ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷண் விருது

கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷண் விருது

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு 127 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கமல்ஹாசன், வைரமுத்து, லியாண்டர் பயசுக்கு பத்ம பூஷண் விருதும், யுவராஜ் சிங், வித்யா பாலனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, சமூக சேவை, மருத்துவம், சினிமா, விளையாட்டு, அறிவியல், வர்த்தகம், தொழில் துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் அறிவித்தார். மொத்த விருதுகளின் எண்ணிக்கை 127. இதில் 2 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 24 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 101 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களில் 27 பேர் பெண்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 10 பேருக்கும் விருது வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல விஞ் ஞானி ரகுநாத் ஏ. மசேல்கர், யோகா குரு பி. கே. எஸ். ஐயங்கருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் நிகழ்ச்சியில், இந்த விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கெளரவிக்க உள்ளார். விருதுக்காக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் விவரம் : பத்ம பூஷண் விருது : நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் வினாயக்ராம், திருமாலாச்சாரி ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்), கவிஞர் வி. ஆர். தேவர்.

பத்ம ஸ்ரீ விருது: சந்தோஷ் சிவன் (ஆர்ட் பிலிம்), அஜய் குமார் பரிதா (அறிவியல் மற்றும் பொறியியல்), மல்லிகா சீனிவாசன் (வர்த்கம் மற்றும் தொழில்துறை), பவுலோஸ் ஜாக்கப் (மருத்துவம்), ஹக்கீம் சயீத் கலிபதுல்லா (யுனானி மருத்துவம்), தீபிகா பலிக்கல் (விளையாட்டு).

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி