புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
இந்திய மாநில தேர்தல் பெறுபேறுகளின் பிரதிபலிப்பு காங்கிரஸ் கட்சியின் Pழ்ச்சியின் ஆரம்பமா?

இந்திய மாநில தேர்தல் பெறுபேறுகளின் பிரதிபலிப்பு காங்கிரஸ் கட்சியின் Pழ்ச்சியின் ஆரம்பமா?

தேர்தலை இலக்காகக் கொண்டும், தென்னிந்தியாவை திருப்திப்படுத்தவும் இலங்கை தொடர்பில் உள்ளனும், கள்ளனுமாக செயல்பட்டு தனது சொந்த வெளிநாட்டுக் கொள்கையையே தாரை வார்த்துவரும், மென்போக்கு வாதியுமான இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் கட்சி இறங்கு முகத்தை நோக்கி பயணிப்பதாக கூறப்படுகிறது. மாநிலத் தேர்தல்களிலும் தேசியத் தேர்தல்களிலும், முழுக்க முழுக்க தொகுதிவாரி முறைகளைக் கொண்டியங்கும் இந்திய அரசியல் கட்டமைப்பில், இலங்கையைப் போலன்றி பின்னடைவு ஏற்பட்டுவிடின் ஈடுகட்ட முடியாத நிலை தவிர்க்க முடியாததாகும்.

அபிலாஷையும் ஆரூடமும்

எது எவ்வாறாக இருப்பினும் மிஸோறாம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் சத்திஷ்கார் போன்ற மாநிலங்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் மிஸோராம் தவிர்ந்த ஏனைய நான்கு மாநிலங்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளமை காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் ஆரம்பத்தையும், பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றிக்கான ஆரம்பத்தை யும் காண்பிப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அந்த நாட்டு மக்களின் அபிலாஷைப் பிரகாரம் என்ன நடக்கும் என்பதை இலங்கையில் இருந்து கொண்டு அறுதியாகக் கூற முடியாது என்றாலும் பாரதீய ஜனதா கட்சி அடுத்த ஆட்சியை கைப்பற்றும் என்று ஆரூடங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோடித் தேர்தல்கள், குறிப்பாக சட்ட சபைத் தேர்தல் பெறுபேறுகள் அளவீட்டுக்கு தக்க சான்றாகவே அமைய முடியும் என்ற கருத்துகளுண்டு.

எண்ணமும் எதிர்பார்ப்பும்

இந்தப் பின்னணியில் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நூறு வீதம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை கொண்டுள்ள இலங் கைக்கு - இந்தியாவின் ஆட்சி பாரதீய ஜனதா கட்சியின் கரங்க ளில் வீழ்வது முற்றிலும் கடினமா னதாக அமையலாம். ஏனெனில் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும், என்ன பேசும் என்பதை தற்போதைக்கு கூற முடி யாவிடினும், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வைத்து கருத்துக் கூறிய கட்சியின் குரல் தரவல்ல அதிகாரியொருவர் இலங்கையில் வடக்கு தமிழர்களு க்காக தனியான சுயாட்சி கொண்ட பிரதேசம் தேவை என்று முழக்கமிட்டார்.

ஆதங்கமும் ஆக்கிரோஷமும்

எவ்வாறாயினும் முன்னாள் முதல்வரான கருணாநிதி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பங்குதாரராக இருப்பதால் பாரதீய ஜனதாக் கட்சியை பலப்படுத்துவதில் முன்னின்று செயல்படாதிருக்கலாம். ஒரு கட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற அபிலாஷை கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அந்தடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடுங்கோட்பாட்டுத் தன்மையை கடைப்பிடித்து வரும் அவர் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி பீடமேறினால் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை தீவிரப்படுத்துவார் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர்.

நரேந்திர மோடியும் முஸ்லிம்கள் மீதான

தாக்குதலும்

இலங்கை மீது இந்தியா மென்போக்கை கடைப்பிடிப்பதாக மிகப்பிந்தியளவில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இந்திய தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சமீபத்திய இந்தியப் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்து கொண்டு தனது கட்சியை சிம்மாசனம் ஏற்றுவதற்கு அயராதும், அகோரமாகவும் களம் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஐந்து மாநிலங்களில் பெற்ற வெற்றியோடு இந்தியாவில் அரசியல் களம் சூடுபிடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குஜராத் மாநிலத்தில் 2002இல் நடந்தமை கவலை தருவதாக இந்தியர்கள் தெரிவிக்கின்றனர். அச்சமயம் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி நேரடிப் பொறுப்புதாரியோ இல்லையோ அவரால் கடந்தகாலத் தலைவர்கள் போன்று நடக்க முடியவில்லை என்பது உண்மையாகும். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக, மாநிலத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற கோதாவில் நேரடியானதும், உடனடியானதுமான நடவடிக்கை அவரால் எடுக்கப்படவில்லை.

