புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
73 ஆம் ஆண்டில் தடம்பதிக்கும் கம்பளை சாஹிராக கல்லூரி

73 ஆம் ஆண்டில் தடம்பதிக்கும் கம்பளை சாஹிராக கல்லூரி

கல்வி கற்றல் கடனாகும். மெல்லியலார்க்கும் அது விதியே கலவிதனை சீன வளநாடு சென்றேனும் கற்றிடுக. மதிக்கு அது ஓர் விளக்கெனும் நபிகள் பெருமானார் செப்பிய மொழிக்கமைய சிந்தித்துச் செயலாற்றியதன் விளைவில் உருவானதே கம்பளை சாஹிராக் கல்லூரியாகும். இன்று எழுபத்தி மூன்றாண்டில் தடம் பதிக்கின்றது.

இரண்டாம் உலகப் போரின் போது உருவான இக்கல்லூரி கிழக்காசியாவில் அதியுயர் கலாபீடமாக மிளிரும் கலா விருட்சமாகும். இந்நாட்டு முஸ்லிம்களின் தனித்துவமிக்க கலாபீடமாக அறிவொளி பரப்பி வருகின்றது. இஸ்லாமிய அடிப்படையில் கல்வியறிவை விரட்டுவதோடு இஸ்லாமிய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணிவருகின்றது.

எழுபத்திரண்டாண்டுகளை நிறைவு செய்துள்ள இக்கல்லூரியை ஆரம்பித்து முஸ்லிம்களின் கல்விக்காக ஓர் அருஞ்சாலையாக அமைத்த மறைந்த ரீ. பி. ஜாயா மற்றும் பதியுதீன் மஃமூத் ஆகியோரை இச்சமயம் நினைவுகூரல் சாலப்பொருத்தமானது. ஜாயா தனதுடலாவி யனைத்தையும் கம்பளை சாஹிராவை நிறுவ சமர்ப்பித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் பால் கொண்டிருந்த கல்விக் கரிசனை காரணமாக தேசமான்ய பதியுதீன் மஃமூத் அதனை அபிவிருத்தி செய்து குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி பெறவும் உதவியுள்ளமை அவர்களின் சமூகச் சிந்தனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பதியுதீன் வரலாற்றில் கம்பளை சாஹிராவும் சாஹிராவின் வரலாற்றில் பதியுதீனும் இறுகப் பிணைந்து பரிணமிப்பது நாடறிந்த உண்மையாகும்.

மறைந்த பதியுதீன் மஃமூத் அதிபராக பதவி வகித்த 16 வருட காலத்திலும் 1960ம் ஆண்டின் பின்னர் கல்வி அமைச்சராக பதவியேற்ற பின்னரும் இக்கல்லூரியின் பெளதீக வளங்களின் அபிவிருத்திக்கும் கல்வி நிலையின் உயர்வுக்கும் புரிந்த பணிகள் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் பொன்னெ ழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை.

1942ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி கம்பளை ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரித்தான நிலப்பரப்பில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட ஓர் ஓலைக் குடிசையில் எட்டு மாணவர்களையும் நான்கு ஆசிரியர்களையும் கொண்டு உருவான கம்பளை சாஹிரா இன்று பல கட்டிடத் தொகுதிகளையும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லினச் சமூக மாணவர்களையும் இரு நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் மேலும் பல ஊழியர்களையும் கொண்டு வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடுகின்றது.

இக்கல்லூரி கற்றல் நடவடிக்கை, சமய கலாசாரப் பாரம்பரிய வளர்ச்சி, ஒழுக்க விழுமியம் போன்ற அனைத்து அம்சங்களிலும் ஓர் முன்னோடியாகப் பரிணமித்து இதனை உருவாக்கிய சிற்பிகளின் வேணவாவை நிறைவேற்றி வருகின்றது. 1967ல் வெள்ளி விழாவையும் 1992ல் பொன் விழாவையும் கொண்டாடிய இக்கல்லூரியில் இதுவரை 25 அதிபர்கள் பணி புரிந்துள்ளனர். இவர்களில் 16 வருடங்களாக பதியுதீன் மஃமூத்தும் ஏழு ஆண்டுகளாக எம். எச். எம். மஃரூப் மரிக்காரும் பாரிய பணிபுரிந்து சாஹிராவின் வரலாற்றில் ஒரு பொன்யுகத்தை உருவாக்கிய அதிபர்களாக மிளிர்கின்றனர்.

1961ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி வெளியான இலங்கை விசேட வர்த்த மானியில் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் அதிகாரத்தின் பிரகாரம் கம்பளை சாஹிராக் கல்லூரி அரச உதவி பெறும் முதலா வது பாடசா லையாகப் பிரகடனப் படுத்தப் பட்டதோடு கலவன் மற்றும் மும்மொழி மூலப் பாடசாலைகளில் முதன் மைமிகு தேசிய பாடசா லையாக 1988.02.19ம் திகதி தரமுயர்த்தப்பட்டது.

கல்வியின் நோக்கம் நற்பிரஜைகளை உருவாக்குவதாகும். ஒரு பாடசாலையின் முன்னேற்றம் அப்பாடசாலை வெளியீடு செய்த நற்பிரஜைகளைக் கொண்டே பிரதிபலிக்கின்றது. நீண்ட கால வரலாற்றைக் கொண்டு கல்வியை மட்டிட முடியாது. எனினும் கல்வியின் முன்னேற்றத்திற்கு இவையும் அவசியமாகும்.

நற்பிரஜைகளை நாட்டுக்கு உருவாக்கிய கலையகமாக கம்பளை சாஹிரா திகழ்கின்றமை சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

இங்கு ஒருவகையான ஒற்றுமை நிலவுகிறது. இது தேசிய ஒற்றுமைக்கும் இன செளஜன்யத்திற்கும் ஒரு நல்ல முன்மாதிரியாகும். முஸ்லிம் கல்விக்கு அருந்தொண்டாற்றிய முன்னாள் அதிபர் கலாநிதி பதியுதீன் மஃமூத் இங்கு மேற்கொண்ட அளப்பரிய சாதனைகள் சாஹிராவின் துரித வளர்ச்சிக்கு வழிகோலின சகலரினதும் ஒத்துழைப்பு மூலம் இக்கல்லூரி இந்நாட்டில் மேலும் வளமிகு கலாபீடமாக மாற நாமனைவரும் பாடுபட வேண்டுமென பொன்விழா மேடையில் முன்னாள் அதிபர் எம். எச். எம். மஹ்ரூப் மரிக்கார் தமது உரையில் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டப்பட்டத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.