புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
சிறுபான்மையினர் என்ற மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும்

சிறுபான்மையினர் என்ற மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும்

TULF தலைவர் வி. ஆனந்தசங்கரி

l புலிப்பயங்கரவாதத்தை தோல்வி அடையச் செய்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகின்றன. கடந்த காலத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் இந்த அரசாங்கம் நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றது. அந்த வகையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தைக் கூட சிங்களவர்களிடம் கையளித்திருந்தால் அதையும் இன்னும் சிறப்பாக செய்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சுனாமியினால் வட கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோது கூட இந் நாட்டு சிங்கள பெளத்த மக்களே அவர்களுக்குப் பெரிதும் உதவினார்கள்.

சிங்களவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களைப் பட்டினியில் இருக்கவிடவில்லை. சுனாமியின் போது வெளிப்பட்ட இந்த நட்பு தேசிய சமாதானத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது. விபத்துக்கு ஆளானவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இவர்கள் எந்தவொரு பேதத்தையும் பார்க்கவில்லை. ஆகையால், யுத்த முடிவில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பொறுப்பை சிங்களவர்களிடமே விட்டிருந்தால் அதை அவர்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி இருப்பார்கள் என்பதே எனது கருத்து.

 

நாட்டிற்கு வெளியே வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இருப்பது தனியானதொரு வேலைத்திட்டம். இந்நாட்டில் இன ஒற்றுமை சமாதானம் ஆகியன நிலவுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீரவில்லை. அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது போன்ற பொய்ப் பிரசாரங்களைச் செய்து அதில் இலாபம் ஈட்டுவதே அவர்களது நோக்கம்.

l பொதுநலவாய மகாநாடு இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையிலும் புலம்பெயர் அமைப்புகள் கபட நாடகமே ஆடினார்கள், ஆனால், இங்கே வாழும் தமிழர்களுக்கு கிடைத்த பயன் என்ன?

இந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை இந் நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டுக்கு எதிராக வெளிப்பிரச்சினைகள் வரும்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அதற்கு முகம் கொடுக்க வேண்டும். ஆனால் ரி.என்.ஏயின் மதியற்ற தலைவர்கள் கொழும்பில் பொதுநலவாய உச்சிமாநாடு நடைபெறும் போது யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் செய்தார்கள்.

இது எவ்வளவு ஒவ்வாதவொரு செயல். அங்கே சென்று எதிர்ப்புத் தெரிவிப்பதை விட்டு விட்டு இங்கேயிருந்து அவர்களது பிரச்சினைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கலாமே. 1976ஆம் ஆண்டில் அவ்வாறான உச்சிமாநாடு ஒன்று இலங்கையில் நடக்கையில் நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினோம்.

ரி.என்.ஏயின் சம்பந்தன், ஸ்ரீதரன் போன்ற தலைவர்கள் மேல் கூறியவாறு செயற்படுகையில், நான் நமது நாட்டிற்கு வருகைதந்த பொதுநலவாய தலைவர்களுக்கு பகிரங்க அறிக்கை ஒன்றினை கையளித்தேன். அதன்மூலம் இலங்கைக்கு எதிராக யுத்தத்தடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகள் பற்றி சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு பதிலாக பிரச்சினைகள் இருப்பின், அவற்றை நட்புரீதியாக தீர்க்க முன்வர வேண்டும் என்று அழுத்திக் கூறினேன். அத்தோடு பொதுநலவாய தலைவர் என்ற வகையில் எமது ஜனாதிபதிக்கு இது தொடர்பான பரந்த அளவில் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினேன். அத்தோடு ஒரு தரப்பினரின் குற்றங்களை மாத்திரமின்றி, புலிகள் தரப்பில் இடம்பெற்ற குற்றங்களைப் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டினேன்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின் ஒரு துப்பாக்கி வேட்டு கூட இதுவரை வெடிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். அதனால் இந்த தலைவர்கள் தமது அமைப்பில் இணைந்திருக்கும் நாடுகளின் பிரச்சினையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அத்துடன் இதற்கு முன் நான் நமது ஜனாதிபதிக்கு எழுதிய சில கடிதங்களின் பிரதிகளையும் இணைத்து அனுப்பினேன். இப்படிச் செய்வதன் மூலம் வெளிநாட்டு தலைவர்களுக்குச் சிந்தித்து செயற்படும் வாய்ப்புடன் நமது நாட்டின் உண்மை நிலையினை புரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க என்னால் முடிந்தது. ஆனால் அந்த அரிய வாய்ப்பை த.தே.கூ கைநழுவ விட்டுவிட்டது. அவர்களின் நோக்கம் நம் நாட்டுப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் என்பது அல்ல. மாறாக நமது பிரச்சினைகளில் வெளிச் சக்திகள் தலையிட வேண்டும் என்பதேயாகும்.

