.

2011-11-18

  மஹிந்த சிந்தனை எண்ணக்கருவின் கீழ் வளர்ச்சி கண்டு வரும் சுற்றுலாத்துறை

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவின் கீழ் வளர்ச்சி கண்டு வரும் சுற்றுலாத்துறை

ஹம்பாந்தோட்டை கடற்கரை கரப்பந்தாட்டத் திடல் ஜனாதிபதி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது....

தெஹீற்காசிய நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இலங்கையை குறிப்பிடலாம். இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்த போதிலும் ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை விட இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தோன்றியுள்ள உள்நாட்டு கலவரங்கள் மற்றும் வன்முறை காரணமாகவும் அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கையும், அங்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைவாகவே காணப்படுகிறது.

அபிவிருத்தி நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் மேற்படி நாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுவும் மேற்படி நாடுகளின் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் வருகையை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் இலங்கை போன்ற நாடுகளுக்கு தற்போது வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் என்றுமில்லாதவாறு வருடா வருடம் தொடர்ச்சியாக அதிகரித்த போக்கை புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணத்துறை மூலம் நாட்டின் தேசிய வருமானத்திற்கு அதிகளவு பங்களிப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டம் சிறந்த வெற்றியை அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ‘தற்போது வெளிநாடுகளில் தொழில் புரியும் சுமார் 16 லட்சம் ஊழியர்களை அடுத்து வரும் ஆண்டுகளில் 30 லட்சமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது’.

அது மாத்திரமின்றி இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதி, தேயிலை, றப்பர் ஏற்றுமதியும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது எனலாம். இலங்கையின் பொருளாதார துறையில் பல்லாண்டு காலமாக செல்வாக்கு செலுத்தி வந்த மேற்படி துறைகளைத் தவிர தற்போது உல்லாசப் பிரயாணத்துறை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்து வருகின்றது.

தற்போது மேற்கத்திய நாடுகளில் குளிர்காலம் தொடர்ந்து கொண்டிருப்பதனால், அங்கிருந்து வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இவ்வாண்டில் இலங்கைக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் உல்லாசப் பிரயாணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, ஜேர்மன், பிரிட்டன், அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருவோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இலங்கைக்கு வருகை தருவோரில் அநேகமானோர் இந்தியர்களாகும். குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வருவோர் எண்ணிக்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகம் என்றே கூற வேண்டும். அது மாத்திரமின்றி மலையாளிகளும், வட இந்தியர்களும் இலங்கைக்கு வருகை தருவதை பெரிதும் விரும்புகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட 30 வருட உள்நாட்டு யுத்தம் மற்றும் வன்முறை காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைவாகவே காணப்பட்டது. எனினும் 2009 மே மாதம் 18ம் திகதி இலங்கையில் ஏற்பட்டு வந்த உள்நாட்டு யுத்தத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுவே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கை வருகை தர பிரதான காரணம் எனலாம்.

ஒருவர் இந்தியாவில் இருந்து இங்கு வந்து இரண்டு இரவுகளும், மூன்று பகல் பொழுதையும் கழிப்பதற்கு சில உல்லாசப்பயண முகவர்கள் 13 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரையிலான சிக்கனக் கட்டணத்தையே அறவிடுகிறார்கள். அதுவும் இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கான விமானக் கட்டணம் 4,500 ரூபா வரையில் குறைக்கப்பட்டிருப்பதும் இதற்கான இன்னுமொரு காரணமாகும்.

தற்போது கொழும்புக்கும் தூத்துக் குடிக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் வழிவகுத்துள்ளது. மிகக் குறைந்த கட்டணமான ரூபா 6100/= என்ற கட்டணத்தில் இலங்கைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.

இங்கு வரும் உல்லாசப் பயணிகள் கொழும்பு மாநகரம், கண்டி மற்றும் அநுராதபுரத்திலுள்ள இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களையும், பெளத்த நாகரீகத்தையும் கண்டு களிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது மாத்திரமின்றி தமிழர்கள் சிவனொளி பாத மலை எனவும், இஸ்லாமியர்கள் ஆதமின் பாதம் எனவும், சிங்களவர்கள் புத்தரின் கால் பாதம் எனவும் கூறி மத்திய மலைநாட்டில் உள்ள நல்லத்தண்ணி சிவனொளிபாத மலைக்கு சென்று சூரிய உதயத்தை கண்டு கழிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஹம்பாந்தோட்டையில் கடற்கரை
கபடி போட்டி

