.

2011-11-18

  ஆரோக்கிய சமூகத்தை உருவாக்க நவீன வசதிகளுடன் அரச சுகாதார சேவை

ஆரோக்கிய சமூகத்தை உருவாக்க நவீன வசதிகளுடன் அரச சுகாதார சேவை

,லங்கை சுதந்திரமடைந்து இற்றைக்கு ஆறு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. இந்தக் காலப் பகுதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளும், பல பிரதமர்களும் இந்நாட்டை ஆட்சி செய்திருக்கின்றார்கள்.

என்றாலும் தற்போது இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலம் தான் இந்நாட்டுக்கு ஒரு பொற்காலமாக விளங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றது முதல் நாட்டின் சகல துறைகளிலும் அபிவிருத்தியும் மேம்பாடும் சுபீட்சமும் ஏற்பட்டு வருகின்றது. அவை துரிதமாகவும், வேகமாகவும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றை நேரடியாகவே அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுவரும் மேம்பாடு, சுபீட்சம் மறுமலர்ச்சி என்பன குறித்து கவனம் செலுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஹம்பாந்தோட்டை¨ய் சேர்ந்தவர். அரசியலில் அடிமட்டத்திலிருந்து நாட்டின் தலைவர் (ஜனாதிபதி) பதவி வரை உயர்ந்திருப்பவர். இந்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர்.

இதன் பயனாக இந்நாட்டில் வாழுகின்ற சகல மக்களினதும் உணர்வுகளையும், தேவைகளை நன்கறிந்தவராக அவர் விளங்குகின்றார். அதனால் தான் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மேம்படுத்துவதை நோக்கமாகவும், இலக்காகவும் கொண்டு அவர் செயற்படுகின்றார்.

இதுவே இந்நாட்டுக்கும், இந்நாட்டு மக்களுக்கும் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய பாதை என்பதிலும் அவர் தெளிவாக உள்ளார்.

இதன் காரணத்தினால் தான் ‘வளமான ஆரோக்கியம் மிக்க சமுதாயம்’ என்ற தொனிப் பொருளில் சகல வேலைத் திட்டங்களையும் அவர் மேற்கொள்ளுகின்றார்.

இந்த அடிப்படையில் தான் இந்நாட்டின் சுகாதார துறைக்குப் பொறுப்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை அவர் நியமித்துள்ளனர். இலங்கை நீண்டகாலமாக இலவச சுகாதார சேவை வழங்கும் ஒரு நாடாகத் திகழுகின்றது.

அதுவும் பிறந்தது முதல் மரணிக்கும் வரையும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் சகல சுகாதார சேவையும் இவ்வாறு வழங்கப்படுகின்றது. அதனால் சுமார் இருபது மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டின் சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பது மிக மிக அவசியம். அதுவே இச்சேவை, மேலும் மேம்படவும், நீடித்து நிலைப்பதற்கும் அடித்தளமாக இருக்கும்.

இந்தவகையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத்துறைக்குப் பொறுப்பாக அ¨மைச்சர் மைத்திரிபால சிறிசேனவை நியமித்திருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்துறையை மேம்படுத்தவும், விஸ்தரிக்கவுமென அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இதன் விளைவாக இந்நாட்டு சுகாதாரத் துறை அபரிமித வளர்ச்சியையும், மேம்பாட்டையும் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இது மிகத் தெளிவான விடயம்.

நிதியொதுக்கீடு

அன்று ஐக்கிய தேசிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் (2002-2004) அரசாங்க சுகாதாரத் துறைக்கென வருடத்திற்கு 39 ஆயிரம் மில்லியன் ரூபாதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மருந்து பொருள் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டதோ 6500 மில்லியன் ரூபா மாத்திரமே.

இதன் காரணத்தினால் அப்பாவி நோயாளர்கள் அன்று அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாது பலவிதமான அசெளகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுத்தார்கள். எல்லா ஆஸ்பத்திரிகளிலுமே மருந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது.

ஆனால் இந்நாட்டின் ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதும் அரசாங்க சுகாதாரத் துறைக்கான நிதியொதுக்கீட்டை முதல் வருடத்திலேயே இரு மடங்காக அதிகரித்தார்.

ஆனபோதிலும் இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு வருடா வருடம் அதிகரிக்கப்படுகின்றது. இந்தடிப்படையில் இத்துறைக்கு இவ்வருடம் 90 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா மருந்து பொருள் கொள்வனவுக்காக மாத்திரம் செலவிடப்பட்டுள்ளன.

இருப்பினும் இத்துறைக்கு 2012ம் வருடத்திற்கு 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்திருக்கின்றார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சுகாதாரத்துறைக்கான நிதியொதுக்கீட்டை ஒருபோதும் ஒரு செலவாகப் பார்ப்பதில்லை. மாறாக அதனை ஒரு முதலீடாகவே கருதுகின்றது.

ஆஸ்பத்திரிகளின் மேம்பாடு

இந்தடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிகாலத்தில் நாட்டிலுள்ள சகல பிரதான அரசாங்க ஆஸ்பத்திரிகளும் தனியார் ஆஸ்பத்திரிகளை விடவும் சிறந்த சேவை வழங்கும் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றின் சேவைகளும் மிகத் தரமானவையாக மாறியுள்ளன. இது அரசாங்க ஆஸ்பத்திரியில் வழங்கும் சேவையா என ஆச்சரியப்படுமளவுக்கு நிலமை காணப்படுகின்றது. இந்த ஆஸ்பத்திரிகள் இவ்வாறான வளர்ச்சியை அடைவதற்கு அவற்றில் காணப்பட்ட மருத்துவ உபகரண மற்றும் இயந்திரங்களின் பற்றாக்குறை நிவர்த்திக்கப்பட்டமையே பிரதான காரணம்.

இப்பாற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கான மில்லியன் ரூபாகளைச் செலவிட்டு வருகின்றது. குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளிலுள்ள ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் அதி நவீன மருத்துவ உபகரணங்களும்,

இயந்திரங்களும் இந்நாட்டின் பிரதான ஆஸ்பத்திரிகளுக்குப் பெருமளவில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மகரகம தேசிய புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு 1500 மில்லியன் ரூபா செலவில் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும்

அதிநவீன மருத்துவ உபகரணம் நல்ல உதாரணம். இந்த உபகரணத்தைப் பராமரிக்கவென மாத்திரம் அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் ரூபாவை செலவிடுகின்றது.

இதேபோல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, நுவரெலியா உள்ளிட்ட சகல மாவட்டங்களிலும் உள்ள பிரதான ஆஸ்பத்திரிகளுக்கும் நவீன மருத்துவ உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்கு ஒரு ஆஸ்பத்தியை சகல வசதிகளையும் கொண்ட ஆஸ்பத்திரியாக மேம்படுத்துவதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் சிலாபம், கந்தளாய், கம்பளை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், ஆகிய ஆஸ்பத்திரிகள் மத்திய அரசின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் வீதி உட்கட்டமைப்பு துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இதனால் வீதி விபத்துகளும் அதிகரித்துள்ளன.

இதன் காரணத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்குகின்ற விபத்து சிகிச்சை பிரிவை நாட்டின் பல பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் கராப்பிட்டிய மற்றும் குருநாகல் ஆஸ்பத்திரிகளில் விபத்து சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மட்டக்களப்பு, கேகாலை, இரத்தினபுரி, உள்ளிட்ட மேலும், சில ஆஸ்பத்திரிகளிலும் இப்பிரிவுகள் புதிதாக அமைக்கப்படுகின்றன. இதேவேளை, மத்திய அரசின் கீழுள்ள ஆஸ்பத்திரி மாகாண மட்ட ஆஸ்பத்திரி என்று பாராமல் எல்லா ஆஸ்பத்திரிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இத்திட்டத்தின் கீழ் தோட்ட ஆஸ்பத்திரிகளையும் பொறுப்பெடுத்து அவற்றை மேம்படுத்தவும், அவற்றின் ஊடாக அங்கு வாழுகின்ற மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அத்தோடு, சுமார் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரிகளும் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஊடாக அங்கு வாழும் மக்களுக்குச் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந் நடவடிக்கைகளின் பயனாக நாடெங்கிலுமுள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் சிறந்த ஆரோக்கிய சேவை வழங்கும் நிலையங்களாக மாறியுள்ளன. இது இந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மாபெரும் வரப்பிரசாதமாகும்.

இதேநேரம் பிரதான அரசாங்க ஆஸ்பத்திரிகளின் உட்புற மற்றும் வெளிப்புற சுற்றாடலும் அண்மைக் காலம் முதல் சுத்தமாகவும், அழகான முறையிலும் பேணப்படுகின்றன. அவை தனியார் ஆஸ்பத்திரிகளோ என எண்ணும் அளவுக்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தான் காசல்வீதி பெண்கள் ஆஸ்பத்திரி, அம்பாறை பொது வைத்தியசாலை போன்ற பல ஆஸ்பத்திரிகள் அழகுபடுத்தல் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச மட்ட விருதுகள் பலவற்றைப் பெற்று இருக்கின்றன.

மனித வளமேம்பாடு

இருந்த போதிலும் ஆஸ்பத்திரிகளின் பெளதீக வளங்களை மேம்படுத்துவதோடு மாத்திரம் அரசாங்கம் நின்றுவிடவில்லை. மாறாக ஆஸ்பத்திரிகளில் நிலவும் டொக்டர்கள் தாதியர்கள், மருந்தாளர்கள் உள்ளிட்ட சகலதுறை வெற்றிடங்களையும் நிரப்புவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மஹிந்த சிந்தனையின் கீழ் 15 ஆயிரம் பேர் தாதியர் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் தாதியர் சேவையிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கடந்த சில வருடங்களுக்குள் மாத்திரம் சுமார் ஐயாயிரம் டொக்டர்கள் அரச மருத்துவ சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அத்தோடு மருந்தாளர்கள், மருத்துவ மாதுகள், எக்ஸ்ரே படப்பிடிப்பாளர்கள், மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள், உள்ளிட்ட பல பதவிகளுக்கும் நூற்றுக் கணக்கானோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்பவென கல்வி பொதுத் தராதர உயர்தரத்தின் கலை பிரிவில் கல்வி கற்று சித்தி அடைந்தவர்களை சேர்த்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதற்கென விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அப்பிரதேசங்களில் க. பெ. த. உ/த விஞ்ஞான பிரிவில் கற்று சித்தியடைந்தவர்கள் குறைவாக இருப்பதே இதற்கான காரணம்.

அதேவேளை பிரதான ஆஸ்பத்திரிகளைப் போன்று கிராமிய மற்றும் சுற்றயற் கூற்று ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ பட்டதாரிகள் கடமையாற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவை இவ்வாறிருக்க, அரசாங்க ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை சேவை தினமும் காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் நடாத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சேவை ஏற்கனவே காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம்பெற்றது தெரிந்ததே.

மருந்து பொருட்களும், தடுப்பு மருந்து சேவையும்

இதேவேளை நாட்டு மக்களுக்கு தரமான மருந்து பொருட்களையும், தடுப்பு மருந்துகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தனியார் மருந்தகங்களில் தகுதியான மருந்தாளர் கடமையாற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தனியார் மருந்தகங்களின் தரமும், சேவையும், மருந்து பொருட்களைப் பராமரிக்கும் ஏற்பாடு குறித்துஅடிக்கடி கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கென சுகாதார அமைச்சில் விஷேட பிரிவொன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

இந் நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மீண்டும் மருந்துப் பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலை முறையை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருக்கிறது.

ஆனால் இம்முறைமை 2002ம் ஆண்டு வரையும் இந்நாட்டில் நடைமுறையில் இருந்தன. ஆயினும் அன்றைய ஐ.தே.க கட்சி ஆட்சியாளர்கள் தான் இம்முறைமையை நீக்கினார்கள் இதனால் அப்பாவி நோயாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இம்முறைமையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதானது ஏழை நோயாளர்களுக்கு பெரும் நிவாரணமாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.

இந்நாட்டில் நோய்களைக் கட்டுப்படுத்தவும், தவிர்க்கவுமென தேசிய நோய்த் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்திற்கென அரசாங்கம் வருடா வருடம் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுகிறது. இருந்தும் கூட கூகைக் கட்டு நோயை தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்து கடந்த ஒக்டோபர் மாதம் (2011) முதலாம் திகதி முதல் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் தேசிய மருந்தேற்றல் திட்டத்திற்கு வருடாந்தம் 200 மில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்க நேரிடும். ஆனாலும் நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது குறிப்பிடதக்க அம்சமாகும்.

இவ்வாறு சுகாதார சேவையை விரிவான அடிப்படையில் மேம்படுத்தவென துரித வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்களை இந்நாட்டு மக்களே அனுபவிக்கின்றனர். அதுவே ஜனாதிபதியின் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். அந்த வகையில் அரசாங்க சுகாதார துறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவிக் காலம் ஒரு பொற்காலம் என்றால் மிகையாகாது.