.

2011-11-18

  இருண்ட யுகத்தில் வாழ்ந்த இளைஞர்களுக்கு ஜனாதிபதியின் செயற்பாட்டினால் விமோசனம்

இருண்ட யுகத்தில் வாழ்ந்த இளைஞர்களுக்கு ஜனாதிபதியின் செயற்பாட்டினால் விமோசனம்

30 வருடங்களாகப் புரையோடிப் போயிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதில் பல சாவல்களையும் அரசாங்கம் எதிர்கொண்டே உள்ளது. குறிப்பாக மனிதாபிமான நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கானவர்களை மீள்குடியேற்றுவது மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பது என்பன முக்கியமானவை.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கை நோக்கி முன்னேறிவரும் இலங்கை இந்த இரண்டு சவால்களிலும் வெற்றிகண்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் 99 வீதமானவர்கள் தமது இடங்களில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் அதேவேளை, பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீளிணைக்கப்பட்டவர்களில் பலர் சுயதொழில்களில் ஈடுபடுவதுடன், பலர் இடைநிறுத்திய கல்வியைத் தொடர்கின்றனர், பலர் திருமணம் புரிந்து புதிய வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இது இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளை குழப்புவதற்கு சர்வதேச ரீதியில் சில சக்திகள் முயற்சிக்கின்றபோதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது இலக்கில் குறியாக செயற்பட்டுவரும் இலங்கை அரசாங்கம், கடந்த இரண்டரைவருடகாலப் பகுதிக்குள்ளேயே முன்னாள் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைத்துள்ளது. இது ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்

குறுகிய காலத்துக்குள் ஆயிரக்கணக்கானவர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்துள்ள நாடு என்ற பெருமையும் இலங்கைக்கே கிடைத்துள்ளது.

ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு ஆகியோரின் கண்காணிப்பில் இந்த புனர்வாழ்வுப் பணிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வன்னியில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின்போது 11 ஆயிரத்து 446 முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் 30 கட்டங்களாக விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு.

சமூகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள இவர்கள் பொருளாதார ரீதியில் தம்மை வலுப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளும், தொழிற்பயிற்சிகளையும் இவர்கள் முறையாகப் பெற்றிருப்பதுடன், மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளால் ஈர்க்கப்படாதளவுக்கு மனவலிமையையும் பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் சரி, புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களும் சரி முன்னாள் புலி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வைத்து நோக்கப்படவில்லை. மீண்டும் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டிய இளம் தலைமுறையினர் என்ற ரீதியில் மனிதாபிமான அடிப்படையிலேயே அவர்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுடைய புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஜனாதிபதி அவர்களும், அவர் தலைமையிலான அரசாங்கமும் கூடுதல் அக்கறையுடன் உள்ளது.

பயிற்சிகள், புனர்வாழ்வு நடவடிக்கை

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு விதமான புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்று தொழிற் பயிற்சிகளை வழங்குவது மற்றையது கல்வியின் ஊடான புனர்வாழ்வு. அனைவருக்கும் கல்வி என்ற மஹிந்த சிந்தனைக்கு அமைய முன்னாள் சிறுவர் போராளிகளுக்கும் சமகல்வி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் 273 பேர் பாடசாலை செல்கின்றனர். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உதவியுடன் இவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்விகற்று வருகின்றனர்.

அது மாத்திரமன்றி புனர்வாழ்வு முகாமிலிருந்து நூற்றுக் கணக்கானவர்கள் க.பொ.த. உயர்தர மற்றும் க.பொ.த. சாதாரணதர பரீட்சைகளுக்குத் தோற்றி அதில் பலர் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.

பரீட்சைகளில் தோற்றுபவர்களுக்கு பல்வேறு விசேட வகுப்புக்களும் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி அதில் தேறியவர்கள் பலர் விடுவிக்கப்பட்டு தமது கல்வியைத் தொடர்கின்றனர்.

ஏனையவர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தச்சுத் தொழில், வயரிங், மேசன் தொழில், வாகனங்கள் பழுதுபார்த்தல், தையல், அழகுக்கலை, உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் தமது சிந்தனைகளை வேறுவழியில் சிதறவிடாது தம்மைப் பொருளாதார ரீதியில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான பயிற்சிகள் யாவும் அவர்களுக்குப் புனர்வாழ்வு நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தொழில் வாய்ப்புக்கள் இல்லையென்ற சந்தர்ப்பத்திலேயே அவர்கள் மீண்டும் வழிதவறிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். எனவே, இவற்றைத் தவிர்ப்பதற்காகவே இவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குவதில் தாம் கூடுதல் அக்கறை காட்டுவதாகச் சொல்கிறார் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு.

தொழிற்பயிற்சிகளின் போது துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் விசேட செயலமர்வுகள் என்பனவும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேநேரம் இந்துமதப் பெரியவர்கள் மற்றும் ராஜயோகம் போன்ற அமைப்புக்கள் ஊடாகத் தியான வகுப்புக்களும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான மனோதைரியத்தை இதன் ஊடாகக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழிதவறிச் சென்று விடக்கூடாது என்பதில் ஜனாதிபதி அவர்களும், இலங்கை அரசாங்கமும் உறுதியாக இருப்பதால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மனிதநேய ரீதியில் அணுகி அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மனிதநேயம் கொண்ட அதிகாரிகள்

புனர்வாழ்வு நிலையங்களை நிர்வகிப்பது இராணுவ சீருடையிலுள்ளவர்களாயிருந்தாலும் அவர்கள் மிகவும் மனித நேயத்துடனேயே செயற்படுவதாகக் கூறுகிறார் புனர்வாழ்வு ஆணையாளர். புனர்வாழ்வு பெறுபவர்கள் ஒருபோதும் கடுமையாகவோ அல்லது இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் போன்றோ நடத்தப்படுவதில்லை. மீண்டும் தவறான வழிக்கு அவர்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் மிகவும் மனித நேயத்துடனும், நட்புடனும் அவர்களுடன் பழகி வருவதாக மேஜர் ஜெனரல் சுட்டிக்காட்டுகிறார்.

ஆசிரியர் பயிற்சிகளைப் பெற்ற தேசிய கடேட் பிரிவைச் சேர்ந்தவர்கள் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வாறு ஆட்களைக் கையாளவேண்டும் என்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதுமாத்திரமன்றி புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள அதிகாரிகளை அங்குள்ள பயனாளிகள் பலர் “அப்பா” “அம்மா” “அண்ணா”, “அக்கா” என்று குடும்ப உறவுகளைக் கூறி அழைக்கும் சகஜநிலையொன்றும் காணப்படுகிறது.

தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற உணர்வுகள் ஏற்படாத வகையில் புனர்வாழ்வளிக்கும் அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் இடையில் சகோதரத்துவமான போட்டிகள், விளையாட்டுக்கள் என்பன நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பயனாளிகளை அவர்களுடைய பெற்றோர் புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கிடையில் உறவுப் பாலம்

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பேணுவதன் ஊடாக நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சமாதானத்தை மேலும் நிலைநாட்ட முடியும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கொள்கைத் திட்டத்துக்கு அமைய, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு ஏனைய இனங்களுடன் உறவுப்பாலத்தை ஏற்படுத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன வேற்றுமைகளைக் களையும் நோக்கில் தென் பகுதிக்கான சுற்றுலாக்களும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் என பல்வேறு இடங்களுக்கு பயனாளிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுடன் பழகுவதற்கான அரிய சந்தர்ப்பமும் அவர்களுக்கு அங்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் இவர்களுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டதுடன், இளைஞர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட இவர்களுக்குத் தற்போது தென்பகுதியிலும் நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்ளைத் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதை இந்த நடவடிக்கை பறைசாற்றுகிறது.

விசேட திறமைகள்

தமது விருப்பத்துக்கு மாறாக பயங்கரவாத செய்பாடுகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகள் பல்வேறு விசேட திறமைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளனர். இவர்களின் இந்தத் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் புனர்வாழ்வு நடவடிக்கை களம் அமைத்துக்கொடுத்துள்ளது.

தென்பகுதிக்கு வருகைதந்தபோது நடத்தப்பட்ட கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் பலர் திறமையாக விளையாடியமை இனம் காணப்பட்டுள்ளது. மாத்தறையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளைஞர்களைப் பார்த்த கிரிக்கட் நட்சத்திரம் சனத் ஜெயசூரிய வெகுவாகப் பாராட்டியதுடன், தேசிய அணியில் பங்கெடுக்கக் கூடிய அளவுக்கு சிறந்த திறமைகளைக் கொண்டவர்களும் இருப்பதாகப் பாராட்டினார் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். அது மாத்திரமன்றி புனர்வாழ்வளிக்கப் பட்டவர்களில் பலர் நல்ல பாடும் திறமைகளைக் கொண்டிருப்பதுடன், இசைக் கருவிகளை இசைக்கும் திறனையும் கொண்டுள்ளனர். இவர்களைக் கொண்டு இசைக் குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திறமைகொண்ட இளைஞர் யுவதிகளின் திறமையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் வவுனியாவிலுள்ள இரு புனர்வாழ்வு நிலையங்களை நிரந்தரமாகப் பேணுவதற்குத் தாம் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

இவ்வாறு பல்வேறு திறமைகளைக் கொண்ட இவர்கள் மீண்டும் வழிமாறிப் பயணிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை

தமக்கு இருப்பதாகக் கூறுகிறார் அமைச்சர். புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் தமது வாழ்க்கையைத் திறம்பட கொண்டு செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு இலகு கடன்கள் வழங்கப்படுகிறது. அத்துடன், வங்கிகளில் குறைந்த வட்டியிலான கடன் உதவிகளும் ஏற்பாடு செய்துகொடுக்கப் பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைவரையும் மனிதாபிமான முறையில் நடத்திவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் புலி உறுப்பினர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டு, துரித கதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார். இதனாலேயே புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரம், எஞ்சியவர்களையும் இவ்வருட இறுதிக்குள் சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கடுமையான உத்தரவையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் அவர்களின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கும் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.