.

2011-11-18

  ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கை: கனவு நனவாகும் காலம் தூரத்திலில்லை

ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கை: கனவு நனவாகும் காலம் தூரத்திலில்லை

அமைதியும் அபிவிருத்தியும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன

கடந்த 30 வருட காலம் நாட்டில் எந்தப் பகுதிக்கும் குறிப்பாக, வடக்கிற்கு சுதந்திரமாக மக்கள் சென்று திரும்பக் கூடிய நிலை இல்லாதிருந்தது. தற்போது நாட்டின் எந்தப் பகுதிக்கும் எவரும் அச்சமின்றி செல்லக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது நாட்டில் அமைதி ஏற்படுத்துவதாகவும் சகல இன, மத மக்களும் ஐக்கியமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தருவதாகவும் மக்களிடம் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் சகல துறைகளும் மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.

ணிசியாவின் ஆச்சர்யமிக்க நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் இலட்சியப் பயணத்தில் முக்கியமான திருப்பங்களை நாடு சந்திக்கும் காலகட்டம் இது.

யுத்தச் சூழ்நிலையால் முப்பது வருடங்கள் பின்னடைவைச் சந்தித்த நாடு தற்போது அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கல்வி, சுகாதாரம், விவசாயம், மின்சாரம், நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து அத்துறைமுகத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. அத்துடன் பொத்துவில், காங்கேசன்துறை உட்பட ஐந்து துறைமுகங்கள் சமகாலத்தில் நிர்மாணிக்கப்பட்டும் புனரமைக்கப்பட்டும் வருகின்றன.

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் நிறைவுற்று அந்நிலையத்திலிருந்து தேசிய மின் இணைப்புக்கு மின்சாரம் பெறப்பட்டு வருகிறது, மேல் கொத்மலை, கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையங்களும் இதுபோல் தேசிய மின் இணைப்புக்கு மின்சாரம் வழங்கி பங்களிப்புச் செய்கின்றன.

நாட்டின் பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. புதிய பாதைகள், மேம்பாலங்கள், பிரதான பாலங்கள் பலவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான நேரத்தை இது மிச்சப்படுத்துகின்றன. பிரதான நெடுஞ்சாலைகள், பிரதேச பாதைகள், கிராமிய வீதிகள் அனைத்தும் அனைத்துப் பிரதேசங்களிலும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அதிவேக நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதைகள், புதிய ரயில் நிலையங்கள், புதிய பஸ் நிலையங்கள் என பல்வேறு பிரதேசங்களிலும் போக்குவரத்துத் துறையில் முன்னேற்றகரமான கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

‘கமநெகும’ கிராமிய எழுச்சித் திட்டம், ‘மக நெகும’ வீதி அபிவிருத்தித் திட்டம், ‘திவி நெகும’ குடும்ப பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் என இத்திட்டங்கள் மூலம் ஆயிரக் கணக்கான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் விவசாய முயற்சிகளுக்கு வழங்கும் சலுகைகள், மானியங்களினால் நாட்டின் சகல விவசாயக் காணிகளிலும் பயமின்றி விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் யுத்தச் சூழலினால் விவசாயம் கைவிடப்பட்டிருந்த காணிகள் மீண்டும் விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் அரிசியில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது.

‘வடக்கின் வசந்தம்’, ‘கிழக்கின் உதயம்’ திட்டங்கள் யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு வழிவகுத்துள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான இயல்பு வாழ்க்கையை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டன.

யுத்தத்தினால் மூன்று இலட்சம் வடக்கு, கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 95 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர்.

எஞ்சியுள்ளவர்களையும் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுறும் பகுதிகளில் படிப்படியாக இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை அந்த மக்கள் எங்கும் சுதந்திரமாக அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான தொழில்களை தற்போது முன்னெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்துக்கு தெற்கிலிருந்து செல்லும் பொலனறுவை ஊடான நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக மன்னம்பிட்டி, ஓட்டமாவடி பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு அவ்வீதியின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு நிவர்த்தி காணப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் விவசாயத்தையும் கடற்றொழிலையும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கில் மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு அம்மக்கள் தமது பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் அவர்களுக்கு வழங்கியது. அதற்கிணங்க மக்கள் பிரதிநிதிகளுக்காக அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கில் மன்னம்பிட்டி, ஓட்டமாவடி பாலம் போன்றே அறுகம்பை பாலமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கக் கூடிய சுற்றுலாத் துறையை கிழக்கில் மீண்டும் கட்டியெழுப்பும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிணங்க பாசிக்குடா போன்ற சுற்றுலா பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மீள நிர்மாணிக்கப்படுவதுடன், உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் விதத்தில் அப்பகுதி புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கில் ‘ஏ 9’ வீதி புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக சுலபமானதும் மிகக் குறைந்த நேரத்தில் யாழ் செல்லக்கூடியதுமான புத்தளம் – யாழ்ப்பாணம் வீதி புனரமைப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு முன்னோடியாக கடந்த சில மாதங்களுக்கு முன் பூனகரி சங்குப்பிட்டிப் பாலம் புனரமைக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அப்பாலம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

‘ஏ 9’ வீதியூடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தூரத்தில் 120 கிலோ மீற்றர் குறைவானதாக இப்பாலத்தினூடான பயணம் அமையும்.

கொக்குவில் தொலைத் தொடர்பு கோபுரத்தின் மீள் நிர்மாணம் வடக்கின் அபிவிருத்தியில் மிக முக்கியமானதாகும். வடக்கு மக்களின் சர்வதேசத் தொடர்புகள் உட்பட ஒலி - ஒளி பரப்புத் தேவைகள் அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இது நிர்மாணிக்கப்பட்டது.

யுத்தத்திற்குப் பின்னரான வட மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. ‘வடக்கின் வசந்தம்’ எழுச்சித் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில் விசேட ஜனாதிபதி செயலணியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட காலம் நாட்டில் எந்தப் பகுதிக்கும் குறிப்பாக, வடக்கிற்கு சுதந்திரமாக மக்கள் சென்று திரும்பக் கூடிய நிலை இல்லாதிருந்தது. தற்போது நாட்டின் எந்தப் பகுதிக்கும் எவரும் அச்சமின்றி செல்லக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவசர காலச் சட்டமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது நாட்டில் அமைதி ஏற்படுத்துவதாகவும் சகல இன, மத மக்களும் ஐக்கியமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தருவதாகவும் மக்களிடம் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் சகல துறைகளும் மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகளை வாய்ப்பாக்கிக் கொண்டு, அதற்கான நிதியுதவிகளையும் பெற்று வருகிறார்.

நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கான பேச்சுக்கள் தற்போது பல மட்டங்களிலும் நடைபெறுகின்றன. ஐக்கியத்திலும் அமைதியிலும் நிலைத்து நிற்கும் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் கனவு நனவாகும் காலம் வெகுதூரத்திலில்லை. அதற்கு அனைத்து மக்களினதும் பங்களிப்பு அவசியம் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருக்கமான வேண்டுகோள்.