.

2011-11-18

  ஜனாதிபதி ஐந்து நிமிடங்களில் எதிரியையும் நண்பனாக்கி விடும் திறமை மிக்கவர்

ஜனாதிபதி ஐந்து நிமிடங்களில் எதிரியையும் நண்பனாக்கி விடும் திறமை மிக்கவர்

2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ந் திகதியன்று, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை இலங்கை இராணுவத்தின் தலைமையில் முப்படைகள் வெற்றிகரமாக முறியடித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்ற பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொண்டாடிய தனது, 64 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அவர்களின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பிறைம் ரீவி ஆங்கிலத் தொலைக்காட்சி சேவையின் திரு. தயாஅபேயசேகர என்ற சிரேஷ்ட ஊடகவியலாளரினால் பேட்டி காணப்பட்டார். அந்தப் பேட்டியை கேள்வி பதில் உருவில் கீழே தருகிறோம்.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் என்பதும், ஒரு தேசத்தலைவர் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் ஜனாதிபதி அவர்களின் செயலாளர் என்ற முறையில், இதைவிட பல விசயங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். அவைபற்றி உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை, இலங்கையின் ஜனாதிபதியாக அல்ல. நீங்கள் ஒரு மனிதனாக எப்படி பார்க்கிaர்கள்?

பதில்: திரு.லலித் வீரதுங்க.
ஆம், அவர் பொதுமக்களுடன் ஒரு சாதாரண கிராமத்து குடிமகனுடன், நண்பனுடன் அல்லது சமூகத்தில் உயர் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தருடன் பேசும் போது எப்போதும் மனிதாபிமானத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நல்ல பண்பாளர்.

இதனை ஓரிரு சொற்களில் விளக்கி கூறுவதாயின், இவர், மக்களை தன்பால் ஈர்ந்து எடுப்பதில் வல்லமை பெற்றிருக்கிறார். அதாவது, அவர், தன்னை சந்திப்பவர்களின் இதயத்தில் குடிபுகுந்து விடுவார். ஜனாதிபதி அவர்களை நன்கு தெரிந்தவர்கள் ஒரு விசயத்தை எனக்கு பல தடவைகள் கூறியிருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஐந்து நிமிடம் மாத்திரம் கொடுத்தால், அவர் தன்னுடைய எந்த எதிரியையும், தன்னுடைய உற்ற நண்பனாக மாற்றிவிடும் திறமை மிக்கவர் என்று கூறுவார்கள்.

இது அவருடன் உடன் பிறந்த ஒரு மகோன்னதமான திறமையாகும். பல்லாண்டு கால அனுபத்தின் மூலமும் மக்களைப் பற்றி கற்றறிவதன் மூலமும், அவர்களின் நடை, உடை, பாவனைகளை அவதானிப்பதன் மூலமும் தான் ஒருவர் இந்த திறமையை பெற முடியும்.

திரு. ராஜபக்ஷ அவர்களைப் போன்ற வேலைப்பளுமிக்க ஒரு தலைவருக்கு இந்த சாதனையை புரிவது அவ்வளவு இலகுவான செயலல்ல. ஆயினும், அவர் ஒரு மனிதனாக இதனை சரளமாக சாதித்து விடுகிறார். அவரிடம், பலதரப்பட்ட நற்பண்புகள் இருப்பதனால், அவரிடம் மக்கள் ஈர்ந்து இழுக்கப்படுகின்றனர்.

கேள்வி: அவருடைய தனித்துவமும், எடுப்பான தோற்றமும் இந்த வெற்றிக்கு அனுகூலமாக அமைந்திருக்கிறதா?

பதில்: நான் முகாமைத்துறையில் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்து, ஒருவர் அளிக்கும் தலைமைத்துவத்திலிருந்து அவரது தனித்துவத்தை எடை போடக்கூடிய ஓரளவு திறமை எனக்கு இருக்கிறது. ஒருவருடைய தனித்துவத்தில் அவருடைய தோற்றம், குணம், பாவம் ஆகிய பல அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.

இதில் மனிதாபிமானம் ஒருவரை புரிந்து கொள்ளும் திறமை, கருணை ஆகியனவும் ஒன்றிணைந்து இருக்கும். ஜனாதிபதி அவர்களைப் பற்றி சில முகாமைத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுத ஆரம்பித்து இருப்பதாக, நான் கேள்விப்பட்டேன். அந்த படைப்புக்கள் விரைவில் வெளிவரும் என்று நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த மனிதர் தனது வாழ்க்கையில் பல்வேறு திறன்களை ஒன்றிணைத்து கொண்டிருக்கிறார் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி: ஒரு நல்ல தலைவனாக உருவெடுப்பதற்கு, ஒரு நல்ல தோற்றமும், தலைமை தாங்குவதற்கான பண்புகளும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தன்னை பின்பற்றி வருபவர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் உற்சாகம் ஊட்டும் திறமை, இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திரு. மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த திறமைகள் இருக்கின்றனவா?

பதில்: இதற்கு நான் கல்வி அடிப்படையிலான ஒரு எண்ணக்கரு கட்டமைப்பு பற்றி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு உண்மையான தலைவரின் அதிமுக்கிய சிறப்பம்சங்கள் எவ்விதம் இருக்க வேண்டும் என்பது குறித்தே, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்கான தகவல்கள் ஊழியர்களின் மூலமே பெறப்பட்டது. ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சம் நம்பிக்கையாகும். நீங்கள் ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த தலைவர் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காதவராக இருப்பார். ஒருவர் நம்பக்கூடியவராக இருப்பது, நம்பிக்கையிலிருந்தே உருவாகிறது.

மஹிந்த ராஜபக்ஷவும் நம்பிக்கைக்குரிய ஒரு மனிதன். அவர் ஒரு வாக்குறுதி அளித்தால், அதனை நிச்சயம் நிறைவேற்றுவார், இதனால் என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அவர் துணிவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவார்.

கேள்வி: அந்த நம்பிக்கையை அவர் எவ்விதம் உருவாக்கிக் கொள்கிறார்?

பதில்: நேர்மை, கபடமற்ற நற்பண்பு ஆகிய அணிகலன்கள் மூலமே இவர் அந்த நம்பிக்கையை உருவாக்குகிறார். இவர் தன்னுடைய மறைந்திருக்கும் நற்பண்புகளை வெளிப்படுத்தும் குணமுடையவர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு நல்லவர் என்று, வெளியிலுள்ளவர்கள் நினைப்பது போலவே, அவர் தனது உண்மையான வாழ்க்கையிலும் நல்லவராக இருக்கிறார்.

இவர், உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுபவர் அல்லர். கோபமடையும் போது உண்மையிலேயே கோபமடைவார். தனிப்பட்ட விசயங்களுக்காக அவர் என்றுமே கோபப்படுவதில்லை. தான் நினைத்த மாதிரி ஒரு பணி நிறைவேற்றப்படவில்லை என்று தெரிந்து கொண்டால் அவர் கோபப்படுவார். என்றுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கோபப்படுவதில்லை. அவர், மற்றவர்களுடன் பழகும் போது, நடந்து கொள்ளும் விதத்தை நான் நன்கு அறிவேன்.

ஒரு வெளிநாட்டிற்கு ராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளும் போது, அவரது தனிப்பட்ட உதவியாளர் அவருக்கு சரியான காலணியை அல்லது அதுபோன்ற ஒரு விடயத்தை தயார்படுத்திக் கொடுக்க தவறிவிட்டால், அவர், உடனடியாக அந்த உதவியாளரை ஏசிவிடுவார். பின்னர், இவனை ஏசிவிட்டேனே என்று மனம் வருந்தி விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார்.

கேள்வி: இவரது கோபம் நீண்ட நேரம் நீடிக்குமா?

பதில்: இல்லை. சில வினாடிகளுக்கு மாத்திரம் தான் இருக்கும். அவர் எப்போதும் மற்றவர்களை சாதாரண நிலையில் பதற்றமடையாமல் இருக்கச் செய்வார். பின்னர், நான் ஏன் கோபப்பட்டேன் என்று, அவர் விளக்கிக் கூறுவார். இது ஒரு நல்ல தலைவனின் உன்னத குணாதிசயம் ஆகும்.

அவர், தனது உண்மையான தனித்துவத்தை தனது தோற்றத்தின் மூலம், பிரதிபலிக்கச் செய்கிறார். எனவே , அவரிடம் ஏச்சுப்பட்டாலும் ஒருவரும் அதனால் கோபித்துக் கொள்வதும் இல்லை. அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 5 நிமிடங்கள் மாத்திரம் கொடுங்கள், அவர் அந்த மனிதரை தன்னுடைய உற்ற நண்பனாக்கி விடுவார் என்று என்னிடம் ஒருவர் கூறினார்.

கேள்வி: இவர் ஒரு உணர்வு பூர்வமான மனிதரா? இவர் எவ்விதம் இந்த நாட்டின் உயர்பதவியான ஜனாதிபதிப் பதவிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிaர்கள்?

பதில்: ஒரு மனிதன் என்ற முறையில் அவர் மிகவும் உணர்வு பூர்வமானவர். பொதுமக்களைப் பொறுத்தமட்டில் அவர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்துவந்தார். மக்களுடன் அவருக்குள்ள இந்த நல்லுறவே அவரது வெற்றிக்கு அணிகலனாக விளங்குகிறது. அவருக்கு எந்த ஒருவரின் மனதிலும் குடிபுகுந்து நிலைத்திருக்கத் தெரியும்.

இப்போது அவர் தனது உணர்வுகளை ஒரு நிலைப்படுத்தக்கூடிய திறமை மிக்கவராக விளங்குகிறார். டனியல் கோல்மன் என்பவர் எழுதியிருக்கும் ஒரு புத்தகத்தில் உணர்வுபூர்வமான அறிவின் தன்மையை விளக்கிக் கூறியிருக்கிறார். எவ்விதம் உணர்வு பூர்வமான மதிநுட்பமுடைய தலைவரின் பண்புகள் இருக்க வேண்டும் என்று இவர் கூறியிருக்கிறார்.

இந்தத் தத்துவத்தை நன்கு உணர்ந்து அதனை ஒரு மாணவனாக நான் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். இந்த அனுபவத்தின் மூலம் உண்மையான வாழ்க்கையில் இத்தகைய நற்பண்புகளை உடையவர்கள் இருக்கின்றார்களா என்பதை நான் தேடிப்பார்த்தேன். இந்தத் தேடுதலில் நான் இந்த குணாதிசயங்களை உடைய இரண்டு பேரைச் சந்தித்திருக்கிறேன்.

அவர்களில் ஒருவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க. அவரின் மேலதிக செயலாளராகவும் பின்னர் பிரதம மந்திரியின் பதில் செயலாளராகவும் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தது.

பண்டாரநாயக்க அம்மையார் உணர்வு பூர்வமான மதிநுட்பமுடைய ஒரு தலைவர் ஆவார். அவரிடம் அதியுன்னத திறமைகள் இருந்தது. நான் இதே குணாதிசயங்களையும் திறமைகளையும் உடைய இன்னொரு தலைவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இலகுவில் இனம் கண்டு கொண்டேன். இவரும் உணர்வு பூர்வமான மதிநுட்பம் மிக்க ஒரு தலைவர். இவர் உணர்வுகளை வழிநடத்தும் ஒரு ஆசானாக இருக்கிறார்.

இன்னொருவருடைய உணர்வுகளை புரிந்துகொள்வதே இதில் முதலாவது சிறப்பம்சமாகும். - அடுத்தபடியாக சுய அறிவுறுத்தலை அடைய வேண்டும். அடுத்து நீங்கள் உங்கள் உணர்வுகளை சுயமுகாமைத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர் எந்த நோக்கத்துடன் செயற்படுகிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இறுதியாக மக்களை ஈர்த்தெடுக்கும் திறன் விளங்குகிறது. எனவே உணர்வு பூர்வ மதிநுட்பத்தில் 4 பிரதான அம்சங்கள் இருக்கின்றன. அவையனைத்தும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அளவுக்கதிகமாக இருக்கின்றது. அவருக்கு தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தான் ஆத்திரமடையும் போதும், தான் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது ஏற்படும் உணர்வுகளை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

இந்த உணர்வுகளை நல்லமுறையில் நிர்வகிக்கும் திறமையும் அவருக்கிருக்கிறது. இதுபற்றி நான் ஓரிரு உதாரணங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன். ஒரு இலக்கை அடைவதற்கு தேவையான ஒரு உந்து சக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு விளைவுகள் சாதகமாக வெளிவரும் போது அவரது உந்துசக்தி கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

நீங்கள் ஒரு திட்டத்தை நிறைவேற்றி முடித்தால் அவர் அதனுடன் திருப்தியடையமாட்டார். அவர் மேலும் இரண்டு திட்டங்களை நிறைவேற்ற விரும்புவார். இவ்விதமே அவர் எங்களை பின்னின்று ஊக்குவித்துக் கொண்டிருப்பதுடன் ஒரு வழிகாட்டியாகவும் இருப்பார். எவ்விதம் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் எங்களுக்கு பணிபுரைகளையும் விடுப்பார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ சர்வசக்தி வாய்ந்த ஒரு வல்லமை மிக்க மனிதர். அவர் உடல் ரீதியிலும் சக்தி வலுவுடையவராக இருக்கிறார். எங்கள் நாட்டின் தலைவர் ஒருவர் உடல் ரீதியில் வலுவுடையவராக இருப்பது இந்த நாட்டு மக்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும்.

கேள்வி: அவர் ஒருநாளை எவ்விதம் ஆரம்பிக்கிறார்.

பதில்: இவர் அதிகாலையிலேயே எழுந்து பத்திரிகைகளை வாசித்து நாளாந்த புதினத்தைத் தெரிந்து கொள்வார். அவர் மக்களிடம் எவ்விதம் தன் திறமையின் மூலம் நெருக்கமாகிறார் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். அதிகாலையிலேயே அவர் பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்.

பெரும்பாலும் ஒவ்வொருவரினதும் பிறந்த தினத்தன்று தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிக்க அவர் தவறுவதில்லை. இதன் மூலம் அவர் மக்களுடனான தனது நட்பை வலுவடையச் செய்து கொண்டுள்ளார். முன்னர் அவர் அதிகாலையிலேயே கொழும்பில் உள்ள குதிரைப் பந்தயத் திடலில் நீண்ட தூரம் நடந்து உடற்பயிற்சி செய்து கொள்வார். ஆனால், இன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் தனது இல்லத்திலேயே உடற்பயிற்சிகளை செய்து

கொள்கிறார். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இந்தப் பெருந்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் காரணமாக தனது தனிப்பட்ட சுதந்திரத்தை இப்போது இழந்துவிட்டார். முன்னர்பொது இடங்களில் உடற்பயிற்சி செய்து சுதந்திரமாக தனது நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று சூழ்நிலையின் கைதியாகி விட்டார். இந்த உண்மையை என்னைவிட இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோரும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

திடீரென்று ஒரு வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிறுத்தப்பட்டவுடன் அதிலிருந்து இறங்கி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னறிவித்தல் எதுவும் கொடுக்காமல் அந்த வீட்டுக்குள் சென்றுவிடுவார். இவ்விதம் அவர் தன்னுடைய பழைய நண்பர்களை என்றுமே மறந்துவிடுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் எங்களுக்கு வெளியில் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்த இந்த மனிதர் அந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டார் என்று நினைத்து நான் கவலைப்படுவதும் உண்டு.

இவருக்கு தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை இருக்கிறது. இவரிடம் மக்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கும் திறமை இருக்கிறது. தன்னிடம் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை அவர் சரியாகப் புரிந்துகொள்வார். அதற்குக் காரணம் அவர் மற்றவர்கள் கூறுவதை அவதானமாக செவிமடுப்பதே ஆகும். நான் பல தலைவர்களுக்குக் கீழ் பணிபுரிந்திருக்கிறேன்.

ஆனால் அதிகாரிகள் கூறுவதை அவதானமாக செவிமடுக்கும் ஒரு தலைவரை நான் இதுவரை பார்க்கவில்லை. பிரச்சினையை விரைவில் புரிந்து கொண்டு காலதாமதமின்றி அதற்குத் தீர்வை பெற்றுக் கொடுக்கும் திறமை இவருக்கு இருக்கிறது. உயர் பதவி வகிக்கும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காவிட்டால், அவருக்கு பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்.

ஒருவர் ஒரு விடயத்தை அவரிடம் எடுத்துரைத்தால் விரைவில் அதற்குச் செவிமடுத்து சரி நான் விசயத்தைப் புரிந்து கொண்டேன் என்று கூறுவார். அதனால்தான் மக்கள் அவரிடம் நேரடியாக பேச விரும்புகிறார்கள். இதனால் தான் கிராமத்துக்குப் போகும் போது அவரை மக்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். இப்படியான நிகழ்வுகளை பல அவதானித்திருக்கும் நான் அவருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அன்புப் பாலத்தை பார்த்துஆச்சரியமும் அடைந்திருக்கிறேன்.

கேள்வி: நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஒரு தைரியம் மிக்க மனிதனாகப் பார்க்கிறேன். பயங்கரவாத யுத்தத்தில் வெற்றியீட்டிய பின்னர் பலரும் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை எடுத்துச் சொல்வது பற்றி பகிரங்கமாகப் பேசிக்கொண்டிருந்த போது ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பரவாயில்லை நான் நாட்டுக்காக எனது வாழ்க்கையைத் தியாகம் செய்யக்கூடத் தயாரா இருக்கிறேன் என்று கூறினார். இதைவிட ஒருவர் எவ்விதம் நாட்டுப்பற்று உடையவராக இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிaர்கள்?

பதில்: இதுவே ஒரு நல்ல தலைவனின் உண்மையான நற்பண்பாகும். ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பொறுப்புக்களை ஏற்கத் தயாராக இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் போது அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குத் தயங்குவதில்லை. தன்னை எவராவது பாராட்டும் போது இந்தச் சாதனையை நான் மாத்திரம் செய்யவில்லை.

எல்லோரும் கூடித்தான் இந்தச் சாதனையை ஏற்படுத்தினோம் என்பார். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு நான் வெறுமனே தலைமைத்துவத்தைத்தான் கொடுத்தேன் என்று சொல்வார். ஒரு முயற்சி தோல்வியடையும் போது அவர் எப்போதும் அதற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வார். அதற்காகத்தான் அவர் உண்மையிலேயே நான் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய நீதிமன்றத்தின் முன்னால் செல்லவும் தயாராக இருக்கிறேன்.

யுத்தத்தின் போது ஆயுதப்படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துவிடாதீர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். அவர்கள் தங்கள் கடமையையே செய்தார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். நான் தான் இந்த யுத்தத்துக்கு தலைமைத்துவத்தைக் கொடுத்தேன்.

ஆகவே நீதிமன்றத்திற்கு முகம் கொடுக்க நான் தயாரா இருக்கிறேன் என்று கூறினார். ஒரு மனோதிடம் கொண்ட தலைவரினால் தான் இவ்விதம் பேச முடியும். அவரிடம் மனோதிடம் அதிகளவில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெரிய மனிதருக்கு செயலாளராக இருப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை எனது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாக நான் நினைக்கிறேன். இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்கள் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.