ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

சிறுநீரகம் விற்கும் மோசடி கும்பல் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சிறுநீரகம் விற்கும் மோசடி கும்பல் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

போலி ஆவணங்கள் தயாரித்து சிறுநீரகம் விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஈரோடு மாவட்டம், மேலப்பாளையம் சென்னிமலையைச் சேர்ந்தவர் ஜெயமணி (38). இவருக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதடைந்தது. இதனால், டாக்டர்கள் அவரது சிநுநீரகத்தை மாற்றியாக வேண்டும் என்று கூறினர்.

சிநுநீரகம் மாற்ற வேண்டுமானால் அரசு மருத்துவமனை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்தான் அதற்கான மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறுநீரகத்தை தானமாகத்தான் பெற வேண்டும். அதை நெருங்கிய உறவினர்தான் கொடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை டொக்டர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து, அனுமதி அளிக்கும். அதன் பின்புதான், சிநுநீரகத்தை தானமாக பெற்ற ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்ற முடியும். இதன்படி, ஜெய்மணிக்கு சிறுநீரக தானம் செய்ய சென்னை தண்டையார்பேட்டை பர்மா காலனியைச் சேர்ந்த மணியின் மனைவி தேவி (35) என்பவர் தான் நெருங்கிய உறவினர் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை டொக்டர்களிடம் அளித்தார். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்று ஆய்வில் தெரிய வந்தது.

இது குறித்து கீழ் பாக்கம் பொலிசில் மருத்துவக் கல்வி இயக்குநர் கனகசபை புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படை யில் தேவியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

தேவி, கூலி வேலை செய்கிறார். அவர் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இதை பயன்படுத்தி ஒரு கும்பல், அவரிடம் சிறுநீரகத்தை ரூ. 2 இலட்சத்துக்கு விலை பேசியுள்ளது. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். ஆவணங்களை பரிசீலித்ததில் அவர் மாட்டிக் கொண்டார் என்று தெரிய வந்தது.

இந்த மோசடிக்கு பின்னால் பெரிய கும்பல் இயங்கலாம் என்று பொலிசார் சந்தேகித்தனர். இதையடுத்து உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர் சார்ள்ஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தேவி கொடுத்த தகவலின் அடிப்படையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சோபியா (30), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு தேவி (39), ஓட்டேரியைச் சேர்ந்த கிரிஜா (43), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 பேரை கைது செய்தனர். அவர்கள்தான் தேவிக்கு பணம் தருவதாக கூறி ஏற்பாடு செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்போது பிடிபட்ட கும்பலிடம் விசாரித்தால் மேலும் பலர் சிக்குவார்கள் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களுக் கும், போலி ஆவணங்கள் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி