.

2011-11-18

  தமிழுக்கு முதலிடம் கொடுத்த நாயகன்

தமிழுக்கு முதலிடம் கொடுத்த நாயகன்

kக்களின் தாய் மொழி மூலம் பேசுவதனால் அவர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்துவிட முடியும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் நான் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு செல்லும் போது தமிழ் மொழியை மிகவும் அக்கறையோடு கற்றுக்கொண்டு தமிழில் பேசுவதற்கு முயற்சிகளை செய்கிறேன் என்று மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு தடவை என்னிடம் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் எங்காவது தமிழில் உரை நிகழ்த்த விரும்பினால், அதற்கு முதல் தினமே தமிழில் எதை பேச வேண்டும் என்பதை கற்றுக்கொண்டு, அந்த தமிழ் உரையை பேசிப்பார்த்து தன்னை தயார்படுத்திக்கொள்வார்.

ஓரிரு சந்தர்ப்பங்களில் நான் ஜனாதிபதி அவர்களை சந்தித்த போது, தமிழ் சொற்களின் சரியான உச்சரிப்பை நான் அவருக்கு தெரிவித்தும் இருக்கிறேன்.

ஜனாதிபதி அவர்கள் முதன் முதலில் 2002ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பொன்றை அளித்து, மேள, தாளங்களுடன் மாலை அணிவித்து ஜனாதிபதி அவர்களை சுமார் ஒரு கிலோமீற்றர் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று கெளரவித்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில்தான் முதல் தடவையாக ஜனாதிபதி அவர்கள் தமிழ் மொழியில் பேசினார்.

முதல் தடவையில் அவரால் சரியாக சொற்களை உச்சரித்து தமிழில் பேசுவது கடினமாக இருந்தாலும், சுய முயற்சியினால் இன்று ஜனாதிபதி அவர்கள் ஓரளவுக்கு பிழை இல்லாமல் தெளிவாக தமிழில் பேசக்கூடிய திறனைப் பெற்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி அவர்கள் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தென்னிலங்கையில் மண் வாசனை உடைய பாமரக் குடும்பத்தில் பிறந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு ஏழைப் பங்காளனாக தனது சமூக வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் அதே கொள்கையை அரசியல் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்.

இன்று ஜனாதிபதி என்ற உயர் பதவியை அவர் வகித்து வருகின்ற போதிலும், இந்நாட்டில் இன, மத, குல, பேதமின்றி அனைத்து மக்களையும் தன்னுடைய உடன்பிறவாத சகோதர, சகோதரிகளாக நடத்தி, அவர்கள் மீது அன்பு செலுத்தி வருகிறார்.

ஜனாதிபதி அவர்கள் சாதாரண ஆனால், ஒரு கெளரவமான தென்னிலங்கை குடும்பத்தில் பிறந்தமை காரணமாக, அவருக்கு ஏழைகளின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அவர் எதிர்க்கட்சி அங்கத்தவராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்றுமே ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற தன்னுடைய எண்ணத்தை மறந்துவிடவில்லை.

மக்கள் ஒரு பிரதேசத்தில் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை உணர்ந்தவுடன், அவர் அம்மக்கள் தன்னிடம் முறைப்பாடு செய்யாதிருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு கருணை உள்ளம் படைத்த நல்ல மனிதராக விளங்கினார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கம் மாவில்லாறு வான்கதவுகளை மூடி அப்பிரதேசத்து மக்களின் விவசாயத்தை நாசமாக்கி, அவர்களின் நாளாந்த வாழ்க்கையை சீர்குலைக்கிறார்கள் என்பதை உணர்ந்தவுடன், கருணை உள்ளம் படைத்த இந்த நல்ல மனிதர் தன்னுடைய பொறுமையை சிறிதளவு இழந்து எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி மாவில்லாறு வான்கதவுகளை திறந்துவிடுங்கள் என்று நம்நாட்டு ஆயுதப்படையினரிடம் உத்தரவிட்டார்.


கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல்

அதுமட்டுமல்ல, எல்லைப்புற கிராமங்களுக்கு ஊடுருவிச் சென்று சிறு குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களை எல்.ரி.ரி.ஈ. படுகொலை செய்யும் போது, அவ்விடங்களுக்குச் சென்று மக்களின் கண்ணீரைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போன ஜனாதிபதி அவர்கள், உங்கள் துயரத்தை துடைப்பதற்கு நான் இருக்கும் போது நீங்கள் கண் கலங்காதீர்கள் என்று உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியை ஜனாதிபதி அவர்கள் 2009ம் ஆண்டு மே 18ம் திகதி எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை துவம்சம் செய்ததன் மூலம் நிறைவேற்றினார்.

ஜனாதிபதி அவர்கள் எப்போதும் நான் ஒரு இலங்கைப் பிரஜை. நான் பிரதேசவாதத்தையோ, நாட்டை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என்று பிரித்துப்பார்ப்பதோ இல்லை. இந்த நாடு மக்கள் அனைவருக்கும் சரிசமமான உரிமையுடைய நாடாகும் என்று கூறுவார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் சீர்குலைந்து போயிருந்ததைப் பார்த்து, ஜனாதிபதி அவர்கள் தேசப்பற்று மிக்கவராக இருந்த காரணத்தினால் வேதனைப்பட்டார். அதனால், அவர் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக ஆரம்பித்து இன்று வடக்கு, கிழக்கில் உள்ள யுத்தத்தின் வேதனைக்குரிய வடுக்களை சுகப்படுத்தி வருகிறார்.

கடந்த ஈராண்டுகளாக தென்னிலங்கை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அபிவிருத்திக்காக செலவிடும் நிதியை விட பெருமளவு நிதியை ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் வடபகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தாராளமாக செலவு செய்கிறது.

நான் இந்த நாட்டு மக்களை தமிழர் என்றோ, முஸ்லிம் என்றோ, சிங்களவர் என்றோ பிரித்துப் பார்ப்பவன் அல்ல. இலங்கையில் இரண்டு இன மக்களே இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நாட்டுப்பற்றுள்ளவர்கள். மற்றவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் என்ற கருத்தை ஜனாதிபதி அவர்கள் சொல்லளவில் மாத்திரம் வைத்திருக்காமல், அதனை நெறியான முறையில் செயற்படுத்தும் நற்பண்பாளராகவும் விளங்கி வருகிறார்.

தமிழ் மொழி மீது ஜனாதிபதி அவர்கள் வைத்துள்ள பற்றை கூறுவதற்காக நான் ஒரு உதாரணத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று உலகில் 7 கோடியைத் தாண்டுமளவிற்கு தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில்இதுவரையில் எந்தவொரு தேசத் தலைவனும் தமிழில் உரை நிகழ்த்தவில்லை.

அந்த சாதனையை ஏற்படுத்திய ஒரு தேசத் தலைவராக மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி நன்றி செலுத்துவது எங்கள் கடமையாகும். அந்தளவிற்கு ஜனாதிபதி அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக இருக்கின்றார்.

ஜனாதிபதி அவர்கள் எப்போதும் என்னுடைய நெருங்கிய இரத்த உறவுகள், ஏன் முஸ்லிம் ஒருவரையும் மணம் முடித்திருக்கிறார் என்று கூறுமளவிற்கு மனப்பக்கும் உடையவராக விளங்குகிறார். மக்கள் மீது அசையாத நம்பிக்கை (ரிrதிருக்கும் ஜனாதிபதி அவர்கள், கடவுள் நம்பிக்கையும் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும், கண்டியில் மீரா மக்கா பள்ளிவாசலுக்கும்,

கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் சென்று பிரார்த்தனை நடத்தும் மனத்துணிவுடைய ஒரு நாட்டுத் தலைவராக விளங்குகிறார். ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கு முன்னர் கண்டி சிறி தலதா மாளிகைக்கும், அனுராதபுரம் சிறிமாபோதிக்கும் சென்று புத்தபெருமானின் புனித தந்தத்தையும் மாபோதியையும் தரிசிப்பதற்கும் தவறுவதே இல்லை. அந்நியர்களின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று இப்போது 63 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் அரசாங்கத் தலைவர்கள் பலரும் பிரதம மந்திரிகளாகவும், ஜனாதிபதிகளாவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே இன்று முழு உலகமே அங்கீகரிக்கக்கூடிய தேசத் தலைவராக இன்று புகழ் உச்சியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் சொல்வதையே செய்வார். செய்வதையே சொல்வார். இது அவருடைய நற்பண்புகளில் முதலிடத்தை வகிக்கும் சிறப்பம்சமாகும். ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வார். மக்களுக்கு செய்யும் சேவையில் எல்லாம் வல்ல இறைவனுக்கு செய்யும் ஒரு சேவை என்பதில் இந்த நல்ல மனிதர் நம்பிக்கை வைத்திருப்பதற்கு இந்தக் கூற்று சான்று பகர்கின்றது.