.

2011-11-18

  2012 இல் அனைவருக்கும் மின்சாரம்

2012 இல் அனைவருக்கும் மின்சாரம்

லங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை எட்டுவதில் மின்சக்தி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த காலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட எமது நாடு இன்று மின்சாரத்தில் தன்னிறைவு கண்டு வருகிறது. நாட்டு மக்களில் 84 வீதமானவர்களுக்கே மின்சார வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2012 ஜுலை மாதமாகும் போது அனைவருக்கும் 100 வீத மின்சார வசதி அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

2009 மே மாதத்தில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாட்டை முழுமையாக ஒலியூட்டி மற்றொரு மைல் கல்லை எட்டப் போகிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த 6 வருட ஆட்சிக் காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூரதிருஷ்டியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் நாடு மீண்டும் இருளில் மூழ்குவதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

900 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யக் கூடிய லக்விஜய அனல் மின் நிலையத்தின் முதலாம் கட்டம் கடந்த மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 300 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேல் கொத்மலைத் திட்டம் 92 வீதம் நிறைவடைந்துள்ளது. மின் உற்பத்தி இயந்திரங்கள் அடுத்த மாதம் பரீட்சார்த்தமாக இயக்க வைக்கப்படவுள்ளதோடு, 2012 ஜனவரி மாதத்தில் 150 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினூடாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகா வோர்ட் மின்சாரம் இணைக்கப்படவுள்ளதோடு, முதற் கட்ட பணிகள் நிறைவுசெய்யப்பட்டு 300 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 ஆம் 3 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2014 நடுப்பகுதியில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் 500 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பட்ட பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். 35 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யும் புரோட்லண்ட் மின் உற்பத்தி திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர கொரிய அரசின் நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டை பருதகந்த பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் 500 கிலோ வோர்ட் மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது. இதனூடாக 737 கிலோ வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று, எரிவாயு, கடல் நீர், சூரிய சக்தி, சிறிய நீர் மின் உற்பத்தி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் 40 வருடங்களில் எரிபொருள் வளம் முழுமையாக தீர்ந்துவிடும் அபாயம் உள்ளதால் மாற்று வழிகளினூடாக மின் உற்பத்தி செய்வது குறித்து மின்சார சபை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 2020 ஆம் ஆண்டாகும் போது மொத்த மின்சாரத் தேவையில் 20 வீதத்தை மாற்று வழிகளினூடாக பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் 737 கிலோ வோர்ட் மின் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி பூங்காவினூடாக வருடாந்தம் ஒரு கிலோ வோர்ட் மணித்தியால மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

2012 இல் அனைவருக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 131 கிராமிய மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு 735.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட 147 கிராமிய மின்சாரத் திட்டங்களினால் 29.902 குடும்பங்கள் இருளில் இருந்து வெளிச்சத்தை பெற்றன.

தற்பொழுது நாட்டில் 91 வீதமானவர்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாத முடிவில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 முடிவுக்குள் மேலும் 3 இலட்சம் பேருக்கு புதிதாக மின்சார வசதி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த வருட இறுதிக்குள் 94 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பினூடாக மின் வசதி அளிக்க முடியாத குடும்பங்களுக்கு மாற்று வழிகளினூடாக மின்சார வசதி அளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களுக்கு சூரிய சக்தியினூடாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக மின்சக்தி அமைச்சு கூறியது.

மின்சார இணைப்பு பெற முடியாது குப்பிலாம்பில் வெளிச்சம் பெறும் குடும்பங்கள் இதனூடாக நன்மை அடைய உள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 2924 குடும்பங்களும், தென் மாகாணத்தில் 760 குடும்பங்களும், வட மேல் மாகாணத்தில் 12,971 குடும்பங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7678 குடும்பங்களும் வட மத்திய மாகாணத்தில் 185 குடும்பங்களும், ஊவா மாகாணத்தில் 5259 குடும்பங்களும், வடக்கில் 3133 குடும்பங்களும், கிழக்கில் 4887 குடும்பங்களும் குப்பிலாம்பில் தங்கியுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு இவர்களின் வாழ்வில் ஒலி பரவுவது நிச்சயம்.

30 வருட யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டதோடு, இவர்கள் இருளிலே ணீzகியிருந்தனர். முதலில் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதையடுத்து அங்கு துரிதமாக மின்சார வசதிகள் வழங்கப்பட்டன. அங்கு புதிதாக 374 மின்சாரத் திட்டங்கள் 80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு உதயம் திட்டத்தின் கீழும் பல மின்சாரத் திட்டங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.

பல வருடங்கள் மின்சாரத்தை கண்டிராத வட பகுதி மக்களுக்கு படிப்படியாக மின்சார வசதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் யாழ். குடாவில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்ட போதும், தற்பொழுது அங்கு 24 மணி நேரமும் மின்சார வசதி அளிக்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு இரு தனியார் கம்பனிகளினூடாக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டு யாழ். மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சார வசதி வழங்கப்படுகிறது. வட பகுதி மக்களுக்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக மின்சார வசதி அளிப்பதற்காக வவுனியாவில் இருந்து சுன்னாகம் வரை உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிலுள்ள கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்படுகிறது. இது தவிர மேலும் பல மின்சார திட்டங்கள் வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது.

அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கை நெருங்கி வரும் நிலையில், மின் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவைகள் பல வழங்கப்படுகிறது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தவணை அடிப்படையில் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற வசதி அளிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கான சேவைகளை விரிவாக்குவதற்காக நாடுபூராவும் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதோடு, இதனூடாக சகல வித கொடுப்பனவுகள், புதிய மின் இணைப்பு, மின் துண்டிப்பு தொடர்பான முறைப்பாடு அடங்கலான சகல சேவைகளையும் பெற முடியும்.

இதேவேளை சூரிய சக்தியினூடாக வீடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்து மின்சார சபைக்கு விற்பனை செய்யக் கூடிய புதிய திட்டமொன்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. “நெட் மீட்டர்” எனும் இந்தத் திட்டத்தினூடாக மேலதிக மின்சாரத்தை விற்க பாவனையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலினூடாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்கவினூடாக முழு நாட்டையும் ஒலியூட்டும் பாரிய சவாலை வெற்றி கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. 2012 ஆம் ஆண்டில் நாடு ஒளிமயமாக மாறுவதில் எதுவித ஐயமுமில்லை.