புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்

ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்

அமைச்சர் டளஸ்

(அஷ்ரப் ஏ.சமத்)

2015 ஆம் ஆண்டில் இலங்கையின் 24 மாவட்டங்களிலும் 24 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளன. இலங்கை பல்கலைக்கழகங்களில் இல்லாத உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த கிராக்கியுள்ள 46 புதிய பயிற்சிநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்குகின்றது.

இப் பயிற்சி நெறிகள் யாவும் அடுத்த ஆண்டு பாடசாலைக் கல்வியிலிருந்தே போதிக்கப்படும். அதன் பின்னர் சாதாரண தரம், உயர்தரம் வரை கற்ற மாணவர்கள் 45 ஆயிரம் பேர் தொழில்நுட்ப பாடங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு இளைஞர் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதி கல்வியமைச்சர் மோகன்லால் கிரோவும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததாவது,

2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 23 ஆயிரம் பேருக்கே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 6 வீதமாகும். ஏனைய 94 வீத மாணவர்களது நிலை என்ன? பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத 1 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அத்துடன் இம்முறை 3 பாடங்களிலும் “ஏ” சித்தியெய்திய 1900 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. இந்த 6 வீதத்தில் 3.5 வீத மாணவர்கள் கலைத்துறைக்கே பல்கலைக்கழகங்கள் செல்கின்றனர். இவ் வகையான கல்வி நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் பிரயோசனமற்றது. இதற்காக கல்வியமைச்சும், உயர்கல்வியமைச்சும், இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கள் இணைந்து இந்த ஆண்டு முதற்கட்டமாக 250 தேசிய பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்வி பாடங்களை கற்பித்து வருகின்றன. இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.