு ராஜயோகத்தை அளித்தாலும், அவர் பிரதமராகியதும் அமைச்சர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாரணாசியை (காசி) சேர்ந்த ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடியின் பணிகள்

தினமும் காலையில் சுமார் 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். ஒரு மணி நேரமும் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். பின்னர் ஈமெயில்களைப் பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். இணையத்தில் குறிப்பாக கூகுள் அலர்ட்ஸை பார்வையிடுவார். அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும்.

காலை சுமார் 7.30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்து விடுவார். இவருக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு.

அரசுப் பணியை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 15 நிமிடங்களுக்கு அதிகமாக நான் ஓய்வெடுத்ததில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் உரையாடும் போது தெரிவித்திருக்கிறார். தன்னுடைய அலுவல் முடிந்து தூங்கச் செல்லும் போது நள்ளிரவாகிவிடும். அவர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தான் தூங்குவார்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை நிருபர் இவரை பேட்டி எடுக்க மூன்று நாட்கள் இவருடன் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களில் இவருடைய வேலைப்பளுவை பார்த்த அந்த நிருபர் அசந்தே போய்விட்டார்.

இப்படி வேலை செய்ய தங்களால் எப்படி முடிகிறது என்று அந்த நிருபர் கேட்க, அதற்கு அவர் சரணாகதி. நான் செய்யும் பணிக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன். அதனால் அந்த பணி எனக்கு பளுவாகத் தெரியவில்லை என்று பதிலளித்தார்.

மோடியின் குணம்

அபார ஞாபக சக்தி

எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் வேலை வெற்றிகரமாக முடியும் என்று நன்கு அறிந்தவர். ஒரு பிரச்சினையின் முழு பரிமாணத்தைத் தெரிந்து கொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார். ஒரு பிரச்சினையை நன்கு புரிந்து கொண்டாலே அதை பாதி சரி செய்த மாதிரி என்று அடிக்கடி கூறுவார்.

தற்காலிகமான தீர்வெல்லாம் அவருக்குப் பிடிக்காது. முழு தீர்வுதான் அவரைப் பொறுத்தவரை சரியான தீர்வு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்பேர்ப்பட்டாவது முடிக்காமல் ஓயமாட்டார். பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்தாயிற்றே. இனிமேல் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடமாட்டார். பொறுப்பை ஒப்படைத்தவரிடம் விசாரிப்பார். மேற்பார்வை இடுவார். யாரிடமிருந்து நல்ல யோசனை வந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். மற்றவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்பார்.

மேலாண்மை நிர்வாகத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜஜஆல் பாட வகுப்புக்குச் செல்வார். கூடவே தன்னுடைய மந்திரி பிரதானிகளையும் கூட்டிச் செல்வார். அவருக்கு எதிலும் தாமதம் பிடிக்காது.

வேலையை செய்வது மட்டுமல்லாது அதை சரியாக செய்தாக வேண்டும். தான் இட்ட பணி சரியாக நடைபெறவில்லை என்றால் பொறுமை இழந்துவிடுவார்.

பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மினை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தவிர்க்க, குட்கா என்னும் போதைப் பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தினார்.

மேலும் தண்ணீர் வீதி வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

ருதுகளும், மரியாதைகளும்

2006 இந்தியா டுடே நாளிதழ் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற விருதை வழங்கி கெளரவித்தது.

குஜராத் கணனித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பு இரத்னா விருதை வழங்கி கெளரவித்தது.

2009 ஆசியாவின் சிறந்த எப். டி. ஐ. பெர்சனாலிட்டி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 டைம் பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளால் ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.

நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத்தேவை பொருளாதார சுதந்திரம்தான். இது இல்லாவிட்டால் பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒருபோதும் சொல்ல முடியாது என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தும் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சி கண்டு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியல் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம்.

மேலும் அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

மணவை அசோகன் ...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.