பகிரங்கமாக முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை. மீள்வாக்குறுதியடிப்படையில் ஒரு அடையாள நடவடிக்கையாக மஸ்ஜிதுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ளவோ, அயல் பாகக்காரர்களை தரிசிக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக கலகக்காரர்களை பாதுகாத்து ஆதரவளித்ததாக அப்போதும், இப்போதும், தெரிவிக்கப்பட்டது - தெரிவிக்கப்படுகிறது.

தேசியவாதமும் வாக்காளர் தீர்ப்பும்

சுயமாக தேசியவாதி என பிரகடனம் செய்துகொள்ளப்பட்டவரான மோடி போன்ற தேசிய வாதிகள் இந்தியாவில் காணப்படு கின்றனர். அத்தகையோரின் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலான பேச்சுக்களுக்கு இடமுண்டு. இப்பேர்ப்பட்ட சமய முத்திரை குத்திக்கொண்ட இந்திய தேசிய வாதத்துக்கு காந்தீய தலைவர்கள் இடம்கொடுக்கவில்லை. இந்த வகையான சமயரீதியான தேசப்பற்றாளர்களும் தேசிய வாதத்தோரும் இலங்கையிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் இந்தியாவின் தற்போதைய பிடியில் கடந்தகால நிலைமைகள் வலுமிக்கதாக தங்கியுள்ளது என்பதை மோடி அறியாதவரல்ல. இந்திய தேசத்தின் பார்வையில் தன்னை சமயம் சாராத, சமதர்ம பொதுவான மனிதன் என்பதை எப்படி அடையாளப்படுத்தியுள்ளார் என்ற தகவலை இந்தியவாக்களர்களின் தீர்ப்பே வெளிப்படுத்தும்.

நகர்வும் நம்பிக்கையும்

அடுத்தாண்டு (2014) தேசியத் தேர்தலுக்கு முன்பாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு காய்ச்சல் பிடித்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த டெல்லி மாநிலத்தைக் கூட இழந்துவிட்டமையை ஒரு அவமானமாக பாரதீய ஜனதாக் கட்சி காண்பித்துள்ளது. கூட்டுக்கட்சிகளின் வடிவமான காங்கிரஸ் கட்சியின் மத்திய ஆட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான பலப்பரீட்சையை காண்பித்த மாநிலங்களவை வாக்கெடுபபு -2014 ஏப்ரல் மேயில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடியின் பிரதமர் வேட்பாளர்த்துவத்துக்குரிய அங்கீகாரம் என கூறும் பாரதீய ஜனதா கட்சியினர் அவரின் பிரபல்யத்தைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தி ஒரு கூட்டு அரசாங்கத்துக்கான வழியையாவது தோற்றுவிக்க முடியும் என நம்புகின்றனர்.

120 கோடி மக்கள் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதியினரை கொண்டுள்ளதாக காணப்படுகின்ற மாநிலங்களின் வெற்றி தொடர்பில் பொருளாதார வளர்ச்சி வீதம் ஐந்தாக குறைவடைந்துள்ளமையும் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சம்பந்தப்பட்ட வெற்றிகளையடுத்து புளகாகிதம் அடைந்துள்ள பி.ஜே.பி.கட்சிக்காரர்கள் - பழம்பெரும் கட்சியான காங்கிரஸ¤க்கு எதிராக தோன்றியுள்ள ஆத்திர அலையை அனுபவிக்கப் போவதாக சூழுரைத்துள்ளனர். தனிப்பெரும் குழுவாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும் ஆட்சிபீடம் ஏறுவதற்குரிய பெரும்பான்மை கிடைக்காது போகலாம் என்ற கடந்தவருட அபிப்பிராய வாக்கெடுப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படைப்பயிற்சியும் கண்டனமும்

அது அவ்வாறிருக்க 2014இல் நடைபெறவுள்ள லோக் சபாத் தேர்தலுக்கு முன்பாக இரு பிரதமர் வேட்பாளர்கள் ஒன்றிணைய முடியாது என்ற தோரணையில் பிஜேபி -அ.தி.மு.க கூட்டணியை தோற்றுவிப்பதை முடியாத காரியம் என பிஜேபி கட்சியின் முக்கியஸ்தர் கூறியிருப்பதாக கடல் கடந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க வின் பிரதமர் வேட்பாளர் - ஜெயலலிதா, பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் - மோடி என்றடிப்படையில் பேசப்பட்டு வருகின்ற பின்புலத்தில் ஜெயலலிதா போன்று பாரதீய ஜனதா கட்சியும் இலங்கைக்கு கடற்படைப்பயிற்சி வழங்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. ஏன் இந்திய அரசாங்கம் மீண்டும், மீண்டும் ஒரே தவறை செய்ய வேண்டும் என்பது அந்தக் கட்சியின் கேள்வியாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.