.

2011-11-18

  ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் பங்கரவாதத்தை முறியடிக்க வழிவகுத்தது

ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் பங்கரவாதத்தை முறியடிக்க வழிவகுத்தது

எமது நாட்டில் கடந்த 30 வருட காலமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் நாட்டினதும், மக்களினதும் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்பொழுது சுமார் இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ளன.

இந்நிலையில் மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கு, கிழக்கு பகுதியில் அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தற்பொழுது இந்தப் பிரதேசங்களில் வாழும் அப்பாவி மக்கள் சுதந்திர காற்றை பூரணமாக சுவாசித்து வருவதுடன், மீண்டும் தமது அன்றாட வாழ்க்கையை மிகவும் நிம்மதியாக கழிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சரியான தருணத்தில் மேற்கொண்ட தீர்மானமும், அரசியல் தலைமைத்துவமும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சரியான வழிகாட்டலுமே பிரதான காரணங் களாகும். புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து, அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை விடுவித்து இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் சாந்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகுக்கும் நோக்குடனே இந்த மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சுமார் 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பு அப்போது புலிகளின் பிடியில் இருந்தது. இவை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று அழைக்கப்பட்டன.

அந்தப் பிரதேசங்களில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்றங்களும், வங்கிகளும் செயற்பட்டு வந்தன. பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாவி பொது மக்களும், சிறுவர், சிறுமியரும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இளம் தற்கொலை குண்டுதாரிகளும் உருவாக்கப்பட்டிருந்தனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலகட்டத்திலும் இந்த அத்தனை நடவடிக்கைகளும் புலிகளால் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை மத்திய வங்கி, கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பிலுள்ள உலக வர்த்தக நிலையம் போன்ற இந்த நாட்டின் பொருளாதார, முக்கியத்துவம் வாய்ந்த பல கேந்திர நிலைகள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தினர்.

நாட்டின் அரசியல் தலைவர்கள், அரசியல் முக்கியஸ்தர்களை கொலை செய்ததன் மூலமும் கொலை செய்ய முயற்சித்ததன் மூலமும் புலிகளின் செயற்பாடுகள் மேலும் பலமடையத் தொடங்கின.

இந்நிலையில் எமது நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கவும் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறிய தலைவர்கள் விட்ட தவறுகளை தொடராமல் பயங்கரவாதத்திற்கு சரியான முறையில் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்.

“பிளவுபடாத ஒருநாடு” பெரும்பான்மையினரின் இணக்கப்பாடு, கெளரவமான சமாதானம் என்பவற்றை தனது இலக்காகக் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புலிகளுடன் பல கோணங்களில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதற்கான நடவடிக்கை களையும் பல மட்டத்தில் முன்னெடு த்தது. ஆனால் புலிகள் இதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்காததுடன், சில சந்தர்ப்பங்களில் புறக்கணித்தனர்.

பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜனாதிபதியும், அவரது தலைமையிலான அரசாங்கமும் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அணுகுமுறையின் அவசியத்தையும் புறக்கணிக்கவில்லை.

ஜனநாயக ரீதியான தீர்வுகளுடன் உடன்பாடு கொள்ளாத புலிகள் கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் தாய்மார்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் படுகொலை செய்தனர். அதற்குப் பின்னர் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த தண்ணீர் விநியோகத்தை வழங்க மறுத்து மாவிலாறு அணைக்கட்டை மூடி அப்பாவி பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர்.

இது போன்ற பயங்கரவாத செயல்கள், மக்களின் உரிமைகளை பறித்தெடுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதனால் கிழக்கு மாகாணத்தை புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பாதுகாப்புப் படையினரது பங்களிப்புட னான மனிதாபிமான நடவடிக்கை ஒன்று அவசியம் என்பதற்கு அமைய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

சம்பூர், வாகரை, தொப்பிகலை என்று படிப்படியாக வெற்றிகரமாக கைப்பற்றிய வண்ணம் முன்னேறிய பாதுகாப்புப்படை யினர் கிழக்கு மாகாணம் முழுவதையும் வெற்றிகரமாக விடுவித்தனர். இராணு வத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரம் ஆரம்பமான இந்த மனிதாபிமான நடவடிக்கை கடற்படை, விமானப்படை ஆகியவற்றினதும், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரி னதும் பூரண ஒத்துழைப்புடன் மேலும் முடுக்கி விடப்பட்டது. மாவிலாறு அணைக்கட்டை, புலிகள் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மூடியதை அடுத்து ஜுலை மாதம் 8 ஆம் திகதி இந்த அணைக்கட்டை திறப்பதற்கான மனிதாபிமான நடவடி க்கை ஆரம்பிக்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக முடிந்தது. இதன் மூலம் பெருமளவிலான மக்கள் பெரிதும் நன்மையடைந்தனர். மக்களின் நலன் கருதியே ஜனாதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தை யும், அங்குள்ள மக்களையும் பாது காப்பாக மீட்டெடுத்தது போன்று வடக் கையும் புலிகளிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது உணரப்பட்டது. இதற்கமைய வடபகுதிக்கான தரைமார்க்கமான இராணுவ நடவடிக்கை 2007 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னாரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கை அரசாங்கம் பொதுமக்களுக்காக அறிவித்திருந்த முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள வெள்ளை முள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் முடிவடைந்தது. மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டியதை உணர்ந்த அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் பொதுமக்க ளுக்கு உயிர் சேதங்கள் ஏற்படுவதை முழுமையாக தவிர்க்கும் விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், பாதுகாப்புச் செயலாளரும் இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை அவ்வப்போது உடனுக்குடன் வழங்கி வந்தமை விசேட அம்சமாகும்.

புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்று தேவைதான் என்று கூறிவந்த பல நாடுகள் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மக்களின் நலனை கருத்திற்கொண்டு பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்திய ஒரு சில தினங்களில், புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான மக்களை பாரிய உயிர் சேதங்கள் எதுவும் இன்றி பாதுகாப்பாக மீட்டெடுத்தமையை கண்டு உலக நாடுகள் பல வியப்படைந்ததுடன் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தன.

ஒரு சில நாடுகளைத் தவிர பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதி அவர்களின் சகல நடவடிக்கைகளுக்கும் உலகின் அனேகமான நாடுகள் பூரண அங்கீகாரத்தையும் ஒத்துழைப்புகளையும் வழங்கின. இது ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் ஜனாதிபதியின் துணிகரமான செயலை சகிக்க முடியாத சிலர் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், அதனை உலகின் பல நாடுகள் ஏற்க மறுத்ததுடன், இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், பிரேரணைகளுக்கும் எதிராக வாக்களித்தமை சர்வதேசம் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு வழங்கிய மற்றுமொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.

மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்ததுடன் மாத்திரம் தனது பணிகளை முடித்துவிடாமல், அந்த மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் ஜனாதிபதி அவ்வப்போது வழங்கி வருகின்றமை சிறந்த விடயமாகும்.

குறுகிய காலத்திற்குள் இலட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தியமை பாரிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுத்தமை போன்ற ஜனாதிபதி மக்கள் மேல் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக் காண்பிக்கின்றன. மனிதாபிமான நடவடிக்கையில் வெற்றியை கண்டது போன்று இந்த பாரிய சவாலிலும் ஜனாதிபதி வெகுவிரைவில் வெற்றியடைவார் என்பதே பலரது கருத்தாக அமைந்துள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள், தலைமைத்தவம் இந்த மக்களுக்கான வளமான வாழ்க்கையை வெகுவிரைவில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

o