அது மாத்திரமின்றி இந்தியர்கள் முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களுக்கும், கதிர்காமத்தில் வீற்றிருக்கும் கோவிலுக்கும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்வதிலும் இந்தியப் பயணிகள் விருப்பம் கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஏனைய நாடுகளை விட சிறந்த நட்பு நாடுகளாக காணப்படுகின்றன. தெற்காசிய நாடுகளில் மிகவும் பலம் வாய்ந்த நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்தியாவுடனான நட்பு பாலத்தினால் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

இலங்கையில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவரும் வகையில் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதற்கு ஏற்புடைய வகையில் நவீன முறையிலான ‘ஹோட்டல்கள், விளையாட்டு மைதானங்கள், களியாட்ட நிலையங்கள், அதிவேக மார்க்கங்கள், உல்லாசப் பயண சலுகைகள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கில் குறிப்பிட்டுள்ளவாறு உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வகையில் 2016ம் ஆண்டு இலங்கைக்கு 25லட்சம் உல்லாசப் பயணிகளை இந்நாட்டுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறே முதலீட்டு சபையின் ஊடாக 50 ஆயிரம் ஹோட்டல் அறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் என்றும் மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ற வகையில் தற்போது நாட்டில் மேம்பாலங்களும், புதிய அதிவேக மார்க்கங்களும் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக கொட்டாவையில் இருந்து காலி வரையிலான 128 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாதை எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவும் உல்லாசப் பயணிகளின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் எனலாம்.

அவ்வாறே இலங்கையில் குறுந்தூர விமான சேவைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. சீ பிளேன் ஊடாக இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் களனி கங்கையில் இருந்து அனுராதபுரத்திற்கும், நுவரெலியாவில் இருந்து கொழும்புக்கும் சீ பிளேன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் பாரிய குளங்கள் இருக்கும் பிரதேசங்களுக்கும் இந்த சீ பிளேன் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறுகம்பேயில் இருந்தும் சீ பிளேன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளின் துரித அபிவிருத்தியாக அதிசொகுசு பஸ் சேவைகளையும், புதிய ரயில் சேவைகளையும், கடுகதி ரயில் சேவைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்காக மொபிட்டெல் தொலைபேசி அழைப்புள்ளவர்கள் எந்நேரமும் தங்கள் ஆசனப் பதிவை இலகுவாக மேற்கொள்வதற்கு இரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து துறையை மேம்படுத்தும் நோக்கில் தென்னிலங்கையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மத்தல விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இப்போது துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இலங்கையின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக விளங்கும்.

இத்தகைய அபிவிருத்தி திட்டங்களின் மூலம் அரசாங்கம் இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த மத்தல விமான நிலையத்தின் விமான நிலைய ஓடு பாதை நாலு கிலோமீற்றர் நீளமாக இருக்கும். அங்கு உலகிலுள்ள எந்தவொரு பெரிய விமானத்தையும் பாதுகாப்பாக இறக்குவதற்கான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

குளத்தில் தரையிறங்கும் சீபிளேன் மூலம்
சுற்றுலாப் பயணிகளின் நேரம் மீதமாகிறது

போக்குவரத்து துறைக்கு அடுத்த படியாக இலங்கைக்கு உல்லாசப் பிரயாணிகள் அதிகம் வருகை தருவதற்கான பிரதான துறையாக விளையாட்டுத்துறையை குறிப்பிடலாம். ஏனைய நாடுகளை விட இலங்கையின் காலநிலை எந்த நாட்டு வீரர்களுக்கும் ஏற்புடையதாக காணப்படுவதே இதற்கான பிரதான காரணமாகும்.

ஜனாதிபதி அவர்களின் பிறந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட பீச் வொலிபோல் (கடற்கரை கரப்பந்து) விளையாட்டுத்திடல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவரும் சிறந்த இடமாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற போட்டியில் அதிகளவான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

அலையாடல் என்றழைக்கப்படும் கடல் அலையில் சறுக்கி விளையாடும் சாகசப் போட்டி ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை அறுகம்பேயில் நடைபெற்றது. 19 நாடுகளைச் சேர்ந்த உலகில் தலைசிறந்த கடல் அலையில் சறுக்கி விளையாடும் 96 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இவர்களில் 60 அழகிய பெண்கள் போட்டியிட்டமை விசேட அம்சமாகும். இப் பெண்கள் உலகளவில் திறமைகளை வெளிக்காட்டிய சிறந்த போட்டியாளர்களாகும்.

இம்முறை அலையாடல் போட்டியில் ஆஜன்டீனா, பேரு, அமெரிக்கா, நியுசிலாந்து, தென்னாபிரிக்கா, ஜப்பான், ஸ்பெயின் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதற்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் சர்வதேச ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி ஒக்டோபர் மாதம் 27ம் திகதியிலிருந்து 29ம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிலையத்தில் நடைபெற்றது. சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற இரண்டு நிறுவனங்களான பீகோ சிறிலங்கா மற்றும் ஐக்கிய இராச்சிய மொன்ட்கோமரி கம்பனியும் இணைந்து ஏற்பாடு செய்தன.

இக்கண்காட்சியில் ஹோட்டல்களுக்கிடையிலான போட்டியும், தலைமை சமையற்காரர்களுக்கான பேஷன் போட்டியும், Art of Coffee ஆகிய போட்டிகள் நடைபெற்றன. சுமார் 125 கடைத் தொகுதிகள் கண்காட்சியில் பங்குபற்றின.

தெற்காசியாவில் பிரபல்யமான 16 ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கண்காட்சியில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஹோட்டலில் இருந்தும் 4 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களை மேற்பார்வை செய்வதற்காக 3 சர்வதேச நிபுணர்கள் நடுவர்களாக கடமையாற்றினர்.

இக்கண்காட்சியில் இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சந்தையாக இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருவதற்கான சிறந்த களமாக இலங்கையை குறிப்பிடலாம். ஏனைய அபிவிருத்தி நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் சகல வசதிகளும், அதற்கான வளங்களும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

பொதுவாக மேற்கு நாடுகளில் உல்லாசப் பயணத்திற்கு செல்பவர்கள் பிரயாணச் செலவிற்காக செலவிடும் பணத்தை விட இலங்கையில் அவர்கள் தங்கியிருந்து செலவிடும் பணம் மிகவும் குறைவு. அது மாத்திரமின்றி இலங்கையில் எந்த இடத்திற்கு சென்றாலும் பல்வேறு கலாசார, பாரம்பரிய இடங்களையும் கண்டுகளிக்கும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் பதவியை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த போக்கையே காட்டி வருகின்றது எனலாம்.

2005ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 549,310 ஆக காணப்பட்டது. இத்தொகையானது 2006ம் ஆண்டு 559,600 ஆகவும் 2010ம் ஆண்டு இத்தொகை 654,477ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 63,835 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இத் தொகையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 66.7 சதவீத வளர்ச்சியாகும். ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் கூறியது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 278,959 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் இது 40.4 சதவீத அதிகரிப்பு என்றும் தெரிவித்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 23,266 உல்லாசப் பிரயாணிகளும் ஜேர்மனியில் இருந்து 4,144 பேரும் ஐக்கிய இராஜ்யத்தில் இருந்து 9,038 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதம் மட்டும் தெற்காசிய நாடுகளில் இருந்து 14,705 பேர் இலங்கைக்கு வந்ததுடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையே அதிகமெனவும் சுற்றுலா ஊக்குவிப்பு சபை தெரிவித்தது. இதே வேளை பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நேரம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 46.2 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இவற்றில் ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து 9,518 பேரும், ஜேர்மனியில் இருந்து 5,543 பேரும், பிரான்ஸில் இருந்து 4,544 பேரும் ரஷ்யாவில் இருந்து 1,940 பேரும் இந்தியாவில் இருந்து 13,788 பேரும் வருகை தந்தனர்.

இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட் சத்து 50 ஆயிரமாக அதிகரிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒக்டோபர் மாதம் மாத்திரம் 69,563 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதே வேளை வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 2010ம் ஆண்டு மாத்திரம் 501 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வருமானம் பெற்றுள்ளதுடன் இத்தொகையை 2016ம் ஆண்டு 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக இலங்கை அரசின் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நெறியான தலைமைத்துவத்தின் கீழ் தற்போது நாடு பல்வகையிலும் அபிவிருத்தி அடைந்து செல்கின்றது. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் நகர, கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளும், திவிநெகும, புறநெகும போன்ற வேலைத்திட்டங்களும் சான்று பகர்கின்றன.