ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

மூன்று நாடுகளுக்கு அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. பரிந்துரை நாளை விவாதத்திற்கு

மூன்று நாடுகளுக்கு அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. பரிந்துரை நாளை விவாதத்திற்கு

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று நாடுகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் புதிய பரிந்துரை தொடர்பில் கிரிக்கெட் அதிகார வட்டம் இந்த வாரம் விவாதிக்கவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி. சி) அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டால் தாம் பிரதான சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக இந்தியா எச்சரித்துள்ள நிலையிலேயே இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வரைவு தொடர்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் டுபாயில் இடம்பெறவிருக்கும் ஐ. சி. சி. நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் செல்வந்த நாடுகளாக இருக்கும் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் இந்த பரிந்துரையில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த வரைவில் டெஸ்ட் 'கிரிக்கெட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு, வர்த்தக முக்கியத்துவம் காரணமாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த பிரிவில் கூட உள்ளடக்கப்படவில்லை. முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட ஐ. சி. சி.யின் 10 முழு அங்கத்துவ நாடுகளில் 7 நாடுகளின் ஆதரவு வேண்டும்.

கடந்த வியாழக்கிழமை கூடிய இந்திய கிரிக்கெட் சபையின் செயற்குழு, இந்த பரிந்துரைகள் கிரிக்கெட்டின் நன்மைக்கு உதவும் என்று பிரகடனம் செய்தது. அதில் எதிர்கால ஐ. சி. சி. போட்டிகளில் பங்கேற்பது, ஐ. சி. சி. போட்டிகளை நடத்துவது, ஐ. சி. சி. நிறைவேற்றுக் குழுவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வரைவு நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது என்று இந்திய கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

அத்துடன் இந்திய கிரிக்கெட் சபை பாகிஸ்தான் உட்பட ஏனைய முழு அங்கத்துவ நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கைக்கு வரவும் அதன் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஐ. சி. சி. யின் தற்போதைய எதிர்கால போட்டி அட்டணையில் குறித்த காலத்தில் 10 முன்னணி நாடுகளும் ஒவ்வொரு அணிகளுக்கு இடையிலும் போட்டிகளில் பங்கேற்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த முறையில் ஏனைய நாடுகளுக்கான போட்டிகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த பரிந்துரையை எதிர்வரும் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒத்திவைக்கும்படி டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நிலை அணியான தென்னாபிரிக்கா மற்றும் கடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற இலங்கை ஆகியன கேட்டுக் கொண்டுள்ளன.

மறுபுறத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தின் தலைவர் போல் மார்ஷ¤ம் இந்த பரிந்துரைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"போட்டியின் கட்டுப்பாட்டை இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திடம் கையளிக்கும் முயற்சி" என்று மார்ஷ் குறிப்பிட்டார். போல் மார்ஷ் அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரொட்னி மார்ஷின் மகன் ஆவார். "இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு சிறந்ததல்ல. இது இந்த மூன்று நாடுகளையும் பலப்படுத்தவே உதவும். ஏனைய நாடுகள் வீழ்ச்சியை நோக்கியே செல்லும். எனவே ஏனைய 7 முன்னணி நாடுகளும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க நாம் அழைப்பு விடுக்கிறோம்" என்றும் மார்ஷ் குறிப்பிட்டார்.

எனினும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் சபை தற்போது பாரிய பங்களிப்பு செய்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையும் முக்கிய காரணமாகும். இதனால் ஐ. சி. சி. யின் சர்வதேச வருவாயில் இந்தியா 80 வீதப் பங்கை செலுத்துகிறது. இந்தப் பின்னணியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் இந்தியாவின் பக்கம் சார்ந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி