.

2011-11-18

  ஜனாதிபதியின் கரத்தை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்துவோம்!

ஜனாதிபதியின் கரத்தை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்துவோம்!

,ன்று இந்த நாட்டின் சமாதானம் இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, வாழ்வாதார பெருக்கம், பல்துறை சுபிட்சம் ஆகியவற்றுக்கு மூலகர்த்தாவாக இருந்து பாரபட்சமற்ற முறையில் நாம் அனைவரும் இலங்கையரே என்ற மகுடத்தின் கீழ் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆறாவது வருட பதவி நிறைவையொட்டி வாழ்த்துத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக இ. தொ. கா. பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டு மக்கள் செய்த தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கீழ் கூடிய பலன்களை அளித்துள்ளது. இதை இந்நாட்டு மக்கள் மாத்திரமல்ல உலக நாடுகளின் மக்களும் நன்கு அறிவார்கள்.

இன்று சிறுபான்மை மக்களான இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் சமூகத்தினரோடு இணைந்துள்ளார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய பாரபட்சமற்ற வல்லமையையும் பெற்றுள்ளார்கள். இன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து அனைத்து உரிமைகளையும் ஈட்டக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். பிரிந்த குடும்பங்களும் சிதைந்து போன உறவுகளும் மீள இணைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. கல்வியை இழந்து அவலங்களுக்குள் சிக்கித் தவித்த சிறுவர்களும் சிறுமிகளும் மீண்டும் கல்வியை கற்பதற்கும் கல்வியை தொடர்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மலையக மக்கள் வாழ்விலும் விமோசனம் கிட்டியுள்ளது. ஜனாதிபதி குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கும் மேம்பாட்டிற்கும் அரிய பல திட்டங்களை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் மலையக ஆசிரியர் நியமனம், மலையக இளைஞர்களுக்கு அரசாங்க நிரந்தர நியமனங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இதைத் தவிர மலையகத்தின் சகல விதமான அபிவிருத்தித் திட்டங்களும் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான சேவைகளுக்காக இத்தருணத்தில் ஜனாதிபதிக்கு மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் அவரின் கரத்தை பலப்படுத்தி எமது சமுதாயத்தை கட்டியெழுப்ப தொடர்ந்தும் பாடுபடுவோம் என்பதனை இத்தருணத்தில் தெரிவித்துக் கொண்டு, ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கும் அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.