l ஜெனிவாவில் நம் நாட்டிற்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்த சிலர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

நமக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனால்தான் இந்தியாவிடமும், நவனீதம்பிள்ளையிடமும் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எமக்கே இடம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஏனென்றால், வெளியிலிருந்து வந்து எவரும் நடத்தும் விசாரணைகளை எம் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், இதை சம்பந்தப்பட்டத் தரப்புகளுக்கு நான் விளக்கி கூறினேன்.

l யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களின் வாழ்க்கை நிலைபற்றிய உங்கள் கருத்து என்ன?

எமது மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வந்தார்கள். புலிகளின் அழுத்தங்களும் மிக அதிகமாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது அங்கே அந்த நிலமை இல்லை. தெற்கே சில அரசியல்வாதிகள் கூறும் கதைகளே அம் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றது. இந்நாட்டில் சிறுபான்மை என்று எவரும் இல்லை என்று ஜனாதிபதி அவர்களே கூறி இருக்கின்றார். ஆகையால் தமிழர்களும் நாம் சிறுபான்மை என்ற மன நிலையிலிருந்து விடுபட்டு செயற்பட முன்வரவேண்டும். அவர்கள் தம்மை ஒரு சிறுபான்மை இனம் எனக் கருதும்வரை அவர்கள் மனங்களில் ஒரு பீதி நிலவும். இந்த பீதியினாலேயே அவர்கள் புலிகளின் பேச்சை நம்பினார்கள். புலிகளோ இந்தப் பீதியினைத் தக்க வைத்துக்கொள்ள இனவாதத்தை பரப்பினார்கள். கடந்த தேர்தலில் கூட நான் இனவாதம் பேசாமலே தேர்தலில் களம் இறங்கினேன். அந்நேரம் அரசாங்கம் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அந்த உதவியினை செய்ய முன்வராது போய்விட்டது. நான் தோல்வி அடைய இனவாதிகளுக்கே வெற்றி கிடைத்தது. இனவாதத்தைத் தோல்வி அடையச் செய்ய இந்த அரசாங்கமே உதவ வேண்டும்.

மகாவம்சத்தில் வரும் விஜயனின் இலங்கை விஜயத்தை சற்றுப் பாருங்கள். அதை கலாநிதி நெவில் ஜயவீர மிகத் தெளிவாகக் கூறி இருக்கின்றார். குவேணியின் கதையில், விஜய பாண்டி நாட்டு தமிழ் அரசனின் மகளைத் திருமணம் முடித்தார். பாண்டிய தேசத்திலிருந்து 1000 பேரை இங்கே அனுப்பி வைத்தமை ஆகிய விடயங்களை வைத்துப் பார்க்கும்போது, இனவாதத்தை தூண்டுவது என்பது அர்த்தமற்ற விடயமே என்பது தெரியவரும்.

l வடக்கே அடிப்படை வசதிகளில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தியினைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

அங்கே ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி கண்ணுக்குத் தெரியக்கூடியதாகவே இருக்கின்றது. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த மக்களுக்கு பெரிய பெரிய காரியங்களுக்குப் பதிலாக வயிற்றுக்கு உணவு அவசியமாக இருக்கின்றது. அதற்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. யுத்தம் இடம்பெறுவதற்கு முன் அப்பகுதி விவசாயிகளின் நெற் செய்கை மிகவும் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் யுத்தத்தின் பின்னர் இந்த நிலைமாறி அங்கே தொழில்வாய்ப்புகள் குறைந்து இருக்கின்றன. சம்பாத்தியம் இன்றி சாப்பாடு ஏது? ஆகையால் இவர்களுக்கு உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பிரதான வீதி உட்பட வீதி நிர்மாணப்பணிகள் இடம்பெறுவது நல்லதுதான். ஆனால் அவற்றை பிரதேச சபைகள் மூலமாக செயற்படுத்தினால் அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். ஆகையால் இதை கவனத்தில் கொள்வது நல்லது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.