ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

சுனந்தாவின் மரண விசாரணை மீண்டும் பொலிசுக்கு மாற்றம்

சுனந்தாவின் மரண விசாரணை மீண்டும் பொலிசுக்கு மாற்றம்

சுனந்தா தரூர் சாவில் மர்மம் நீடிக்கும் நிலையில் வழக்கு, டெல்லி பொலிசுக்கு மீண்டும் மாற்றப்பட்டது.

முதல் இரு மனைவிகளை விவகாரத்து செய்த நிலையில் மத்திய மந்திரி சசி தரூர் (வயது 57), மூன்றாவதாக சுனந்தாவை (52) திருமணம் செய்திருந்தார். 2 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில் சுனந்தாவுக்கு சசி தரூர் மூன்றாவது கணவர்.

இவர்களின் 3 ஆண்டு கால இல்வாழ்வில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் புகுந்ததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக சசி தரூர் - சுனந்தா இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது சுனந்தா கடந்த 17 ஆம் திகதி இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவு அடையாத நிலையில் சுனந்தா இறந்திருப்பதால் அவரது சாவு தொடர்பாக துணை ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வந்தது. சசி தரூர், சுனந்தாவின் சகோதரர், மகன், சசி தரூரின் உதவியாளர்கள் ஆகியோரிடம் துணை ஆட்சியர் அலோக் சர்மா விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். அவர்கள் யாரும் வன்செயலால் சுனந்தாவுக்கு மரணம் நேரிட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எதையும் எழுப்பவில்லை என பொலிசுக்கு துணை ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

இருப்பினும் கொலை, தற்கொலை, விபத்து மரணம் என மூன்று விதத்தில் சுனந்தாவுக்கு மரணம் நேரிட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு, காரணத்தை உறுதி செய்ய பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

சுனந்தாவின் இடது உள்ளங்கையின் விளிம்பில் பற்களால் கடித்த ஆழமான சுவடு இருந்ததும், 12க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுனந்தா விஷத்தன்மையால் இறந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனந்தா எப்படி இறந்தார் என்பதில் மர்மம் நீடிக்கிற நிலையில் துப்பு துலக்குவதில் ஆற்றல் வாய்ந்த டெல்லி குற்றப் பிரிவு பொலிசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்புடைய பல்வேறு அம்சங்களில் விசாரணை நடத்த ஏதுவாக வழக்கு, டெல்லி குற்றப் பிரிவு பொலிசுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் மீண்டும் வழக்கு தெற்கு மாவட்ட பொலிசுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை எளிதாக அமையும் வகையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த சுனந்தாவின் சகோதரர் ராஜேஷ், தமது சகோதரிக்கு சசி தரூர் கெடுதல் விளைவித்திருப்பார் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி